சிவில் சர்வீஸ் தேர்வு முறையில் தமிழகத்தின் நிலை.


எழுத்து- ஊரும் உணர்வும்


“தமிழகத்தின் தலைமைச் செயலகப் பதவிகள், மாவட்ட ஆட்சியர் பணி, வருவாய்த்துறை பணிகளில் மலையாளிகளையும் கர்நாடகர்களையும் நியமிப்பது வாடிக்கையாகிவிட்டது.

தமிழே தெரியாதவர்களிடம் நிர்வாகத்தைக் கொடுக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சி தமிழ்மொழியை ஆதரிக்கிறது என எப்படி சொல்லமுடியும்?
உயர்திரு முதலமைச்சர் காமராஜர் இந்த விடயத்தில் கவனம்கொள்வது பெருமைக்குரியதாகும்..”

என்று 22.4.1955 பெரியார் அறிக்கை விடுகிறார்.



1955இல், வெறும் பதினைந்து விழுக்காடு அளவுக்கே தமிழகத்தில் எழுத்தறிவு இருந்திருக்ககூடிய காலகட்டத்தில், பிறமொழி அதிகாரிகளை நம் மாநிலத்தில் நியமிப்பதை பெரியார் கடுமையாகக் கண்டிக்கிறார். 

இன்று 2022இல் 90 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. அத்தோடு இந்தியாவின் கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக இருக்கும் மாநிலத்தில் அண்டை மாநிலத்தவர்களைத் துணைவேந்தராக நியமிக்கும் கொடுமை கடந்த அதிமுக ஆட்சியில் நடந்தது.

பற்றாக்குறைக்கு மாநில அரசின் அரசு வேலைத் திட்டத்தையும், நம் மாநிலத்தவர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தும் சட்டத்தையும் தர்மயுத்த நாயகன் ஓ.பி.எஸ் தளர்த்தி, கடந்த ஆட்சியில் பிறமாநிலத்தவர்க்கு தாரை வார்த்தார். அதாவது தமிழக இளைஞர்களுக்கு பச்சைத் துரோகத்தைச் செய்தார்.

அரசு வேலை அண்டை மாநிலத்தவர்க்கு மட்டுமே எனக் கொள்கையாகவே வைத்திருக்கும் அ.தி.மு.க. மாறி, தி.மு.க. அரசு பதவி ஏற்ற பின் தான் தமிழ்நாட்டு அரசுப் பணி தமிழ் நாட்டு மக்களுக்கே என்ற நிலை உருவாகி, இப்போது தமிழ் நாட்டுத் தேர்வாணய தேர்வும் நடந்துள்ளது.

நம் மாநில அரசின் பதவி நம் மாநிலத்தவர்க்கே என நாம் கோரிக்கை வைக்கும் நிலையில், இன்னொரு பெரிய ஆபத்து ஒன்றிய அரசு மூலமாக நமக்கு நெருங்குகிறது.

அதாவது தேர்தல் மூலம் வெற்றி பெற்று யார் இந்நாட்டில் ஆட்சி செய்தாலும் இந்த நாட்டை வழி நடத்துவது என்னவோ அரசு அதிகாரிகளே! அதுவும் சிவில் சர்வீஸ் மூலம் வரும் ஆட்சியர், தலைமைச் செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள் தான் இந்த நாட்டையே வழிநடத்துவார்கள்.

இந்த நாட்டின் அதிகாரம் முழுமையும் முழுக்க முழுக்க அரசுத்துறை அதிகார வர்க்கமே தீர்மானிக்கிறது. தேர்தல் அதிகாரம் என்பது வெறும் அய்ந்தாண்டு மட்டுமே. ஆனால் இவர்களோ வாழ் நாள் முழுக்க அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பார்கள்.

இந்த நிலையில், என்ன ஆபத்து வரப்போகிறது என்றால் ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீஸ் பணிக்கு இந்தியா முழுக்க லட்சணக்கான மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். பிரைமரி, மெயின்ஸ், நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலையில் தேர்வெழுதி வெறும் ஆயிரத்துக்குள் வெற்றி பெறுவார்கள். இந்தியாவின் முதல் 24 உயர் அதிகாரிகளை, அதாவது சிறந்த அறிவாளிகளைத் தேர்வு செய்வதற்கான மதிப்புமிக்க தேர்வாக, யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வு கருதப்படுகிறது.

அப்படி கருதப்படும் தேர்வில் வெற்றி பெறும் சிவில் சர்வீஸ் மாணவர்கள் தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் என்று இந்தியா முழுக்க அதிகாரிகளாக அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் தான் இந்தியாவை, இந்திய மாநிலங்களில் ஆட்சி செய்பவர்கள்.

