கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் நடத்திய ஒரு மாநாட்டில் இந்திய ஒன்றியப் பிரதமர் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டு பேசுகையில், பண்டைய இந்தியாவில் தேர்தல் முறை இருந்தது என்பதற்கு குடவோலை முறையே சாட்சி என பெருமையோடு பேசினார்.
சில மாதங்களுக்கு முன் புதிய பாராளுமன்றக் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மோடி தமிழகத்தின் உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகளில் தமிழில் பஞ்சாயத்து தேர்தல் நடந்ததற்கான ஆதாரங்களும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் சபை நடந்தது பற்றிய தகவல்களும் கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது. அதில் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பதற்கானத் தகுதிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
குடவோலை மூலம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை; முற்போக்காளர்கள் - என்று மரியாதைக்குரிய மோடி அவர்கள் தொடர்ந்து புளகாங்கிதமாகப் பேசி வருகிறார்.
உத்திரமேரூர் கல்வெட்டில் காணப்படும் முறையிலான தேர்தல் இன்று இருந்திருந்தால் இன்றைய உச்ச பதவியில் இருக்கும் பிரதமர் மோடியை ஒரு கவுன்சிலராக கூட அந்த தேர்தல் முறை ஏற்றிருக்காது என்று அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு உத்திரமேரூர் கல்வெட்டை பற்றிச் சொன்னவர்கள் அதன் சடங்கை பற்றிச் சொல்லவில்லை போல.
உத்திரமேரூர் கல்வெட்டின் மூலம் குடவோலை முறை தேர்வு இருந்தது என்பதை அறிய முடிந்தது. ஆனால் அந்த தேர்தல் எப்படிப்பட்டது என்றால் ஒரு கிளி ஜோசியக்காரன் மொத்தமாகச் சீட்டுகளைக் கீழே இரைத்து ஒரு கிளியிடம் அந்த சீட்டில் ஒன்றே எடுக்கச் சொல்வது போலவே குடவோலை தேர்தல் முறை குலுக்கல் தேர்வு முறையாக இருந்துள்ளது.
குடவோலை முறை தேர்தலில் பங்கேற்க பல விதிமுறைகள் இருந்திருக்கின்றன. அதில்,
சபை உறுப்பினராக கோரப்படும் தகுதி:
• 1/4 வேலிக்கு (ஒன்னரை ஏக்கர்) மேல் இறை கட்டும் நிலம் வைத்திருக்கவேண்டும்; சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்கவேண்டும்; வேதத்திலும் சாஸ்திரத்திலும் தொழிலிலும் காரியத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்; நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்கவேண்டும்; மந்திர பிரமாணம் அறிந்து அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுபவனாக இருக்க வேண்டும்; 1/8 நிலமே பெற்றிருப்பினும் 1 வேதத்திலும் 4 பாஷ்யத்திலும் நிபுணராக இருக்கவேண்டும்.
குடவோலைத் தேர்தல் முறை என்பது ஒரு சாரார் அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய தேர்தல் முறையே தவிர ஒட்டுமொத்த மக்களின் சமூக தேர்தல் முறை கிடையாது. நல்ல ஆன்மா இருப்பவன் தான் தேர்தலில் நிற்க முடியும் என்று சொல்லி, பார்ப்பானைத் தவிர வேறு யாருக்கும் தேர்தலில் நிற்கும் தகுதி இல்லை என சொல்கிறது.
அத்துடன் கழுதை ஏறியோருக்கு சபை அங்கத்தினர்கள் ஆகும் உரிமை கிடையாது என்றும், மாட்டு மூத்திரம் குடிப்போர்க்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் சொல்கிறது குடவோலை முறை.
வேதம், சாஸ்திரம், பிரமாணம் என்கிற தகுதி அடிப்படையில் பார்ப்பனரல்லாதோரை வெளியேற்றும் குலுக்கல் முறை தேர்தலால் பார்ப்பனர்கள் மட்டுமே இருந்த பஞ்சாயத்துகளையும்,
மக்கள் சபை என்பதே பார்ப்பனர் சபை ஆகவும் இருந்ததைத் தான் நம் ஒன்றியப் பிரதமர் போற்றுகிறார்.
குடவோலை முறையில் இருந்த இந்திய அதிகாரத்தை, கலாச்சாரத்தை ஜனநாயக முறையில் மாற்றிய காலகட்டத்தில் தான் இன்றைக்கு இருக்கும் டெல்லி பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. அது வெறும் கட்டிடம் மட்டுமல்ல - இந்தியர்களுக்கு தேர்தல் முறை என்கிற அதிகாரத்தை ஓரளவுக்கு வழங்க அந்தக் கட்டிடம் உதவியது.
முழுமையான தேர்தல் ஜனநாயகத்தை இந்திய மக்களுக்கு வழங்கியது அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே.
புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில், மோடியின் பேச்சு, வரலாறு தெரியாதவர்கள் வரலாற்றுப் பாடம் எடுப்பது போல இருந்தது. அதையே அமெரிக்க அதிபர் பைடன் ஏற்பாடு செய்த நிகழ்விலும் வாந்தி எடுத்துள்ளது அவரின் அறியாமையை உணர்த்துகிறது.
Post a Comment