அம்பேத்கரும் ரிசர்வ் வங்கியும்

 அம்பேத்கரும் ரிசர்வ் வங்கியும்

-    சாரதா தேவி

இந்திய ரிசர்வ் வங்கித் தோற்றத்தின் பின்னணி

இந்திய நாட்டின் நிதிக் கொள்கைகள், பணப் பாதுகாப்பு, காப்பு இருப்புகள் ஆகியவற்றை நிர்வகிக்க ஒரு மத்திய ரிசர்வ் வங்கியினை ஏற்படுத்த பல்வேறு குழுக்களை பிரிட்டிஷ் அரசு அமைத்தது. அதில் முக்கியமான ஒரு குழு தான் ஹில்டன் யங் குழு. 1926 இல் அந்தக் குழு இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு, “இந்தியாவின் பணம் மற்றும் நிதிக்கான ராயல் குழுஎன்ற பெயரில் வந்தது. அந்தக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு புத்தகத்தைப் புனித நூலைப் போல் கைகளில் பற்றி இருந்தனர். அந்தப் புத்தகம் தான் இந்திய நாட்டில் 1935 இல் இன்றைய இந்திய ரிசர்வ் வங்கி அமைய, கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்கக் காரணமாக இருந்தது. ஆம்! 1923ல்லண்டன் பொருளாதாரப் பள்ளி (London School of Economics)’ யில் அண்ணல் அம்பேத்கர் எழுதி, தன் ஆய்வுப் பட்டத்திற்கு சமர்ப்பித்த “The Problem of Rupee and Its Origin” என்ற புத்தகம் தான் அது! அந்தக் குழு, அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே விவாதங்களைக் கட்டமைத்து முடிவுகளையும் எடுத்தது!


அண்ணலின் பொருளியல் ஆர்வம்

அண்ணல் அம்பேத்கரும் ரிசர்வ் வங்கியும் என்று ஒரு கட்டுரை எழுத முயலுகையில் தலைப்பே பெரும் மலைப்பை தந்தது. அண்ணல்அவர்களுக்கு பிடித்த படிப்பு, பிடித்த துறை பொருளாதாரம் தான். அவர் சாதிக்கும், தீண்டாமைக்கும், இந்து மதத்துக்கும் எதிராக எழுதிய புத்தகங்களைத் தவிர அதிகமாக எழுதியது பொருளாதாரம் குறித்து தான். அவருடைய துறைச் சார்ந்த அந்த ஆழமான அறிவை அவருடைய பேராசிரியர்களே மெச்சி, பதிவு செய்துள்ளனர்.

அண்ணல் அவர்கள் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றதும் பொருளியல் துறையில் தான்! இந்திய நாட்டின் சிறு நிலவுடைமையாளர்கள் குறித்தும், நிலம் துண்டு துண்டாக இருப்பதில் இருக்கும் சீர்கேடுகள், சிறு பெரு வணிகர்கள் என்பன போன்ற பல்வேறு பொருளாதாரத் தலைப்புகளில் சுமார் 14 புத்தகங்களை அவர் எழுதிக் குவித்திருக்கிறார்.

தன் மக்களை முன்னேற்ற, அரசியல் பாதையை அவர் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால், இன்னும் அதிகமான பொருளாதாரக் கட்டுரைகளை அவர் எழுதி இருப்பார். அவருடைய அறிவெனும் ஆழப் பெருங்கடலின் கரைகளைக் கூட நாம் தொட்டு விட முடியாத தொலைவில் இருப்பதையே இறுதியில் நாம் உணரவேண்டி உள்ளது! நாம் புரிந்து கொண்டவற்றை வாசகர்களுக்கும் கடத்தும் முயற்சியே இந்தக் கட்டுரை!

அண்ணலின் பொருளியல் நோக்கம்

அண்ணல் அம்பேத்கரைப் பொறுத்தவரை அவர் பொருளாதாரத் தேற்றங்களைக் காட்டிலும், அதன் வறட்டு விளக்கங்களைக் காட்டிலும், பொருளாதாரம் குறித்த அறிவு பொதுமக்களுக்கு எப்படிப் பயன்படும் என்பதிலேயே அதிகக் கவனம் செலுத்தினார். இதை நாம் சொல்லவில்லை. அவர் எழுதியரூபாயின் சிக்கலும் அதன் தோற்றமும்” – (The Problem of Rupee and Its Origin) என்ற நூலின் முன்னுரையில் பேராசிரியர் எட்வின் கெனான் அவர்கள் இதை எழுதுகிறார். அண்ணலின் பொருளாதாரம் குறித்த சிந்தனைகளை, விமர்சனங்களை ஒரு நிபுணராக அவரால் அப்படியே ஏற்க முடியாவிட்டாலும் அவருடைய வாதங்கள் பொட்டில் அறைந்தது போல சில உண்மைகளைச் சொல்லிவிடுகிறது, அதை ஏற்காமல் கடக்க முடியாது என்று நெகிழ்கிறார் அவர்!

