இந்திய மக்கள், தம் பழக்கம் காரணமாக எதிலும் நம்பிக்கை வைப்பார்களே தவிர, எதையும் அறிவு நுட்பமுடன் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். எவரேனும் ஒருவர் வழக்கத்திற்கு மாறுபட்ட ஒன்றை இங்குச் செய்தால்- மற்ற நாடுகளில் மூளைக் கோளாறு உள்ளவன் செய்வது என்று சொல்லப்படுகின்ற தன்மையிலான விசித்திரமான செயலை இங்குச் செய்தால், இந்த நாட்டில் அவர் ஒரு மகாத்மாவாகவோ அல்லது ஒரு யோகியாகவோ மதிக்கப்படுகிறார். இடையன் பின்னால் செம்மறியாடுகள் செல்வதுபோல் மக்கள் இத்தகையோரின் பின்னால் செல்கின்றனர். உண்மையில் மனக் குறையுள்ள அனைவரின் கருத்துகளையும் பொறுப்புடன் கேட்டறிந்திட சனநாயகம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
டாக்டர் அம்பேத்கர்
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
04.01.1938
தேர்தல் வந்தாலே மதவாத அரசியலை சங்கிகள் கூர்தீட்டத் தொடங்கிவிடுவார்கள்.
பாஜக தேர்தல் வெற்றிக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடங்கி, காஷ்மீர் விவகாரம் என நீட்டி, நம்ம ஊர் ஆட்டுகுட்டி வரை தீவிரமாக வேலை செய்யும்.
மத அரசியலைக் கையில் எடுத்த பின்பே இந்தியா முழுக்க பாஜக தன் அரசியல் செல்வாக்கைப் பெறத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம், மத நம்பிக்கை என்ற சடங்கு சாக்கடைக்குள் வெகுமக்கள் சிக்கி இருப்பதாலே. சாதிய வேற்றுமையை, மத வெறுப்பை அவர்களால் தூக்கிப் பிடிக்க முடிகிறது. இந்துத்துவ பார்ப்பனியம் ஆட்சி அதிகாரம் செலுத்தும் இந்த காலகட்டத்தில் அவர்கள் எதை வேண்டும் என்றாலும் பிரச்சினையாக உருவாக்குவார்கள், உருவாக்குகிறார்கள்!
இன்று ஹிஜாப் பிரச்சினை வடமேற்கு கர்நாடகாவில் கிளப்பி, அதை இந்தியா முழுக்க விவாதமாக்கி இருக்கிறார்கள். ஹிஜாப் விவகாரம் மூலம் ஒன்றிய அரசின் பட்ஜெட் விவகாரத்தை திசைதிருப்பிவிட்டது ஒரு பக்கம் என்றால் மற்றொன்று உ.பி. தேர்தலுக்கு இந்து- முஸ்லிம் மதவெறுப்பு அரசியல் அவர்களுக்கு எப்போதுமே வெற்றியைத் தந்துள்ளதால் இந்த ஹிஜாப் விவகாரத்தின மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்கள் இருப்பது போலவும்,
முஸ்லிம்களை, பெரும்பான்மை இந்துக்கள் எதிர்ப்பது போலவும் இந்தியா முழுமைக்கும் ஓர் கருத்துப் பரப்புரை செய்கிறார்கள்.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் மட்டும் அல்ல, கடந்த 30ஆண்டுகளாகவே மதவெறுப்பை சங்கி அமைப்புகள் தொடர்ந்து அந்தப் பகுதியில் விதைத்து வந்திருக்கின்றன. வட இந்தியாவில் பா.ஜ.க வளர்வதற்கு அயோத்தியை எப்படிப் பயன்படுத்தியதோ, அதே வழிமுறையை கர்நாடகாவில் பாபா புடன்கிரியில் செயல்படுத்த முயற்சித்தது.
பாபா புடன்கிரி என்பது ஒரு இஸ்லாமிய தர்கா. அது சிக்மங்களூர் மாவட்டத்தில் உள்ளது. இப்போது பிரச்சினை நடக்கும் உடுப்பி மாவட்டத்தின் அண்டை மாவட்டம் தான் அது. இந்த தர்காவில் இந்து முஸ்லிம்கள் என்ற வேறுபாடு இல்லாமல் நூற்றாண்டுகளாக வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இப்போதும் பல்வேறு பிரச்சினை மத்தியில் மதச்சார்பற்ற மத வழிபாடு அங்கு நடக்கிறது. அந்த தர்கா முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று முஸ்லிம்களே சொன்னதில்லை.
