என்னை மிரட்சியடைய வைத்த தேர்தல் அறிக்கை!!
- குண சந்திரசேகர்
இது தேர்தல் காலம்(2021 ஏப்ரல்). ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றன. வெற்றியைத் தீர்மானிப்பதில் அதி முக்கியப் பங்காற்றும் தேர்தல் அறிக்கை என்பது, மக்களைக் கவரக்கூடிய வாக்குறுதிகளால் நிரப்பப்படுவது அல்ல; மாறாக
ஓர் அரசியல் கட்சியினுடைய சமூகப் புரிதலின் வெளிப்பாடாகவே அதைப் பார்க்க வேண்டும்.
தான் வாழும் சமூகத்தைப் பற்றிய வரலாற்று ரீதியான புரிதலும் அதனோடு சமகால சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளைப் பொருத்திப் பார்த்து, கட்சி ஏற்றுக் கொண்டுள்ள கொள்கைகளின் அடிப்படையில் அதற்கான தீர்க்கமான தீர்வுகளை வாக்குறுதிகளாக முன் வைக்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் தெளிவுபடுத்த வேண்டும்.
இத்தகைய சிறப்பம்சங்களுடனான தேர்தல் அறிக்கையை உருவாக்குவது சாத்தியமா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக, அத்தகைய மிகச் சிறப்பான தேர்தல் அறிக்கையை நீங்கள் பார்க்க முடியும்! அதுதான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 1951 ஆம் ஆண்டு அனைத்திந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கை. 'தலித் முரசு' அண்மையில் இவ்வறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து 'டாக்டர் அம்பேத்கர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை' என்ற பெயரில் சிறு நூலாக வெளியிட்டுள்ளது.
தமிழில் வெறும் 24 பக்கங்களும் ஆங்கிலத்தில் 17 பக்கங்கள் அளவேயுள்ள இவ்வறிக்கை அப்படி என்ன தான் சொல்கிறது?
அம்பேத்கரின் அறிக்கை முதலில் கட்சியின் கோட்பாடுகளைப் பட்டியலிடுகிறது. இந்தியா மட்டுமல்ல உலகில் உள்ள எந்த நாட்டிலும் ஒரு சமத்துவச் சமூகத்தை உருவாக்க வேண்டுமானால் அங்கே செல்லுபடியாகக்கூடிய கோட்பாடுகள் அவை. எடுத்துக்காட்டாக
ஒவ்வொரு குடிமகனையும் தேவை மற்றும் அச்சத்தில் இருந்து விடுவிப்பது அரசின் கடமைஎன்பதை ஒரு கோட்பாடாக வைத்திருக்கிறார் அம்பேத்கர். அவரை சாதித் தலைவராக பார்ப்பவர்கள் தங்கள் ஜாதி மூளையை சலவை செய்து கொள்ளுங்கள்.
அடுத்து, நாட்டில் உள்ள பிரச்சினைகளை மிக அழகாகப் பகுக்கிறார். இதில் என்ன அழகு இருக்கிறது என்று தோன்றுகிறதா? கவனியுங்கள்.
இந்தியாவில் உள்ள பிரச்சனைகளை முதலில் பழையது, புதியது என இரண்டாகப் பகுக்கிறார். காலங்
காலமாக இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிலை, வறுமை போன்றவை பழையவை. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் புதியவை. அவை உள்நாட்டுப் பிரச்சனை, வெளிநாட்டு உறவுகள் சார்ந்த பிரச்சனை என மேலும் இரண்டாகப் பகுத்து, அவற்றை மொழிவாரி மாகாணங்கள், கருப்புச் சந்தை, பணவீக்கம் என மேலும் ஆழமாக ஆய்வு செய்கிறார்.
இத்தகைய பகுப்பாய்வே ஒரு கட்சி அது இயங்கும் சமூகத்தைப் பற்றி எவ்வளவு சிறப்பாகக் கணித்து உள்ளது என்பதை உணர்த்துகிறது.
வெறுமனே பிரச்சனை என்று சொல்லி விட்டு நகராமல் அதன் ஆழ அகலங்களை ஆராய்ந்து, அக்கால சூழலுக்கேற்ற தீர்வுகளை முன் மொழிகிறது, அம்பேத்கரின் தேர்தல் அறிக்கை!