அரசின் கட்டுப்பாடும் தில்லுமுல்லுகளும்

பொதுமக்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களுடைய சுதந்திரத்திற்கும், வசதிகளுக்கும் ஒரு நாட்டின் பொருளாதாரம் பயன்படவேண்டும் என்பதிலும் அதில் அரசின் தலையீடும் கூட அவசியமற்றது என்றும், இன்னும் சொல்லப்போனால், மக்கள் நலன் சாரா அரசுகள் இந்த செலாவணிக் கணக்குகளில் தில்லுமுல்லுக்கள் செய்து மக்களை ஏமாற்றக்கூடும் என்றும் கூட அவர் அந்தப் புத்தகத்தில் எச்சரிக்கிறார்.

ரூபாயின் வரலாறு

ஏராளமான தரவுகளுடன், மதிப்புப் பட்டியல்களுடன், பணம் ஒருங்கிணைக்கப்பட்டு உருவான வரலாறை எழுதுகிறார் அண்ணல்.

உலக நாடுகளிடையே வர்த்தகம் பெருகப் பெருக, பண்டமாற்று முறை போதாததாக மாறிவிடுகிறது. வெள்ளியும் தங்கமும் உலகெங்கிலும் பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான விலையாக கொடுக்கவும் வாங்கவும் பட்டதை மன்னராட்சிக் காலந்தொட்டே  நாம் படித்திருப்போம்

மேற்குலக நாடுகள், நம்மை ஆண்ட ஆங்கிலேயர் உட்பட குறிப்பிட்ட எடைகள் மற்றும் அளவுகள் கொண்ட தங்கக் காசுகளையே பரிவர்த்தனை மதிப்பாகப் பயன்படுத்தினர்.

இந்தியாவில் மொகலாய மன்னர்கள் அதிகமாக வெள்ளி (ரூபாய்) யையும், இந்து மன்னர்கள் தங்க (மொகர்)த்தையும் பணமாகப் புழங்கி வந்தார்கள்.

மொகலாய மன்னர்கள் பராமரித்த பண ஒழுங்கின் காரணமாக வெள்ளியே இந்த நாட்டின் பணமாக நிலை நாட்டப்பட்டதாக அம்பேத்கர் தன் புத்தகத்தில் எழுதுகிறார்.

அக்பர் ஆண்ட 16ஆம் நூற்றாண்டு காலந்தொட்டே இங்கே வணிகம், பணப் புழக்கம், வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்கள், சேமிப்பு ஆகியவை உருவாகிவிட்டன.

அதன் பின்னர் வந்த கிழக்கிந்தியக் கம்பெனி, ஒரே நாடாக இந்த நிலப்பகுதியை நிர்வாக வசதிகளுக்காக ஒருங்கிணைக்க முனைந்தனர்அதன் பின்னர் காலனி ஆதிக்கத்தின் கீழ் பல்வேறு அரசாட்சியின் கீழிருந்த பகுதிகளில் வெவ்வேறு நாணயங்கள் புழக்கத்தில் இருக்க, வணிகம் முடிந்து பணம் பெற்ற பின்னும், அவற்றை அந்தப் பகுதிக்குரிய நாணயமாக மாற்றுவதில் இருந்த நட்டங்களை வணிகர்கள் சந்திக்க வேண்டி இருந்தது.

வெள்ளையர்களுக்கும் தங்கள் வரிப் பணம், பல்வேறு துறையினருக்கான ஊதியங்கள், மற்றும் செலவுகளை மேற்கொள்ளுவதில், பல்வேறு வகையான நாணயங்கள் சிக்கலை ஏற்படுத்தின. இந்தியா முழுமைக்குமான ஒரு பணம் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து, இறுதியாக வந்தது தான் ரூபாய். ரூபாய் என்பது வெள்ளியின் பெயர்தான்.

தங்கம் இருப்பும் நாடுகளின் செல்வ நிலையும்

உலகெங்கிலும் தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்தைக் காலனியாதிக்கத்தின் வழி வல்லரசுகள் தங்கள் வசப்படுத்திக் கொண்டன. அவை அந்தத் தங்கத்தை தம்முடைய காலனி நாடுகளுக்கு வணிகப் பரிவர்த்தனையாகக் கூட தரத் தயாராக இல்லை. ஆஸ்திரேலியா மற்றும் கலிஃபோர்னியாவில் 19ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட தங்கம், அந்த நாடுகளையும் செல்வந்தர்களாக்கியது.

பணம் மக்களின் தேவைகளை வசதிகளை நிறைவு செய்வதே அளவுகோல்

தங்கம் வெள்ளி போன்ற அரிய உலோகங்கள் மேலை நாடுகளில் பொதுமக்களின் நுகர் பொருளாக அரிதாகவேப் பயன்படுகிறது. அதுவே இந்தியாவில், காப்பு மதிப்பாக இருப்பதைப் போல பல மடங்கு பொதுமக்களிடம் இருக்கிறது. அண்ணல் அவர்கள் தங்கம்வெள்ளி நாணயங்களாகவும்காப்பு இருப்பாகவும்செலாவணி மதிப்பாகவும் இருப்பதைப் போல மக்களிடமும் தங்கள் சொந்த செல்வ இருப்பாகவும்அலங்கார நுகர்பொருளாகவும் இருப்பது பாதுகாப்பானது என்று சொல்கிறார்.

