பெண்

 

 "முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை” என்பதற்குச் சற்றும் குறைவில்லாத சில பெண்ணிய கற்பனைக் கதையாடல்களை படிக்கும் சூழல் ஏற்படும்போது எனக்குள் ஏற்ப்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த கட்டுரை.

இன்குலாப் சொல்வார், “கடந்த கால பழைய பெருமிதங்கள் என்ற குப்பைகளை முதுகில் சுமக்காதீர்கள். கடந்த கால வரலாற்றில் இன்றைக்கு தேவையான சத்துள்ள வித்துள்ள கருத்தை மட்டும் பேசுங்கள்” என்று.
அந்தப் புரிதலின் அடிப்படையில், நான் அறிந்த தகவல்களின் துணையோடு பெண்களின் கடந்த கால வரலாற்றை  ஒவ்வொரு வாரமும் வரிசைப்படுத்த உள்ளேன்.

ஆப்ரிக்கா கண்டத்தில் எத்தியோப்பிய நாட்டில் 1974இல் 32 லட்சம் ஆண்டு பழமையான ஒரு மனித உடற்கூடு கிடைக்கிறது. அந்த எலும்புக் கூடானது, மனிதன்  குரங்காக இருந்த காலகட்டத்திற்கும் மனிதனாக பரிணாமம் அடைந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என  ஆய்வாளர்கள் அறிவித்தார்கள்.

அந்த எலும்புக்கூடு முழுமையாக இல்லாமல் மூன்றில் ஒரு பகுதி மட்டும் கிடைத்ததால் அது எந்த பாலினம் என்று தெரியாத சூழலில், அந்த எலும்பு கூட்டிற்கு  'லூசி' என பெயரிட்டு அவள்தான் உலகின் மூத்த முதல் பெண் என்று அறிவித்தார்கள்.

மேற்கத்திய உலகமானது முழுக்க முழுக்க ஆண் வழியை பின்பற்றக்கூடியது.  தங்கள் தேசத்தை  தந்தை நாடு என்றே அவர்கள் அழைப்பார்கள். அவர்களின் கடவுளர் தந்தையாக இருப்பர். அவர்களின் மதகுரு- தீர்க்கதரிசி தந்தையாக - ஆணாகத் தான் இருப்பார். அவர்களின் மனிதன் தோன்றிய புனித வரலாறும் உலகில் முதலில் ஆண்  தோன்றியதாகத் தான் நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல்
கற்கால மனிதன் குகைகளில் வரைந்த ஓவியம், சிலைகள் முதல் எழுத்துச் சித்திரங்கள் வரை அவை யார் வரைந்தார் என்று எவ்வித ஆதாரமும் இல்லாத சூழலிலும் அதை எவன் செதுக்கினானோ எவன் வரைந்தானோ என்று ஒரு ஆண் தான் வரைந்திருப்பான் என்றே  பொதுச்சமூகமும் அறிஞர்களும் முடிவு செய்வார்களே  தவிர  ஒருவேளை அதை ஒரு பெண் செய்திருக்கமாட்டாளா என்று கேட்கமாட்டார்கள்.

தமிழில் பெயர் தெரியாத எத்தனையோ சங்க இலக்கியப் பாடல்கள், எழுதியவர் யாரென்று தெரியாத நிலையில் அப்பாடலுக்கு ஆண் பெயரை சூட்டுவது அறிவுடமை என்று கருதுவது போல் தான். ஆண்களுக்காகத்
தான் இந்த உலகமே படைக்கப்பட்டது போன்ற கற்பனை கற்பிதங்கள் நிறைந்த உலகில் எந்தப் பாலினம் என்று தெரியாத ஒரு எலும்புக்கூடுக்கு ஒரு பெண் பெயரை அறிவியல் ஆய்வாளர்கள் சூட்டியது வியப்பு தான்.

இந்த உலகில் முதலில் ஆண் இனம் படைக்கப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லாத முழுமையாக நம்பிக்கை அடிப்படையிலான கருத்தை மானுடச் சமூகத்தை ஆதிக்கம் செய்யும்  மதங்களும் மதங்களின் தந்தையான  கடவுளரும் சொல்வதாக நமக்குச் சொல்லப்படுகிறது. கிருத்தவமும் இஸ்லாமும் முதலில் ஒரு ஆண் மண்ணில் படைக்கப்பட்டதாக சொல்கின்றன. பார்ப்பன இந்து மதத்திலும் ஆணை தான் முதலில் படைத்ததாகச் சொன்னாலும் மத்திய கிழக்கு மதங்களுக்கு மாற்றாக நான்கு வகை ஆண்களை படைத்ததாகச் சொல்கிறார்கள்.
வாயில் இருந்து பார்ப்பானையும், கையில் இருந்து சத்ரியனையும், தொடையில் இருந்து வைசியனையும் காலில் இருந்து சூத்திரனையும் என நான்கு வகை ஆண்களை பார்ப்பன இந்துக் கடவுள் படைத்ததாகச்  சொல்லப்படுகிறது.

