தமிழ்நாடு - அம்பேத்கர் - பெரியார்
-பிறைசூடன்
அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில், தமிழ்நாட்டு அரசியலில் அவரது பங்களிப்பு என்ன" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, இது அம்பேத்கரை முன்னிறுத்தி பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் வசை பாடுபவர்களுக்கு எதிராக மிகவும் புத்திசாலித்தனமாக கேட்பதாக இதனை முன்வைத்தவர் கருதி இருக்கலாம் ஆனால், இந்தக் கேள்வி அபத்தமானது மட்டுமல்ல அற்பத்தனமானதாகவும் இருக்கிறது என்றே கூற வேண்டும். எனவே அதற்கு பதிலளிக்க வேண்டுமா என்ற நோக்கம் தாண்டி அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவரது தாக்கம் தமிழக அரசியல் சூழலில் எப்படியாக இருந்தது என்பதை பகிர்வதற்காக இதனை எழுதுகிறேன்.
மகாராஷ்டிரா மாநிலம்தான் அம்பேத்கர் தனது அரசியலை தொடங்கிய மண் என்றாலும் அவர் வாழ்ந்த காலத்திலேயே அகில இந்திய அளவிலான தலித் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி எனக் கருதத்தக்க அளவிற்கு அவரது தாக்கம் இருந்தது என்பதை வரலாற்று அறிவு சிறிது உள்ளவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். அகில இந்திய அளவிலான தலித் மக்களுக்கான தலைவர் என்பது தமிழ்நாட்டில் இருந்த தலித் மக்களையும் உள்ளடக்கியதே.
அம்பேத்கரின் 'சாதி அழித்தொழிக்கும் வழி' உரையை பெரியார் தமிழில் கொண்டு வந்தபோதே அவரது ஆளுமை தமிழக அரசியலில் பங்களிக்க தொடங்கிவிட்டது என்றுதான் பொருள். அதில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட மக்கள் மதத்தை விட்டு வெளியேறுமாறு அம்பேத்கர் கேட்டுக்கொண்டது தமிழ்நாட்டில் உள்ள தலித் மக்களிடம் பெரிதும் விவாதத்துக்கு உள்ளானது பல்வேறு தலித் சமூக மாநாடுகளில் அக்கருத்து வலுவாக விவாதிக்கப்பட்டதற்கு சான்றுகள் உள்ளன.
ஆதி திராவிட மக்களிடம் பெரியார் ஆற்றிய பல உரைகளில் உங்களுக்கான தலைவர் என அம்பேத்கரை குறிப்பிடுவதை பார்க்கலாம் , அது பெரியாரின் பெருந்தன்மை என்று கூறி நாம் கடந்துவிட முடியாது அதுவே இயல்பானதாக இருக்கும் என அவர் கருதினார். அம்பேத்கருக்கு எதிராக தமிழ்நாட்டை ஆதி திராவிட தலைவர்கள் செயல்பட்ட போதெல்லாம் அவர்களைக் கண்டித்து உங்களுக்கான சரியான தலைவர் அம்பேத்கர் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார். அத்தோடு தானும் தலைவராக அண்ணல் அம்பேத்கரை ஏற்றுக் கொண்டதாகவும் சொன்னார்.