அப்படிப்பட்ட சூழலில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின், ‘தெற்கு அயோத்தி இந்த பாபாபுடன்கிரி’ என்ற கருத்துப் பரப்புரையுடன் அந்த
தர்காவில் பார்ப்பனரைப் பூசாரியாக நியமிக்க வேண்டும்; அங்கு சமாதிக்கு பதில் சிலையை நிறுவ வேண்டும்; அங்கு சுற்றியுள்ள கல்லறைகளை அழித்தல் வேண்டும்; பார்ப்பன வேத முறைப்படி பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பா.ஜ.க. வின் கலவர அமைப்பான பஜ்ரங் தள் பிரச்சாரத்தை முன்னெடுத்து இந்து முஸ்லிம் பிரிவினையை அங்கு முன்னிலைப்படுத்தியது.
இஸ்லாமிய தர்காவை இந்துத்துவ சக்திகள் உரிமை கொண்டாடுவதற்கான காரணம் கொடுமையானது. அந்த தர்காவில் சமாதி அடைந்து இருப்பவர் பெயர் தாதா ஹயத் என்கிற இஸ்லாமிய மதபோதகர். அவருக்கு தத்தாத்ரேயா என்கிற புனைப்பெயரும் இருந்ததாலே அவரை இந்துக் கடவுளாக, அதாவது சாகிப் பாபாவை எப்படி சாய்பாபா'வாக ஆக்கினார்களோ! அதே போன்று இவரையும் இந்துத்துவ கடவுளாக மாற்றினார்கள். இவ்வாறு மத வெறுப்பு அரசியல் செய்தபோது அதைத் தடுப்பதில் தான் இந்துத்துவாவுக்கும், இந்துத்துவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ்கும் நேரடி மோதல் ஆரம்பமானது. பாபா புடன்கிரி தர்கா, தனித்தன்மை வாய்ந்த நல்லிணக்கத்துடன், உண்மையான மதச்சார்பற்ற தன்மைக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது என்று 1975இல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதை நிலைநாட்டும் வேலையைத்தான் கவுரி லங்கேஷ் தான் கொல்லப்படும் வரை செய்து வந்தார்.
தர்காவை மய்யப்படுத்தி இந்துத்துவ அமைப்பு உருவாக்கிய அரசியல், தர்காவில் பார்ப்பானை பூசாரியாக நியமிக்க உதவவில்லை என்றாலும், அந்தப் பகுதி முழுக்க தேர்தலில் வெற்றியை அவர்களுக்கு தேடித் தந்தது. இன்று தனிப் பெரும்பான்மையில் கர்நாடகாவில் ஆட்சியில் அமர்ந்து இருப்பதற்கு தர்கா மதவாத அரசியல் தான் அவர்களுக்கு முக்கியக் கருவியாக செயல்பட்டது.
ஒரு பேஸ்புக் பதிவு போதும், கர்நாடகாவில் மதக்கலவரம் ஏற்படுத்த முடியும் என்ற நிலைக்கு அந்த மாநிலத்தை மாற்றி அமைத்து இருக்கிறார்கள். ஹிஜாப் விவகாரத்தில் கூட அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பார்க்கும் போதும், அப்பெண்னிற்கு எதிராக முழுக்கமிடும் மாணவர்களின் முகங்களை பார்க்கும் போது அந்த மாணவர்கள் அனைவருமே ஏழை மற்றும் நடுத்தரக் குடும்ப மாணவர்களை போன்றே தோற்றம் அளிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் முதல் தலைமுறை பட்டதாரி ஆவதற்கு படிப்பில் கவனம் செலுத்தாமல் இந்துத்துவ அரசியலில் சிக்கி தங்கள் வாழ்வை அழித்துக் கொள்வதோடு, கர்நாடகாவை உ.பி., பீகார் போல பழமைவாத மாநிலமாக மாற்றிவிடுவார்களோ என்ற அய்யம் ஏற்படுகிறது.