கடவுளர்களின் நேரடிப் படைப்பாக ஆண்கள் மட்டுமே உள்ளனர். பெண்கள் படைப்பு என்பது மழைக்கு குடை பிடிப்பது போலவும் வெயிலுக்கு செருப்பு அணிவது போலவும்- ஆணின் தேவைக்காகவே பெண்கள் படைக்கப்பட்டார்கள் என்று மத்திய கிழக்கு புனிதநூல்கள் கூறுகின்றன. ஆக பெண்கள் கடவுளர்க்கு அந்நியமாகவும் ஒரு ஆணிற்கு ஆசை நாயகியாகவும் ஆணின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவராகவும் இருப்பது பெண்மைக்கு அழகு - அவ்வளவே! பார்ப்பன இந்து மதத்தில் வாயில் இருந்து, கையில் இருந்து, தொடையில் இருந்து, ஏன் காலில் இருந்து கூட பெண்கள் படைக்கப்படவில்லை. ஆனால் பிரம்மாவின் காலில் பிறந்ததற்கு ஒப்பான தகுதியைப் பெண்களுக்கு கொடுக்கிறது இந்து மதம்.

19ஆம் நூற்றாண்டில் தோன்றிய நவீன டார்வின் அறிவியல் கடவுளரால் கற்பனை செய்யக்கூட முடியாத கடந்து போன, கடந்த கால, உலக வரலாற்றை நமக்களித்தது. அதன் அறிவியல் வளர்ச்சிதான் தான் லூசியை நமக்கு அறிமுகப்படுத்தியது.

மதத்தின் கற்பனையைக் கடந்து குரங்கு இனத்தில் ஒரு வகையாக இருந்த நம் மூதாதையர்கள் நான்கு கால் பிராணி போல்  நடப்பதற்கு பதில் இரண்டு காலில் நடக்க தீர்மானித்தார்கள். ஏன் அப்படி தீர்மானித்தார்கள் என்ற நம்மால் அறியமுடியவில்லை. அந்த முடிவுதான் இன்று மனிதனின் அத்தனை வளர்ச்சிக்கும் ஆணிவேர் என்று கருதலாம்.

இரண்டு கால் பிராணியான  மனிதனுக்கு கால மாற்றத்திற்குத் தகுந்தாற் போல்  பல்வேறு  பெயர்களை ஆராய்ச்சியாளர்கள் லத்தீன் மொழியில் வைத்தார்கள் சேப்பியன்ஸ், நியான்டர்தல்,  ஹோமோ எரெக்டஸ், ஹோமோ சோலோஎன்சிஸ், ஹோமோ டெனிசோவா, ஹோமோ ரூடால்ஃபென்சிஸ் என்று  பல்வேறு பெயரில் பல்வேறு உடலமைப்புகளில் மனித இனம் வாழ்ந்துள்ளது.

மனிதன் இரண்டு கால்களைக் கொண்டு நேராக நிமிர்ந்து நடப்பது அவனுக்குரிய தனித்துவமான பண்பாகும்.  நிமிர்ந்து நிற்கும் போது விலங்குகள் அல்லது எதிரிகள் யாரேனும் வருகிறார்களா அல்லது ஒளிந்து இருக்கிறார்களா என்று பார்க்கவும்,  நடக்கும் போது கற்களை எறிய,  பொருட்களைச் சுமக்கக் கைகளைப் பயன்படுத்தினார்கள். இந்தக் கைகளால் எவ்வளவு அதிகமான விஷயங்களைச் செய்ய முடிந்ததோ, அந்தக் கைகளுக்கு உரியவர்கள் இயற்கைக்கு மாறாக நிமிர்ந்து நடந்து செல்வதற்கு பெண்கள் பெரும் துயரத்துக்கு ஆளானார்கள் என சேப்பியன்ஸ் என்ற புத்தகத்தில் யுவால் நோவா ஹராரி சொல்கிறார்.

நாலு கால்களில் நடக்கும் போது பெண்களின் கர்ப்பப்பையில் இருந்து குழந்தை வெளிவருவது இயல்பாக மற்ற கால்நடை மிருகங்களுக்குப் போலவே இருந்தது. ஆனால் இரண்டு காலில் நேராக நிமிர்ந்து நடந்து செல்லும்போது பெண்களின் இடுப்பு அமைப்பு  குறுகலான வழியாக மாறியதன் விளைவாக, பெண்ணின் பிரசவ, பிறப்புப் பாதை குறுகியது. அதனால் குழந்தையின் தலை வெளியேற சிரமமானது.  இது  பெண்களுக்கு ஒரு மாபெரும் ஆபத்தாக உருவெடுத்தது.

