"யார் என்ன ஜாதி என்றே தெரியாது"
முற்போக்கு இயக்கங்களிலும் முகமூடித்தனம்
- தமீம் தந்த்ரா
-
எங்கள் கட்சியில் யாருக்கு யார் என்ன ஜாதி என்றே தெரியாது, எங்கள் இயக்கத்தில் பிறரின் ஜாதியை கேட்டுக்கொள்வதில்லை, எங்கள் குழுவில் ஜாதி பார்க்கமாட்டோம் போன்ற வாதங்கள் தொடர்ந்து இங்கு முற்போக்கு என்று சொல்லி கொள்ளும் சிலரால் வைக்கப்படுகிறது. இது ஒரு தவறான வாதம் மட்டும் அல்ல மாறாக ஓர் கடைத்தெடுத்த அயோக்கியத்தனம். ஏனினில்
சாதி என்பது ஒரு மனநிலை அதை சோதிக்காமல் நீங்கள் சாதியற்றவர் என்று எவ்வாறு மார்தட்டிக்கொள்கிறீர்கள்?
என்னுடைய பல அனுபவங்களில் ஓர் அனுபவத்தை சொல்கிறேன்.
ஒருதடவை நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டு இருந்தபொழுது எனக்கு அருகில் இருந்தவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என் பெயரையும் கேட்டார். நான் தந்த்ரா என்றேன்.
என்னிடம் மிக நன்றாக பேசினார், போனில் இருக்கும் போட்டோக்களை வைத்து தன் குடும்பத்தை காண்பித்தார். பிறகு பேருந்து உணவிற்கு நிறுத்தும் போது என்னுடன் சேர்ந்து சாப்பிட்டார் என்னை பணம் தரவிடாமல் அவரே எனது பில்லுக்கும் பணம் கொடுத்தார். பிறகு அவர் புகைபிடித்துக்கொண்டு இருக்கும் தருவாயில் பேசிகொண்டுஇருக்கும் போது உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறது என்று அவர் சொல்ல, முழு பெயரும் இதுதானா என்று கேட்டார். நான் "தமீம் தந்த்ரா" என்றேன். "நீங்க முஸ்லிமா" என்றார்.. பிறகு பஸ்சில் ஏறினோம் அருகிலேயே உக்கார்ந்து கொண்டு தன் போனை நோண்டிக்கொண்டே இருந்தார் ஒரு வார்த்தை பேசவில்லை. நான் கேட்டதிற்கு மட்டும் வேண்டா வெறுப்பாக பேசிக்கொண்டு இருந்தார்.. சரி நம்முடன் பேச இவருக்கு விருப்பம் இல்லை என்று நானும் அமைதியாக இருந்துகொண்டேன். அதன் பிறகு ஒரு 4 மணி நேரம் பயணம், இருவரும் ஒருவார்த்தை பேசிக்கொள்ளவில்லை. எனக்கு முன்னாடி அவர் இறங்கினார்.. அவர் பாட்டுக்கு இறங்கிவிட்டார் எதுவும் சொல்லாமல்..
சரி இப்போ மேட்டர் என்னென்னா.. இவரை நான் எவ்வாறு இடை போடவேண்டும் ? இவர் நல்லவரா கெட்டவரா ? (நாயகன் மியூசிக்)...
தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொண்டு ஜாலியாக பேசி தனது குடும்பத்தையும் எனக்கு அறிமுகம் செய்துவிட்டு நான் சாப்பிட்ட உணவு பில்லுக்கும் பணம் கட்டிய அந்த மனதை நான் எவ்வாறு அணுக வேண்டும் ?
அடுத்து சில மணித்துளிகளில் நான் இன்னார் என்று தெரிந்தவுடன், என்னை ஒரு தீவிரவாதிபோல் பார்க்கும் இந்த மனதை நான் எவ்வாறு அணுக வேண்டும் ?
இதான் பிரச்சனை,இது முற்போக்கு என்று அரசியல் பேசும் பல மழுமட்டைகளுக்கு புரிந்தாலும் புரியாத நடிக்கிறது.
சமத்துவம் என்பது பிறர் என்ன சாதி/மதம்/இனம் என்று கண்டுகொள்ளாமல் ஒன்றாக பழகுவதினாலோ இணைவதினாலோ வருவது அல்ல அப்படி இருப்பது சமத்துவமும் அல்ல.