குறிப்பாக,
மொழிவாரி மாகாணங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.அடுத்து, அக்கால கட்டத்தில் இருந்த வருவாய் பற்றாக்குறையைப் போக்க மதுவிலக்கை எதிர்க்கிறது. வெளிநாட்டு சிக்கல்களைத் தீர்க்க காஷ்மீர் பிரச்சனையை எப்படிக் கையாள வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறது. தானே இன்னும் வலுவடையாத போது ஏன் இந்தியா சீனாவுக்கு அய்க்கிய நாட்டு அவையில் இடம் தேடுகிறது? என்று கூர்மையாகக் கேள்வி எழுப்பி, பிற்காலத்தில் இது பெரும் பிரச்சினைகளை உருவாக்கும் என்று எச்சரிக்கிறது. அடுத்த சில ஆண்டுகளிலேயே அது உண்மையாகிப் போனதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
இவ்வறிக்கையைப் படிக்கும்போது எனக்கு கிடைத்த மிகப் புதுமையான செய்தி, அம்பேத்கரின் மதுவிலக்கு எதிர்ப்பு நிலைப்பாடு. அது, அடித் தட்டு மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாக அது நாட்டிற்கு எத்தகைய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை புள்ளி விவரத்துடன் விளக்குகிறார்.
மேலும் என்னை வியப்பில் ஆழ்த்தியது, காடுகள் பராமரிக்கப்பட வேண்டிய கட்டாயத்தை அம்பேத்கர் வலியுறுத்துவது. இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேசுவோர் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி இது.
இவ்வறிக்கையில் நாம் படித்து பரப்ப வேண்டிய மிக முக்கியமான செய்தி, அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் எவ்வளவு அக்கறை காட்டினார் என்பதைப் பற்றியது. எத்தனை இடங்களில் 'பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்' என்ற சொல்லை அவர் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்த்தாலே உங்களுக்கு அவர் தம் மக்களுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.இதன் உச்சமாக,
'பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு' என்ற தனது அமைப்பின் பெயரையே பிற்படுத்தப்பட்ட மக்களுடன் ஒரே பொது அமைப்பில் இணைந்து செயலாற்ற வேண்டுமானால் 'பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பு' என மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியிருப்பது!
எண்ணிப் பாருங்கள்! எத்தகைய மகத்தான மனிதநேயமிக்க தலைவர் அவர்!
படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையிலிருந்து விடுபட வேண்டுமானால் தலித் மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒரு பொது அமைப்பில் இயங்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை இன்றளவும் இந்தச் சமூகங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது வேதனையானது.
மற்றுமொரு முக்கியமான புள்ளி கூட்டாட்சி அமைப்பைப் பற்றியது. பொதுவாக, அம்பேத்கர் மய்யப்படுத்தப்பட்ட ஆட்சியை மட்டுமே வலியுறுத்தினார் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் அம்பேத்கர் தனது தேர்தல் அறிக்கையில் முன்மொழிந்துள்ள 'கூட்டதிகாரக் கட்சி' ( Fedreal
party) என்ற திட்டம், பார்ப்பனிய பாசிச சக்திகள் இயக்கும் ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பில் இருந்து விடுபட , ஜனநாயக சக்திகளுக்கு வழிகாட்டும் திட்டமாகும்.
'கூட்டதிகாரக் கட்சி' என்பது ஒரே விதமான அரசியல் கொள்கைகளைக் கொண்ட உள்ளாட்சியில் சுயாட்சி உடைய பல அரசியல் கட்சிகளை உறுப்பினராகக் கொண்ட ஓர் அனைத்திந்திய கட்சியாகும். இதனால் எந்த ஒரு கட்சியும் தனது தனித்தன்மையை இழந்துவிடாது. அதே சமயம், அகில இந்திய அளவில் மிக வலுவான ஒருங்கமைந்த கட்சியாகத் தன் கொள்கைகளுக்காக இயங்க முடியும்.
இன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சிதறிக்கிடக்கும் - சமூக நீதியில், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள - கட்சிகள் இணைந்து அகில இந்திய அளவில் கூட்டணி என்பதைக் கடந்து மேலும் வலுவான 'கூட்டதிகாரக் கட்சி' என்ற நிலையை அல்லது அதை ஒத்த அமைப்பை நோக்கி நகர்ந்தால் தான் நாம் தனித் தன்மையையும் பாதுகாத்து, பெரும்பான்மை வாதத்தையும் எதிர்க்க வேண்டிய இன்றைய நெருக்கடியான கால கட்டத்தை சமாளிக்க முடியும் என்று தோன்றுகிறது.
ஒட்டுமொத்தத்தில் என்னை மிரட்சியடைய வைத்த இந்தத் தேர்தல் அறிக்கை என்பது ஒவ்வொருவருக்கும் புதிய திறப்புகளையும் படிப்பினைகளையும் வழங்கக்கூடிய சமத்துவத்திற்கான பேராயுதமாகும்!
காலமறிந்து வெளியிட்டுள்ள '#தலித்_முரசு'க்கு நன்றி.
புத்தகத்தை பெற:
வெங்காயம் ஏப்ரல் 2021
Post a Comment