அதே போன்று இந்த ஹிஜாப் விவகாரத்தை மேலும் அரசியல் படுத்துவதன் மூலம் முஸ்லிம் பெண்களின் கல்வி சிதையும் வாய்ப்பு இருக்கிறது. முஸ்லிம் சமூகத்தினர் பெண்களின் உயர்கல்விக்கு கடந்த ஒரு பத்தாண்டாகத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தச் சூழல் தொடருமானால் அது அப்பெண்களின் உயர்கல்வியைத் தவிர்த்து வீட்டிலே முடக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
கர்நாடகா அரசியல்
கர்நாடகா அரசு ஓர் ஆர்.எஸ்.எஸ் அரசாகவே செயல்படுகிறது. தொடர்ந்து கிருத்துவர்கள் ஞாயிறு நிகழ்ச்சி நடத்தக் கூடாது; மதமாற்றத் தடைச் சட்டம் என மதம் சார்ந்த பிரச்சினைகளை முக்கிய விவதாமாக்குகிறார்கள். அந்த மாநிலத்தின் முதல்வர் லிங்காயத்து என்ற பிரிவைச் சார்ந்தவர். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் லிங்காயத்து தான். லிங்காயத்துகள் நாங்கள் இந்துக்கள் அல்ல என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டாலும் பார்ப்பனர்களோடு திருமண உறவு வைத்துக் கொள்ளும் சமூகமாக, உயர்சாதி சமூகமாக, இருக்கிறார்கள். இந்திய சுதந்திரத்துக்கு முன் பம்பாய் மாகாணத்தோடு இணைந்து இருந்த கருநாடகாவை தனியாக பிரிக்க வேண்டும் என்று பம்பாய் சட்டமன்றத்தில் 1938 ஏப்ரல் முதல் வாரத்தில் ஓர் விவாதம் நடந்தது. அதில் கருத்து சொன்ன டாக்டர் அம்பேத்கர், “கர்நாடகம் தனி மாகாணமாக பிரிக்கப்பட்டால் மற்ற (சாதி, மத) அனைவருக்கும் எதிராக லிங்காயத்துகள் ஆதிக்கம் செய்யும் ஒரு மாநிலமாகத் தான் அது ஆகிவிடும் என்று அஞ்சுவதாக” கூறினார். ஆம் அம்பேத்கர் அஞ்சியது போன்றே இதுவரை எட்டு லிங்காயத்து பிரிவை சார்ந்தவர்கள் முதல்வராக ஆகி இருப்பதுடன் கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செய்யும் பிரிவாக அவர்களே இருந்து வருகிறார்கள்.
கர்நாடக மக்கள் தொகையைப் பொருத்தமட்டில் தலித் மற்றும் பழங்குடியினர், அத்துடன் சிறுபான்மையினர், குரும்பா என இந்த நான்கு பிரிவினர் மட்டுமே 47விழுக்காடு மக்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஒன்று சேர்ந்தால் போதும், உயர்சாதியினர் அதிகாரம் செய்ய இயலாத சூழல் ஏற்படும். இதையும் கருத்தில் கொண்டு தான் ஹிஜாப் அரசியலை ஆராயவேண்டும்.
ஹிஜாப் மட்டும் அரசியல் அல்ல
ஹிஜாப்புக்கு ஆதரவாக இந்தியாக முழுக்க சமூக வலைதளத்தில் குரல் கொடுக்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் பதிவு செய்தபோது, கர்நாடகக் களத்திலே இந்துத்துவாவுக்கு எதிராக தன் எதிர்ப்பை 'பாபாசாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர்' நீலத்துண்டு அணிந்து காவிகளுக்கு எதிராக “ஜெய்பீம்” என முழக்கமிட்டு பதிவு செய்தனர்.
அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் செய்தது போன்ற ஒரு சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது. அதைச் செய்தவர் அம்பேத்கரின் பேத்தியைத் திருமணம் செய்துள்ள ஆன்ந்த் டெல்டும்டே அவருடைய “சாதியின் குடியரசு” எனும் அவர் புத்தகத்தின் முன்னுரையில்,
“1965 காலகட்டத்தில் யாவத்மால் மாவட்டத்தின் வாணி நகரில் நான் ஒன்பதாவது படிக்கும் காலத்தில், அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ்.சின் மேலாதிக்கத்திற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினேன். பள்ளிச் சீருடையின் ஒரு பகுதியாக இருந்த நேரு குல்லாய்க்குப் பதிலாக, சில பிராமண மாணவர்கள் ஆர்.எஸ். எஸ். கருப்பு குல்லாய் அணிந்தனர். சில நெருங்கிய நண்பர்களோடு விவாதித்த பிறகு, ஒரு நாள் அந்த ஆர்.எஸ்.எஸ். பையன்களை எதிர்க்க ஒரு திட்டம் தீட்டினேன். சினிமா விளம்பரத்தட்டி பலகைகள் வரைந்து சிறிது பணம் சம்பாதித்து வைத்திருந்தேன். அதை வைத்து நூறு நீல நிற குல்லாய்கள் வாங்கினேன். சாதி வேற்றுமை இன்றி விருப்பப்பட்ட மாணவர்களுக்கு அவற்றைத் தந்து. ஒரு குறிப்பிட்ட நாளில் அனைவரும் அவற்றை அணிந்து சென்றோம். பள்ளி பிரார்த்தனைக் கூட்டத்தில் எங்கள் பலரையும் நீலக் குல்லாயில் பார்த்த விளையாட்டு ஆசிரியர் (அவர் ஒரு தலித்) ரகளை செய்துவிட்டார். என்னைத் தலைமையாசிரியரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் ஒரு முஸ்லிம். எல்லா மாணவர்களும் பள்ளிச் சீருடை அணிவதை அவர் உறுதி செய்யும் வரை நாங்கள் நீலக் குல்லாய் அணிய முடிவு செய்திருப்பதாகக் கூறினேன். அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் அந்த மாணவர்கள் பணக்கார, செல்வாக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், தான் அவர்களது பெற்றோரிடம் பேச வேண்டும் என்றார். அவர் என்ன செய்தாரோ தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் கருப்புக் குல்லாய் அணிவது நின்றது. எனது சிறுவயதிலிருந்தே நான் சாதி தாண்டி பணி செய்திருக்கிறேன். அதற்கு பிறரது ஆதரவும் கிடைத்திருக்கிறது.