"தோழர்களே, உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் என்றும், அவரால்தான் பஞ்சமர்கள், கடையர்கள், இழிபிறப்புக் கொடுமைகள் நீங்கும் என்றும் நம்பினேன். அதனாலே உங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவராக ஏற்றுக் கொண்டேன்”
அம்பேத்கரின் SHEDULED CASTE FEDERATION அமைப்பு ரீதியாகவே தமிழகத்தில் இயங்கியது, பல கட்டத்தில் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து பணியாற்றவும் செய்தது. தந்தை சிவராஜ், அன்னை மீனாம்பாள் போன்ற மிகவும் அறியப்பட்ட தலைவர்கள் அதில் இருந்தனர், தொடர்ந்து நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடன் இயங்கினர். சான்றாக 27.12.1946 சென்னைக்கும் ஜோலார்பேட்டைக்கும் வருகை புரிந்த ஜெகஜீவன்ராமுக்கு எதிராக திராவிட கழகத் தோழர்களும் ஷெட்யூல்டு வகுப்பு பேரவையும் இணைந்து கருப்புக் கொடி காட்டினர். அது அமைப்பு ரீதியாக தலித் மக்களிடம் செல்வாக்கு பெற்று வந்ததை பெரியாரின் இந்த கூற்று நிறுவும்
"தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்றும் வேண்டாம் என்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளை நீங்கள் அடையுங்கள். திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேரா விட்டாலும் அந்த உழைப்பின் பலனை தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமை உண்டு" குடியரசு 8.07.1947
நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாற்றப்பட்டபோது நீதிக் கட்சியின் ஒரு சாரார் தனித்து இயங்கினர் சென்னை கன்னிமாரா ஹோட்டலில்( 23 September 1944 - luncheon party) அவர்கள் அளித்த விருந்தில் பங்கேற்ற அம்பேத்கர் ஆற்றிய உரையில் இத்தனை ஆண்டுகள் பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஆட்சியில் இருந்தும் தோல்வியைத் தழுவதற்கான காரணம் என்ன என்பதைப் பட்டியலிடுவார் அதில் பார்ப்பனர்களுக்கு எதிரான பார்ப்பனரல்லாத தலைவர்களின் கோபம் அவர்களை இரண்டாவது இடத்தில் வைத்துவிட்டார்கள் என்பதோடு மட்டுமே இருக்கிறது என்றும், அரசு வேலையை பெறுவதில் காட்டப்பட்ட கவனம் சாமானிய விவசாயி பார்ப்பனர் அல்லாத மக்களின் மீது செலுத்தப்படும் ஒரு காரணம் என்று கூறுவார். அத்தோடு காந்தி ஆளுமை இல்லாத தலைவர் என்ற போதும் காங்கிரஸ் முழுமையாக அவர் பின்னால் நிற்கிறது, முகமது அலி ஜின்னாவின் பின்னால் இஸ்லாமிய சமூகம் நிற்கின்றனர் , எந்த ஒரு கட்சிக்கும் ஒரு நல்ல தலைவர் நல்ல அமைப்பு மற்றும் நல்ல அரசியல் அடித்தளம் வேண்டும் எனவே தாமதம் ஆவதற்கு முன்பு பார்ப்பனர் அல்லாதோர் ஒன்றிணையுங்கள் என்று அழுத்தமாக சுட்டிக் காட்டியிருப்பார்.( Source: On the Justice party of Madras - a stake in nation)
அந்த நிகழ்வின் அம்பேத்கர் பேசியதை 30.09.1944 குடியரசில் "சோறு போட்டு உதை வாங்கின கதை - அம்பேத்கர் கொடுத்த அடி" என்று தலைப்பிட்டு வெளியாகி உள்ளது.
அம்பேத்கர் அவர்களிடம் அவ்வாறு பேசியது பெரியாருக்கு ஆதரவாகத்தான் அதே நாளில் குடியரசில் வெளியாகிய 'அம்பேத்கர் பெரியார் சந்திப்பு' என்கிற கட்டுரையை பார்த்தால் புரியும்.
