பெரியார் முதல் முதலில் நடத்திய குடியரசு இதழின் 25ஆண்டு மொத்த இதழ்களையும் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளாக திராவிடர் கழகம், வெளியிட்டுள்ளார்கள். அதில் முப்பதாவது தொகுதியில் 48ஆம் பக்கத்தில் ஒரு பெட்டிச் செய்தியில் தமிழ் நாடகத் துறையில் கோலோச்சிய டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான டி.கே.சண்முகம் மனைவி 02.11.43 அன்று இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி இருந்தது.
டி.கே.சண்முகத்தின் உறவினர் ஒருவருக்கு இச்செய்தியை நான் அனுப்பி வைத்தபோது, அந்த செய்தியைப் பார்த்து மகிழ்ந்ததோடு வேறொரு தகவலும் சொன்னார்.
அதே தகவல் டி.கே.சண்முகம் தன் வராலாறாக எழுதியுள்ள 'என் நாடக வாழ்க்கை’ புத்தகத்தில் இருப்பதாகச் சொல்ல, உடனே கூகுள் இணையத்தில் தேடியபோது ‘என் நாடக வாழ்க்கை’ புத்தகம் கிடைத்தது.
டி.கே.எஸ் தன் வரலாற்றை காலவரிசைப்படி எழுதியிருந்ததால் 1943 காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை 'பெரியாரின் பெருங்குணம்'என்ற தலைப்பிட்டு எழுதி இருந்தார். அதில் பெரியார் எப்படிப்பட்டவர் என்பதை விவரித்திருந்தார்.
டி.கே.சண்முகத்திற்க்கு திருமணமான சில மாதங்களிலே அவர் துணைவியார் மீனாட்சி அம்மையாருக்கு காசநோய் ஏற்படுகிறது, (அந்த கால காசநோய் என்பது இன்றைய கொரோனா போன்றது. நோயாளியை வீட்டிலே தனிமைப் படுத்திடுவார்கள்) டி.கே.சண்முகம் ஒரு பக்கம் நாடக நடிப்பும், மறுபக்கம் தன் துணைவியார்க்கு வைத்தியமும் பார்க்கிறார்.
வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்து ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் பெருந்துறையில் உள்ள ஓர் மருத்துவனையில் தங்கி மீனாட்சி அம்மையாருக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. அங்கும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அத்துடன் மருத்துவரும் இனி உங்கள் மனைவி ஒரு வாரம் கூட பிழைக்க மாட்டர்கள் என்று கூறியதோடு அவர்களை வீட்டுக்கு அழைத்துப்போகவும் சொல்கிறார்.
அந்தகால நாடகத்துறையில் இருப்பவர்கள் எந்த ஊரில் நாடகம் நடத்துகிறார்களோ அதுதான் அவர்கள் ஊர் என்ற நிலை இருந்தது. மீனாட்சி அம்மையார் உயிருக்கு மருத்துவர் தேதி அறிவித்த காலகட்டத்தில் டி.கே சண்முகத்தின் நாடகக் குழு ஈரோட்டில் தங்கி இருந்தார்கள்.
டி.கே.எஸ் சகோதரர்களின் நாடகக் குழு அங்கிருந்த ஈரோடு வீட்டில் மீனாட்சி அம்மையாரை தங்க வைப்பது சரியாக இருக்காது என்று வேறொரு வீட்டை ஈரோட்டில் தேடினார்கள். ஆனால் யாரும் வீடு கொடுக்க முன்வரவில்லை அதுவும் காசநோயால் பாதிக்கப்பட்டவருக்கு வீடு கொடுக்க யார் தான் முன்வருவார்கள்?!
இந்நிலையில்தான் டி.கே சண்முகம் பெரியாரின் தமிழன் அச்சகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு தமிழகத்தில் பிரபலமாக ஓடிய ‘அவ்வையார்’ நாடகம் நூல் வடிவில் அச்சாகிக்கொண்டு இருந்தது.
இந்த அவ்வையர் நாடகத்தில் டி.கே.சண்முகம் நடித்த நடிப்பால் தான் டி.கே.சண்முகமாக இருந்தவர் 'அவ்வை டி.கே.சண்முகமா’னார். அத்துடன் டி.கே.எஸ் நடிப்பை பார்த்த திரு.வி.க இந்த நடிகனுக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என்று பாராட்டினாராம்.
தமிழன் அச்சகத்தின் துணையாசிரியர் புலவர் செல்வராஜிடம் தன் வேதனையை டி.கே சண்முகம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த நேரம் பெரியார் அச்சகத்திற்கு வருகிறார். வந்தவர், “உங்க துணைவி எப்படி இருக்கிறார்கள்?” என்று நலம் விசாரிக்க, டி.கேசண்முகம் வேதனையோடு தன் துணைவியின் நிலைமையை கூறி இங்கு(ஈரோட்டில்) தங்குவதற்கு ஒரு வீடு கிடைக்கவில்லை என சொல்ல, உடனே அவசரம் அவசரமாக பெரியார் ஒரு சாவியை எடுத்து டி.கே.சண்முகத்திடம் கொடுத்து “பக்கத்தில் தான் நம்ம வீடு இருக்கிறது; சுயமரியாதைச் சங்கத்திற்காக வாங்கியது: இப்போதுதான் சுண்ணாம்பு அடித்து, சுத்தமாக இருக்கிறது; நீங்கள் போய் தங்கிக் கொள்ளுங்கள்.” என்று சொல்லிவிட்டு பெரியார் சென்றுவிட்டதை அந்தப் புத்தகத்தில் டி.கே.சண்முகம் பதிவு செய்துள்ளார்.
பெரியார் கருமியானவரா கருணையானவரா என்பதை இந்தத் தகவல் நமக்கு உணர்த்தும். அதேபோல இந்தத் தமிழ்ச் சமூகத்தில் பெரியார் செய்த தொண்டு , பதிவு செய்யப்பட்டதை விட பதிவு செய்யப்படாத தகவல்களே ஏராளமாக இருக்கின்றன.
தமிழை நீசபாஷை என்று பெரியார் சொன்னதாகக் கொக்கரிக்கும் வீணர்களுக்குப் பெரியார் தன் அச்சகத்திற்கு 'தமிழன்' என்று பெயர் வைத்திருந்தார் என்றால் அவருடைய தமிழ் மீதான பற்றை நாம் உணரமுடியும்.
அதேபோல டி.கே. சண்முகத்தின் நடிப்புத் திறமையை பெரியார் பலமுறை பாராட்டி இருக்கிறார். அதேபோல அறிஞர் அண்ணாவும் டி.கே.சண்முகத்தின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார் என்பதை 1967ல் முதலமைச்சரான பின் அடுத்த ஆண்டிலே டிகே.சண்முகத்திற்கு எம்.எல்.சி பதவியை கொடுத்து அழகு பார்த்ததில் தெரிந்துகொள்ளலாம். கலைஞரும் டி.கே. சண்முகம் இறந்த பின் அவர் வசித்து வந்த தெருவிற்கு அவர் நினைவாக 'அவ்வை சண்முகம் சாலை' என்று பெயர் சூட்டினார்.
அவ்வை சண்முகம் சாலையில் தான் தற்போது அதிமுகவின் தலைமையகம், இந்தியன் வங்கியின் தலைமையகம் ஆகியவை இருக்கின்றன.
இவையெல்லாம் குடியரசு இதழில் வந்த பெட்டிச் செய்திக்குப் பின்னால் உள்ள வரலாறு.
Post a Comment