உரிய காலத்திற்கு முன்னதாகவே குறைப் பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையின் மூளையும் தலையும் சிறியதாகவும் நெகிழ்வுத் தன்மையோடும் இருக்கும். அதனால் உரிய காலத்திற்கு முன்பாகவே பெண்களுக்குப் பிரசவம் நிகழ இயற்கை தேர்ந்தெடுத்தது.
இதற்காக பெண்கள் ஏராளமான இழப்பைச் சந்தித்து, மனித இனத்தின்  அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு மூலகாரணியாக ஆனார்கள்.

இந்தப் பிறப்பு விடயத்தில், பிற விலங்குகளை ஒப்பிடுகையில் மனிதர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்த நிலையில் குழந்தைகளின் முக்கிய நரம்பு மண்டலங்கள் முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருந்தன.
பிறந்த உடனே ஒரு குதிரைக் குட்டி எழுந்து நடக்க முடிவது போல்,  பிறந்த சில வாரங்களிலே ஒரு பூனைக் குட்டி, தன் தாயை விட்டு தனியாக உணவு தேடிப் போவது போல் இல்லாமல், மனிதக் குழந்தைகள்  பெற்றோர்  பராமரிப்பிலும்  பாதுகாப்பிலும் பல ஆண்டுகள்  சார்ந்து இருந்தனர்.

அரை குறை உடலமைப்போடு மனிதக் குட்டி பிறந்ததாலே, பிற உயிரனங்களுக்கு இருக்கும் இயற்கையான உள்ளுணர்வு மட்டும் இல்லாமல் செயற்கையாக பல்வேறு கற்பிதங்களை மனிதக் குட்டிகளுக்கு கற்பிக்க முடிந்தது. அதாவது உணவு, காமம் என்பது எல்லா உயிரனங்களுக்கு இருப்பது போலவே மனிதனுக்கும் இருந்தாலும்,  மதத்தை, கடவுளை, சாதிப் பெருமையை, இனப்பற்றை - கற்பித்தல் என்றளவில் மேற்சொன்ன குறைப்பிரசவம் காரணமாக இருந்தது.
“இப்படியும் இருக்குமா? இதெல்லாம் சாத்தியமா?” என நம் மூளை சிந்திக்கும். “ஆம்! அதற்கு வாய்ப்பிருக்கிறது” என்கிறார் சார்லஸ் டார்வின்.

டார்வின் எழுதிய 'உயிரியல் கொள்கைகள்’  ( principle of biology ) என்ற புத்தகத்தில், லத்தீன் அமெரிக்காவின் கடற்பயணத்தில் ஒரு தீவிலிருந்து மற்றொன்றுக்கு  டார்வின் பயணித்த போது அங்கு இருக்கும் குருவிகள் ஒவ்வொன்றின் அலகு(மூக்கு)ம் அந்த மண்ணின்  வளங்களுக்கு  பயன்படுத்துவதற்கு ஏற்ப இருந்தன.  ஒரு தீவில் உள்ள குருவிக்கு அலகுகள் சிறியதாக, உறுதி மிக்கதாக, கொட்டைகளை உடைக்க ஏற்ற விதத்தில் இருந்தது.  அதே நேரத்தில் அடுத்த தீவில், அதே குருவியின் அலகுகள் மெல்லியதாய் பிளவுகளில் இருந்து உணவை எடுப்பதற்கு ஏற்றவாறு இருந்தன. இதை வைத்து தான் பறவைகள்  முதல் மனிதன் வரை 'கடவுள்' படைக்கவில்லை. மாறாக ஒரு பொருளியல் சூழலில்  அவையே படைத்துகொண்டன என்று டார்வின் சிந்திக்கக் காரணமாயிற்று.
டார்வின் பறவை பற்றி சொன்னது போல தான் மனிதன் இரு கால்களில் நடக்க ஆரம்பித்த போது  அந்த சூழலுக்கு ஏற்ற குறைப்பிரசவம் மூலம் தன் இனத்தைப் படைத்துக் கொண்டான்.

கடவுள் முதலில் ஒரு ஆணைப் படைத்தார். பிறகு அவனுக்குத் துணையாக ஒரு பெண்ணைப் படைத்தார் என்ற மதங்களின் கற்பிதங்களைக் கட்டுடைத்து மனித இனம் இனவிருத்தி அடைவதற்குப் பெண்களே காரணம் என்றது அறிவியல்.
அப்படிப்பட்ட பெண்கள் ஆதிக்க சக்தியாக இல்லாமல் எப்படி அடிமையாக்கப் பட்டார்கள் என்று அடுத்த பாகத்தில் பார்ப்போம்.


நன்றி!
ஊரும் உணர்வும்

4 Comments

  1. வாவ் என்று சொல்ல வைக்கும் கட்டுரை... மிக அரிய தகவல்கள்... மேலும் தொடரவிருக்கும் பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை தோழர்

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். நன்றி.

    ReplyDelete
  4. நிறைய கற்றுக் கொண்டேன்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post