"1944- தீர்மானம் ஜஸ்டிஸ் கட்சியை எல்லா(அகில) இந்திய கட்சியாக ஆக்கக்கூடியதாகும் என்றும், எதிர்காலத்தில் இது தலை சிறந்து விளங்கக் கூடியதாக ஆகுமென்றும் கூறினார்…அதற்கு இப்போது நல்ல சமயம் நல்ல வேலை திட்டம் இருப்பதால் இந்தியா பூராவும் வேலை செய்யும் படியும் தனது நண்பர்களுக்கு எழுதியும் தன்னாலான அளவுக்கு ஒத்துழைத்தும் ஆதரிப்பதாகவும் சொன்னார்"
அரண்மனையில் இருந்த நீதிக்கட்சியை ஆலமரத்தடிக்கு கொண்டு வந்தார் தந்தை பெரியார் என அறிஞர் அண்ணா குறிப்பிடுவார் இந்த பரிணாமத்தை உணர்ந்தே ஆதரித்தவர் அண்ணல் அம்பேத்கர். தந்தை பெரியாரின் திராவிடஸ்தான் முழக்கத்தையும் அம்பேத்கர் ஆதரித்தார்
"திராவிடஸ்தான் இந்தியா பூராவுக்கும் பொருத்தமானது என்றும் பிராமணியம் இந்தியா முழுமையும் பொருத்த விஷயம் என்றும் திராவிடஸ்தானில் தங்களையும் வேறு மாகாண காரர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்"
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமூக ரீதியாகவும் , கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை சேர்க்க அவர் மேற்கொண்ட முயற்சியை இன்றைக்கு மத்திய அரசு பணிகளில் அமர்ந்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மறந்துவிட முடியுமா? பெண்களுக்கு சம உரிமை வழங்கும் இந்து திருத்தச் சட்டம் கொண்டுவர முயன்று அதை காரணமாக முன்வைத்து பதவி விலகியதை தமிழ்நாட்டுப் பெண்கள் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என யாராவது கூறிவிட முடியுமா?
வட்டமேசை மாநாட்டின் போதும், பூனா ஒப்பந்தத்தின் போதும் இந்தியாவில் உள்ள அனைத்து பட்டியலின மக்களின் பிரதிநிதியாக தான் அவர் கருதப்பட்டார். தமிழ்நாட்டில் உள்ள 20% தலித் மக்களின் எதிர்காலம் அப்பொதே அவருடன் இணைக்கப்பட்டது. அதனால் தானே பெரியார் தந்தி கொடுத்தார் நீங்கள் கையெழுத்து போடாதீர்கள் காந்தி செத்தால் சாகட்டும் என்று.
இந்தியா முழுக்க தீண்டாமை அனுபவித்த மக்கள் தலித் என்ற ஒற்றைச் சரடுக்குள் இணைத்தவர் அம்பேத்கர், அதற்கு தமிழ்நாடு மட்டும் ஒன்றும் விதிவிலக்கல்ல. அப்படி இருக்கையில் அவர் தமிழ்நாட்டுக்கு நேரடியாக என்ன செய்துவிட்டார் என்ற கேள்வியை எழுப்புவதே தலித் மக்களை தனித்து பார்க்கும் சாதிய மனப்பான்மையிலிருந்து எழுவது.
அம்பேத்கரை முன்னிறுத்தியதால், புகழ்வதால், அவரை தலைவர் என்று அழைப்பதால் தனது முக்கியத்துவம் குறைந்து விடும் என்று பெரியார் என்றுமே நினைத்ததில்லை, மாறாக அது நம்பியிருக்கும் சாதி ஒழிப்பு கருத்துக்கும் ஒட்டுமொத்த பார்ப்பனர் அல்லாத மக்களின் உயர்வுக்கும் அது உதவும் என்றுதான் அவர் அணுகினார். அவர்களுக்கிடையே முரண்பாடுகளே வந்ததில்லையா என்றால் வந்து இருக்கின்றன ஆனால் அவை இன்றைய அரசியல் சூழலில் எடுக்கப்பட்ட வெவ்வேறு நிலைப்பாடுகளின் காரணமாக இருக்கலாமே தவிர தலித் வெறுப்பு காழ்ப்போ அதில் துளியும் இருந்ததில்லை. சான்றாக