நான் யார் என்று நீ தெரிந்துகொள்ள விருப்பமில்லாமல் என்னுடன் சேர்ந்து பயணிப்பதினால் நீ ஒரு சமத்துவமானவனாகவோ அல்லது ஒரு பகுத்தறிவாளனாகவோ ஆகி விடமாட்டாய் மாறாக
நான் இன்னார் என்று தெரிந்து நீ எவ்வாறு என்னுடன் நடந்துகொள்கிறாய் என்பதே நீ யார் என்பதை தீர்மானிக்கும். ஏனினில் இங்கு நடக்கும் பல அநீதிகள் இன்னார் இன்னார்தான் என்று தெரிந்துகொண்டே பிறகே அவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
How you treat me after knowing me defines who you are.
Remember that.
முற்போக்கு சமத்துவம் பேசும் கட்சியிலோ இயக்கத்திலோ குழுவிலோ யார் யார் எவர் என்று தெரிந்துகொள்வது மிக மிக அவசியம். ஏனினில் அதுவே அந்த முற்போக்கையும் சமத்துவத்தையும் தீர்மானிக்கிறது.
அதை தவிர்த்துவிட்டு நாங்கள் எல்லாரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம், எங்களுக்கு வேறுபாடு கிடையாது, நாங்கெல்லாம் தோழர்கள், அவர்கள், இவர்கள் என்று சொல்வதெல்லாம் முழுக்க முழுக்க உண்மையை சந்திக்க மறுக்கும் கோழைத்தனமே, இன்னும் சொல்லப்போனால் முகமூடித்தனமே.
இந்த கோமாளித்தனத்திற்கும் ஜாதி செர்டிபிகேட் ஒழிச்சுட்டா ஜாதி ஒழிஞ்சுரும்னு சொல்றதுக்கும் என்ன வித்தியாசம் ? ஜாதி செர்டிபிகெட்ட ஒழிச்சுட்டு வாங்க எல்லாரும் ஒன்னா இருக்கலாம்னு சொன்னா.. அதை மட்டும் எதற்கு எதிர்க்கிறீர்கள் ? அப்போது மட்டும் எப்படி உங்கள் so called பகுத்தறிவு வேலை செய்கிறது ?
முழுக்க முழுக்க ஓர் சமநிலையற்ற சமுகத்தில் யார் யார் என்ன மதம்/சாதி என்று தெரிந்துகொள்வது மிக அவசியம் ஏனினில் அதுவே அங்கு (Representation) பிரதிநித்துவத்தை உறுதிசெய்யும்.
குறிப்பாக முற்போக்கு பேசும் கட்சியிலோ இயக்கத்திலோ குழுவிலோ (Representation) பிரதிநித்துவம் மிக மிக முக்கியம். பிரதிநித்துவத்தை தவிர்பதற்காகவே இந்த மாறி "எங்கள் கட்சியில் யாருக்கு யார் என்ன ஜாதி என்றே தெரியாது, எங்கள் இயக்கத்தில் பிறர் ஜாதியை கேட்டுக்கொள்வதில்லை, எங்கள் குழுவில் ஜாதி பார்க்கமாட்டோம்" போன்ற அயோக்கியத்தனமான வாதங்களை வைப்பார்கள்.
இதையெல்லாம் தாண்டி அப்படி சில பேரை வைத்து பிரதிநித்துவத்தை நீங்கள் கணக்கு காட்டினால் கூட அவர்கள் தன் பிரதிநித்துவத்தின் மூலம் தங்களின் அரசியல் பேசிக்கிறார்களா என்பதுதான் மிக மிக முக்கியம். இல்லாட்டி கூட்டத்தில் கோவிந்தாதான், அதெல்லாம் ஒருபோதும் எந்த கணக்கிலும் வராது.
ஏனினில்.. நம் கண்முன்னே நேரடியாக இதை பார்க்கிறோம்.. என்னை எடுத்துக்கொள்ளுங்கள்.. நான் மதத்தை மறுப்பவன் ஆனால் பொதுவெளியில் என் பெயர் எனக்கு இஸ்லாயமியன் என்ற அடையாளத்தை கொடுத்துவிடும். ஒரு பேச்சுக்கு நான் இஸ்லாமியன் என்றே வைத்துக்கொள்வோம்..
என்னால் நாளைக்கே பாஜகவில் இணையமுடியும். இன்னும் சொல்லப்போனால் என் பெயர் அங்கு எனக்கு பலமாகவும் இருக்கும், அதைவைத்தே எனக்கு பொறுப்பு கொடுத்தாலும் வியப்பில்லை. ஹட்ச்.ராஜா என்னை புகழலாம், ஏன் என்றால் அவர்களை பொறுத்தவரை நான் மிக அவசியமான ஒரு செட் property. நாளைக்கு அவர்கள் ஏதாவது முஸ்லிம்களுக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரும்போது நானும் வேலூர் இப்ராஹிமும் 'இது இஸ்லாமிய மக்களுக்கு நல்லது உண்மையான முஸ்லிம்கள் மோடியின் பக்கமே நிற்கிறார்கள்' என்று பேட்டி கொடுக்கலாம்.