அரை நூற்றாண்டுக்கு முன் நேரு குல்லாவை எதிர்த்த கூட்டம் இன்று முஸ்லிம் பெண்களின் ஆடையைக் குறிவைத்து கொக்கரிக்கிறது. அதற்கு டெல்டும்டே எடுத்தது போன்ற சரியான எதிர்வினையை இந்தியா முழுக்க எடுக்க வேண்டும்.
இன்று நம்மோடு டெல்டும்டே இல்லை. தேதச் துரோகி என முத்திரையிட்டு அம்பேத்கர் பிறந்த தினத்தில் அவரைக் கைது செய்து இன்று வரை அவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறது ஒன்றிய மோடி அரசு. அவர்களைப் பொருத்த மட்டில், “இது எங்கள் ஆட்சி, உங்களால் ஒன்னும் பண்ண முடியாது. உங்கள் விருப்பத்திற்கு இணங்கக்கூடிய அரசாங்கம் இப்போது இல்லை. உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்” என்ற பாசிசக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படுகிறது.
சி.ஏ.ஏ. சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் ஒன்றிய இந்துத்துவ அரசு பின்வாங்கியது மட்டுமே நமக்கு நினைக்கு இருக்கும். ஆனால் சி.ஏ.ஏ. பிரச்சினைக்காக அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த உமர் காலித் இன்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யு ஏ பி ஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி காவல் துறையால் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்.
ஆரம்பக் கட்டத்தில் போலீசார் நீதிமன்றத்தில் உமர் காலித் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில் 'டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் 2020 ஜனவரி 8-ம் தேதி உமர் காலித் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டிவிடுவது பற்றி உமர் காலித் ஆலோசனை நடத்தி உள்ளார் என்று சொன்னார்கள். இப்போது அதாவது கடந்த வாரம் உமர்காலிதின் ஜாமீன் மீதான விசாரணையில் உமர்காலித் இந்தியாவுக்குள் ஒரு தனி நாடு உருவாக்க திட்டம் தீட்டினார். ஆகையால் ஜாமீன் தரக்கூடாது என சொல்லி இருக்கிறார்கள்.
ஆனந்த் டெல்டும்டே தன் எழுத்தால் இந்துத்துவக் கருத்தியலை எதிர்த்தார். உமர் காலித் இந்துத்துவக் கொள்கையைக் களத்தில் எதிர்த்தார். இருவருமே இன்று சிறையில்! இவர்கள் எதிர்த்த சித்தாந்தம் இன்னும் வீரியமாக அப்பாவி மக்களிடம் ஊடுருவிக்கொண்டு இருக்கிறது. நேற்று குரல் கொடுத்த மாணவி
முஸ்கான் ஆகட்டும், பாபா சாகேப் அம்பேத்கர் அமைப்பினர் ஆகட்டும் இந்தப் பிரச்சினைக்கு கண்டனக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொது மக்கள் எல்லாருமே ஓரணியில் திரண்டு இந்துத்துவ பாசிச எதிர்ப்பை முன்னெடுக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை எனில் வெறிகொண்ட பாசிச மிருகங்கள் பிரிந்து செயல்படும் நம்மைய
எளிதாக வேட்டையாடி விடும்.
நாம் என்ன செய்யப் போகிறோம்?
- ஊரும் உணர்வும்
சிறப்பு தோழர்... நாம் ஒருங்கிணைய வேண்டிய தேவையையும் ஒருங்கிணைந்தால் ஆதிக்க சக்திகளை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த இயலும் என்பதையும் தெளிவாகச் சொன்னீர்கள். ஒருங்கிணையாவிட்டால் இருக்கும் ஆபத்துதான் முதன்மையானது.
ReplyDeletePost a Comment