அப்படிப்பட்ட மிக முக்கியமான உயர் பதவிக்கு தமிழகத்திலிருந்து கணிசமான நபர்கள் கடந்த காலங்களில் தேர்வாகி வந்தார்கள். 
 2013ஆம் ஆண்டு சிவில் பணிக்கு தமிழகத்தில் இருந்து 150 பேர் தேர்வானார்கள். அது இந்திய சராசரியில் 13விழுக்காடு இருக்கும். அடுத்து 2014இல் மோடி பதவியேற்ற பிறகு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில், 13விழுக்காடாக இருந்த தேர்ச்சி, 10விழுக்காடாக சரியத் தொடங்கியது.

கடந்த எட்டு ஆண்டுகளில் ஒவ்வோரு ஆண்டும் இந்தியக் குடிமைப் பணி என்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ் நாட்டின் தேர்ச்சி விகிதம் சரிந்து இன்று 2021-2022 ஆண்டில் வெறும் 4 விழுக்காடாக அதாவது 26 பேர் என்ற நிலைக்கு வந்துள்ளது. அதாவது 2013இல் 150பேர் என்ற நிலை 2022இல் 26என்ற நிலைக்கு மேலும் சரிந்துள்ளது.


இப்படி தேர்ச்சி விகிதம் சரிவதற்கு தமிழ் நாட்டின் கல்வி முறை தான் காரணம் என சில அரைவேக்காட்டு அறிவிலிகள் ஏதோஆராய்ந்து சொல்வது போல் சொல்வார்கள். அந்த ஓப்பீடு எதை வைத்து, எந்த மாநிலத்தோடு ஒப்பிட்டு என எதுவும் இருக்காது. வியாக்கியானம் மட்டுமே இருக்கும்.

இந்தத் தேர்ச்சி விகிதம் குறைந்தால் தமிழகத்திற்கு, தமிழ்நாட்டு அரசியலுக்கு என்ன பிரச்சனை வரும் எனக் கேட்டால், நிச்சயம் ஒரு பேராபத்தை சந்திக்க வேண்டிவரும். நாம் இன்னும் பத்தாண்டுகளில் சந்திக்க நேரிடும். ஏனென்றால் தமிழகத்தில் சிவில் சர்வீஸில் தேர்வு எழுதிய தமிழர்கள் நிறைய பேர் தமிழகத்தின் ஆட்சிப் பணியில் இப்போது இருக்கிறார்கள். உதாரணத்திற்கு இறையன்பு, உதயசந்திரன் என தமிழ்நாட்டில் சரிபாதி பேர் இருக்கிறார்கள்.

இப்படி ஆண்டுக்கு 20 பேர், 25 பேர் மட்டும் என்று தமிழக்கத்தில் இருந்து தேர்வானால், இன்னும் பத்தாண்டில் தமிழகம் முழுக்க ஆட்சியாளர்களாக, காவல்துறை உயர் அதிகாரிகளாக, அரசு துறைச் செயலாளராக, வட இந்திய அதிகாரிகள் மட்டுமே பெரும் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

சரி அப்படி அவர்களும், அவாளும் ஆதிக்கம் செலுத்தினால் என்னவாகும் எனக் கேட்டால்..


இந்திய ஒன்றிய அரசிடம் இருந்து எப்போதும் தனித்த கொள்கையைக் கொண்ட மாநிலமாக தமிழ் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, இருந்து வருகிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம், ஒற்றைக் கலாச்சாரம் என்பது வட இந்திய கருத்து என்றால், அதற்கு நேர் எதிராக இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் ஓர் துணைக்கண்டம் என்ற குரல் தமிழகத்தில் இருந்து ஒலிக்கும். இந்தியாவுக்கு என்று தேசிய மொழியாக இந்தியைத் திணித்த போது, அதைக் கடுமையாக எதிர்த்து பல்வேறு மொழி மக்கள் வாழும் நாட்டில் ஒரு மொழி திணிப்பைக் கடுமையாக கண்டித்ததோடு, இந்தித் திணிப்பை, ஆதிக்கத்தை முற்றிலும் விரட்டிய மாநிலம் தமிழ் நாடு.

மொழிப் பிரச்சினை முதல் மாநில உரிமை, மாநில சுயாட்சி என்று ஒன்றிய அரசுக்கு எதிராகவே தமிழ் நாடு இயங்கியதால் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மற்ற இந்திய மாநிலங்களை விட தமிழ் நாடு முன்னேறிய மாநிலமாக மாறியது. அதாவது இந்தி படிக்காததால் ஏற்பட்ட முன்னேற்றமாக இவை இருப்பதால் இந்தியா, இந்து, இந்தி என்ற வட இந்திய இந்துத்துவக் கருத்தாக்கம் தமிழகத்தில் தடம் பதிக்க தடுமாறுகிறது.