பாஜகவும் "பார்த்தீர்களா ? நாங்களா இஸ்லாமியருக்கு எதிரானவர்கள் ? தமீமும் வேலூர் இப்ராஹிமும் எங்கள் கட்சியில் இல்லையா ? அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லையா ?" என்று பிட்டு போடலாம்.
இதற்கு சாத்தியம் இருக்கா இல்லையா ? இவ்வளவு ஏன் ? குடியரசு தலைவர் ஒரு தலித் தான். முன்னாள் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட பலரை பாஜக கணக்கு காட்ட முடியும். அப்போ பாஜகவும் பிரதிநித்துவத்தில் வந்துவிடுமா ?
அதுவும் இல்லை என்பதே பதில்.. திரும்பவும் லூப் போவோம்.
முற்போக்கு சமத்துவம் பேசும் கட்சியிலோ இயக்கத்திலோ குழுவிலோ வெளிப்படையான பிரதிநித்துவம் எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அவர்கள் அந்த பிரதிநித்துவத்தை வைத்து என்ன அரசியல் பேசுகிறார்கள் அல்லது பேச அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது.
திடீர்னு என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தோ எல்.முருகனோ தலித் அரசியல் பேசினால் அந்த பதவிலோ அந்த கட்சியிலோ இருக்க முடியுமா ? முடியவே முடியாது என்பதே நிதர்சனம். இது இங்கு இருக்கும் முற்போக்கு கட்சிகளுக்கும் இயக்கத்திற்கும் குழுக்களிற்கும் உண்டான நேரடியான கேள்வியும்தான் நிதர்சனமும்.
ஏனினில் நல்ல முஸ்லீம்.. கெட்ட முஸ்லீம்.. நல்ல தலித் கெட்ட தலித் என்ற பட்டமும் இதை வைத்தே கொடுக்கப்படுகிறது.
ஒரு தலித்/முஸ்லீம்/சிறுபான்மையினர்.. உங்கள் கட்சி/இயக்கம்/குழுவில் அவர்களின் அரசியலை முன்னெடுத்து வைக்காமல் so called பொது அல்லது அனைவருக்குமான அரசியல்தான் பேசவேண்டும் என்று நினைப்பதே ஒரு அடக்குமுறைதான்.
அப்படி அவருக்கு எதாவது கட்டாயம் இருப்பின் அல்லது அப்படி அவர் தன் அடையாளத்தை நேரடியாக சொல்லிட்டு தன் சமூகத்திற்கான அரசியலை உங்கள் கட்சி/இயக்கம்/குழு மூலியமாக பேசமுடியவில்லை என்றால், நீங்கள் நடத்துவது முற்போக்கு கட்சி/இயக்கம்/குழு அல்ல அது முகமூடி கட்சி/இயக்கம்/குழு தான்.
திருப்பவும் சொல்கிறேன்.. மற்றவர்கள் என்ன சாதி மதம் தெரிந்தால்/தெரிந்துகொண்டால்.. பிளவு/சமத்துவயின்மை ஏற்பட்டு விடும் என்று நீங்கள் அஞ்சினால் அல்லது அந்த எண்ணம் கூட இருந்தால் நீங்கள் நடத்துவது முகமூடி குழுதான்..
நீங்கள் முகமூடி குழுதான் என்று நேரடியாகவே சொல்லிவிடுங்கள்.
அதைவிட்டுட்டு கம்பி கட்டுர கதையெல்லாம் எதற்கு ? நேர விரயம் மட்டுமே.
நீங்கள் நடத்தும் குழுவில்/கட்சியில்/இயக்கத்தில்.. தலித்/இஸ்லாமியர்/LGBT என்று யார் இருந்தாலும் அவர்கள் தங்கள் அரசியலை பேசாமல் இருந்தால் பாஜகவில் இருக்கும் வேலூர் இப்ராஹிம் போல செட் property தான்.. அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
மீண்டும் லூப்..
முற்போக்கு சமத்துவம் பேசும் கட்சியிலோ இயக்கத்திலோ குழுவிலோ வெளிப்படையான பிரதிநித்துவம் மிக முக்கியம் அதை விட முக்கியம் அவர்கள் அந்த பிரதிநித்துவத்தைவைத்து என்ன அரசியல் பேசுகிறார்கள் அல்லது பேச அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது.
இதை தவிர்த்து விட்டு பேசும் அனைத்து வாதங்களும் "நீங்க ஏன் offend ஆகறேள்" category தான்.
Post a Comment