சுரங்கங்களைப் பொதுமக்களுக்கு மூடி, அரசின் கட்டுப்பாட்டில் வைப்பது ஆபத்தானது என்று சொல்கிறார்.

கூட்டுப் பொறுப்பு ஏற்காத அரசு அதிகாரிகளை, அவர்களின் பணி சார்ந்த முடிவுகளுக்குத் தண்டிக்க இயலாத ஒரு நிலையில், அவர்கள் எடுக்கும் முடிவுகளினால் மக்களுக்கு எந்த தீமையும் நேரக்கூடாது என்ற கவலையைப் பகிர்ந்து கொள்கிறார் அம்பேத்கர்.

ஒவ்வொரு பணமும் எவ்வளவு தங்கம் பெறுகிறது, எவ்வளவு அன்னிய செலாவணியை ஈட்டுகிறது என்பதைக் காட்டிலும் ஒவ்வொரு பணத்திற்கும் எவ்வளவு அதிகமான நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும் என்பதும் பண நிர்வாகம் எவ்வளவும் உண்மையாகவும், விவேகத்துடனும், எவ்வளவு சிக்கனமாகவும் நடக்கிறது என்பதும் முகமையானது என்று எழுதுகிறார் அம்பேத்கர்.

தொழில்மயமாவதே உழைப்பு வீணாவதைத் தடுக்கும்

வேளாண்மைப் பொருளாதாரத்தில் பெரும்பான்மை உழைப்பு வீணாவதைச் சுட்டி, விரைவில் தொழில்மயப் படுவதே ஒரு பெரும்பான்மை உழைக்கும் சக்தியைப் பயன்படுத்திச் சமூகம் முன்னேற வழி செய்யும் என்று ஆழமான கருத்துகளை வைக்கிறார் அவர்.

ரூபாய் அந்நிய செலாவணியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு

நாட்டின் பண இருப்பு, அன்னிய செலாவணி இருப்பு மற்றும் தங்க இருப்புக்குத் தகுந்த வகையில் தான் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் பட வேண்டும். ரூபாயின் மதிப்பு உலக வர்த்தகத்தில் பங்கெடுக்கும் அளவுக்கும் தரத்துக்கு தக்கவாறும் மாறிக்கொண்டே இருக்கும். அதை மாற்று செலாவணியாக மாற்றுவதோ, அல்லது தங்கமாக மாற்றுவதோ ரூபாயின் காப்பிருப்பைக் குறைப்பதுடன் ஒரு போதும் நாம் பொருளாதார வல்லரசுகள் ஆவதைத் தடுக்கும்.

அம்பேத்கர் அவர்கள் ரூபாய் மதிப்பை வேறு எதுவாகவும் மாற்றுவதைத் துளியும் ஏற்கவில்லை. அதுமட்டுமல்ல அவை புழக்கத்தில் விடுவது கட்டுப்படுத்தப் பட்டாலே அதன் மதிப்பைத் தக்கவைக்க முடியும் என்று அப்போதைய பொருளாதார சிந்தனைப் போக்கிற்கு எதிரான ஒரு கருத்தை வைத்து அந்தப் புத்தகத்தை முடிக்கிறார்.

உலகின் அரசியல் பொருளாதாரம் அண்ணல் அம்பேத்கருக்குப் பின் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்திருக்கிறது. அவருடைய கண்ணோட்டங்களே கூட இன்றைய சூழலில் மாறி இருக்கலாம்! ரூபாயை வேறு எதுவாகவும் மாற்ற அனுமதிக்காதக் கட்டுப்பாடு படிப் படியாக தளர்த்தப்பட்டு விட்டது. இப்போது பெரிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

அம்பேத்கரின் தொலைநோக்குச் சிந்தனை

ஒரு சுதந்திரச் சிந்தனையாளராக, தன் மக்களையும் நாட்டையும் பெரிதினும் பெரிதாக நேசித்த ஒரு மாபெரும் மானுடவாதியாக அண்ணலின் பொருளியல் எண்ணங்கள் இன்று நாம் ஒரு பாதுகாப்பான பொருளியல் ஆற்றலாக உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கப் பயன்பட்டிருக்கின்றன. எத்தனையோ உலக வங்கிகள் திவாலான போதும் நம் தேசிய வங்கிகள் தாக்குப்பிடித்தமைக்கு அந்த அடிப்படை நெறிமுறைகளை நாம் பின்பற்றுவதேக் காரணமாகும். வங்கிகளின் வங்கி, அரசின் வங்கி, நிதிக் கொள்கை, பாதுகாப்பு, பொருளியல் குற்றங்களுக்கு எதிரான தடுப்பரண்கள் என நெறிப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் உருவாக்கத்திலும் செயல்பாட்டிலும் வழிகாட்டியாக அவருடைய எண்ணங்களே இருந்தன என்பது அவர்தம் மாணாக்கராக நாம் கொள்ளத் தக்க பெருமையாகும்!

 

வெங்காயம் ஏப்ரல் 2021

Post a Comment

Previous Post Next Post