2014இல் இந்துத்துவா மோடி ஆட்சி பதவி ஏற்றது முதல் இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலம்; இந்தியாவின் அடையாளம் என்றால் இந்தி மட்டுமே என்ற பார்ப்பனக் கொள்கையை நடைமுறைப் படுத்த பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டது. அதில் ஒன்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ் தெரியாதவர்கள் கூட தமிழ் நாடு அரசு வேலைக்கு தேர்வு எழுதலாம் என்ற ஆணை பிறப்பிக்க வைத்து தமிழர்களின் அரசாங்க வேலை வாய்ப்பைப் பறித்தது. 

இந்திய ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பில் இந்தி தெரியாதவர்களுக்கு வேலை இல்லை என்ற எழுதப்படாத ஓர் உத்தரவு மூலம் கடந்த ஆறாண்டாக தமிழகத்தில் வங்கி, தபால் அலுவலகம் மின்துறை, மெட்ரோ ரயில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றிய அரசு நிறுவனங்களிலும் இந்தித் திணிப்பு சத்தமில்லாமல் நடந்தேறியது. அது சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.

தமிழகத்தில் படித்த சிவில் சர்வீஸ் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் ஆண்டாண்டுக்கு குறைந்தது. ஆனால் தமிழகத்திற்கு நேர் எதிராக, வடமாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவில் இயங்கும் “சங்கல்ப்” என்ற சிவில் சர்வீஸ் பயிற்சி அகாடாமியில் பயின்றவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. 

வட மாநிலங்கள் முழுக்க “சங்கல்ப்” ஆக்கரமித்துள்ளது. சங்கல்ப் அகாடமி மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்கள் ஆலோசனை அல்லது தேசபக்தி வகுப்புகளை ஆண்டுதோறும் எடுப்பார்கள். அப்படிப்பட்ட அகாடமியில் பயின்று, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்களின் விகிதாச்சாரம் மோடி ஆட்சிக்கு வந்த பின் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களில் சுமார் 60 விழுக்காடு சங்கல்ப் அகாடமியில் படித்தவர்கள் என்கிற தகவல் தெரியவருகிறது.

இந்த சங்கல்ப் அகாடமியில் படித்து இந்திய ஆட்சிப் பணிக்கு போனவர்களில் ஒருவர் தான் பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை. சிவில் சர்வீஸ் முதல் இரண்டு தேர்வுகளில் குறைந்த மார்க் வாங்கிய அண்ணாமலை, நேர்முகத் தேர்வில் அதிக மார்க் பெற்றவர்!

இப்படி நேர்முகத் தேர்வில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் இருக்குமா எனக் கேட்பர்களுக்கு ஒரு சின்ன தகவல். கடந்த ஆண்டு வரை டெல்லி கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற பி.எஸ்.பாஸ்ஸி - இவர் தான் டெல்லி ஜெ.என்.யுவில் ஏ.பி.வி.பி. ஏற்படுத்திய கலவரத்தில் கண்ணையாகுமாரைக் கைது செய்தவர். அத்துடன் கெஜ்ரிவால் அரசுக்கு ஏராளமான தொல்லை கொடுத்தவர். அப்படிப்பட்டவர் டெல்லி கமிஷனர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று, ஒரே மாதத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கபபடுகிறார். அதாவது இந்தியாவின் ஆகச் சிறந்த அறிவாளிகளைத் தேர்ந்தெடுக்க, பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் என ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரான அசுதோஷ் விமர்சித்த பாஸ்ஸி, தேர்வாகி, அண்ணாமலை போன்ற ஆகச்சிறந்த அறிவு மேதைகளை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்கப் போகிறார்.

இப்படிப்பட்ட நிலை இன்னும் எந்தவித விமர்சனமும் இல்லாமல் நீடிக்கும் பட்சத்தில், வட இந்திய அதிகார வர்க்கம் முழுக்க தமிழகத்தில் அதிகாரம் செய்தால், அது திராவிட இயக்கத்தின் மூலமாக, பெரியாரின் கருத்துரை மூலக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தை முற்றிலும் சிதைத்து சாதியும் சனாதனமும் ஹிந்தியும் ஆதிக்கம் செலுத்தும் அவல நிலையை தமிழகம் சந்திக்க வழிவகுக்கும்.

Post a Comment

Previous Post Next Post