சபாஷ் தமிழ்நாடு



தமிழ்நாட்டில் சமீப காலம் வரை பார்ப்பன ஆதிக்கத்தில் தலைசிறந்து விளங்கிய ஊர் சேலமாகும்.

சேலத்தின் அடையாளமாக, விஜயராகவாச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார்(ராஜாஜி) P.V நரசிம்மய்யர் , பார்ப்பனர்களின் செல்லப் பிள்ளையாக இருந்த வரதராஜுலு நாயுடு போன்றவர்களே இருந்தது வந்தார்கள்‌. சேலம் ஆரியர்களின் கோட்டையாக இருந்து வந்தது. ஆனால் இன்று தமிழகத்திற்கு வழிகாட்டும் நகரமாக ஆகி வருகிறது.

சேலம் முனிசிபல் சேர்மன் ஒரு சுத்தத் தமிழராக இருந்து வருகிறார். அது நமக்கு பெருமையே ஆகும். அடுத்து சேலத்தில் பெரிய வக்கீல்களாக தோழர் சின்னையாப்பிள்ளை, கெட்டோ கணேசன், சங்கரன் வேணு என்கிற தமிழர்கள் இருக்கிறார்கள். இத்துடன் கூட்டுறவு ஸ்தாபனத்தில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதைவிட முக்கியமானது 'லிடரரி சொசைட்டி' என்னும் வாசகசாலை இன்று தமிழர் ஆதிக்கத்தில் இருக்கிறது.

கடந்த நாற்பது, ஐம்பது, அறுபது வருட காலமாக ஆரியர் ஆதிக்கத்தில், அதாவது நம் கோயில்களின் கர்ப்பக் கிரகமும், மகாமண்டபமும் எப்படி பார்ப்பனர் தவிர மற்றவர்கள் நுழையாதபடி தடுக்கப்பட்டு இருந்து வருகின்றனவோ, அதேபோல தமிழனுக்கு நிர்வாகத்தில் இடமே இல்லாமல் சேலம் லிடரரி சொசைட்டி இருந்து வந்தது.

அப்படிப்பட்ட ஸ்தாபனம் சென்ற வாரத்தில் அடியோடு தமிழர் கைக்கு வந்துவிட்டது. ஒரு பார்ப்பனர் கூட நிர்வாக சபையில் இல்லாமல் தேர்தல் முடிவுகள் வருகிறது. இது பார்ப்பனர்களுக்கு மாத்திரம் படிப்பினை அல்லாமல் வவ்வால் போல் இருக்கும் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஓர் படிப்பினையாகும்.

அங்கங்கு பார்ப்பனரல்லாத வக்கீல் சங்கம் போன்றவைகள் ஏற்பட்டால்தான் தமிழகத்தில் திராவிட நீதிபதிகள் திராவிட கலெக்டர்கள் தாராளமாக ஏற்படும்படி செய்யலாம்.

மேற்படி செய்திகள் பெரியார் 04.03.1944இல் குடியரசு இதழில் எழுதிய தலையங்கத்தில் இடம்பெற்றவை.

1944இல் தமிழகத்தில் ஒரு நகரத்தில் பார்ப்பனரல்லாதோர் முழுமையாக ஆதிக்கம் (அ) சம உரிமை அடைந்ததை, பெரியார் 'சபாஷ் சேலம்' என்று தலையங்கத்தில் கொண்டாடுகிறார். இன்று 2021ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும் அதற்குப் பிறகான அரசும் நிர்வாகமும் பெரியார் கண்ட கனவினை நிறைவேற்றும் விதமாக அமைந்திருக்கிறது.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பார்ப்பனர்கள் கிடையாது. அதேபோல்தான் அரசின் உயர் பதவிகள் முழுக்க தமிழர்கள் அல்லது பார்ப்பனர் அல்லாதவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிர்வாக முறையை இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு உருவாக்கி இருக்கிறது. இது நிச்சயம் பெரியாரைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் பெரியார் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு கண்டாரோ, அது ஓரளவு நிறைவேறி இருக்கிறது.

இந்திய ஆட்சியும், அரசு அதிகார மட்டமும், சுதந்திரம் அடைவதற்கு முன்னும் சரி, பின்னும் சரி முழுக்க பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்தது இன்றும் இருக்கிறது. அதில் ஒரு சிறு தளர்வை இந்திய அளவில் தமிழகம் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தத் தளர்வை நிச்சயம் பார்ப்பனியமும் இந்துத்துவமும் உயர்சாதி மனோநிலையும் அனுமதிக்காது. புதிதாக பதவியேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் ஏராளமான நெருக்கடிகளை, தொல்லைகளை ஏற்படுத்திய வண்ணமே இருக்கும். முகமையான ஊடகங்கள், திமுக எதில் சிறு தவறு செய்யும் என்று கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பெரியாரின் வகுப்புவாரி அதிகாரத்துவம் , சமூக நீதி என்று இந்த அரசின் செயல்பாட்டை இப்போது பெரியார் இருந்து பார்த்திருந்தால் நிச்சயம் “சபாஷ் தமிழ்நாடு” என்று தலையங்கம் எழுதி இருப்பார்.

Post a Comment

Previous Post Next Post