"திராவிடநாடு பிரிவினை போராட்டத்தின்போது டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களும் கூட எதிர்த்தாலும் திராவிட நாட்டு பழங்குடி மக்கள் என்னுடனும் திராவிடர் ஏக்கத்துடனும் கொண்டாடுவார்கள் என்ற உறுதி எனக்குண்டு! ஏன்? பழங்குடி மக்களும் திராவிடர் இயக்கமும் அல்லது சுயமரியாதை இயக்கமும் நகமும் சதையும் போன்றவை"( குடியரசு 8.7.1947)
இங்கு தனது கருத்தின் உறுதியையும் தனது இயக்கத்துடன் தலித் மக்கள் கொண்டுள்ள உறவையும் கூறும் அதே வேளையில் அம்பேத்கரின் தாக்கத்தை அங்கீகரிக்கவும் செய்கிறார். தலித் மக்கள் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வதை பெரியார் மிக இயல்பாகவே எடுத்துக்கொண்டார் என்று தோன்றுகிறது ஏனெனில் அவர்களிடம் அம்பேத்கர் அதிகம் ஆதர்சம் பெறுவது என்பது மிகவும் இயற்கையானதே, பல்வேறு படிநிலைகள் கொண்ட இந்த சாதிய அல்லது வர்ணாசிரம கட்டமைப்பில் ஒவ்வொரு அடுக்கிலும் உள்ளவர்களும் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகளின் ஆழம் வெவ்வேறு, சாதியக் கொடுமை உடன் தீண்டாமைக் கொடுமையும் அனுபவித்த மக்கள் அதே வலிகளை சுமந்து உயர்ந்த தலைவரை நெஞ்சுக்கு நெருக்கமாக கருதுவது இயல்புதான், பலதரப்பட்ட ஒடுக்குமுறைகளை ஒருசேர சந்திப்பவர்கள் அதன் தன்மையின் தனித்துவத்தை பிரகடனப்படுத்துவதில் என்ன தவறு?
அதை பெரியார் நன்கு உணர்ந்தே இருந்தார், அவரது நோக்கம் சாதி ஒழிப்பும் அதற்கான வலுவான கருத்தியலும், செயல்திட்டமும் மட்டுமே, அம்பேத்கர் அந்த வகையில் பெரியாரின் சாதி ஒழிப்பு எனும் அடிப்படை கொள்கையில் உற்ற தோழர். அப்படி இருக்க பெரியார் அம்பேத்கர் என இணைத்து பார்ப்பவர்களை குற்றம்சாட்டி பெரியார் என்ற ஒற்றை தலைமையை மட்டும் நீங்கள் ஏற்றுக் கொண்டால் போதாதா என்ற கேள்வியை எழுப்புவது குறுக்குசால் ஓட்டும் வேலை.
திராவிட இயக்கம் தலித் மக்களுக்கு ஆற்றிய பங்களிப்பை அவர்கள் அறிய வேண்டும் என்கிற எண்ணம் நியாயமானது, ஆனால் அம்பேத்கரை பெயரளவிற்கு லெட்டர் பேட் தலைவராக பயன்படுத்த நினைப்பது என்பது சாதி ஒழிப்பு பயணத்தில் பின்னடைவை மட்டுமே நமக்கு விளைவிக்கும். அம்பேத்கருக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு உள்ளதா என்று கேட்பவர்கள் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை ஏனெனில் அவர்களுக்கு சாதி ஒழிப்பு ஒன்றும் நோக்கமல்ல. இன்றைக்கும் எத்தனையோ தலித் மக்கள் வாழும் குடியிருப்புகளில் பெரியார் வீதிகள், பெரியார் நகர்கள் இருக்கத்தான் செய்கிறது அவர்கள் பெரியாரை நேசிக்கிறார்கள். அதில் விஷமப் பிரச்சாரம் செய்யும் சிறு குழுவினரை காரணம் காட்டி அம்பேத்கரின் ஆளுமையை சீண்டுவது தங்களுக்குள் ஊறிக்கிடக்கும் தலித் வெறுப்பை மறைத்து முற்போக்குச் சாயம் பூசிக்கொள்ளும் வேலை.
Post a Comment