ஆசிரியர் வீரமணி - பாசிச சூழ்ச்சிகளை அடையாளம் காட்டும் முதல் குரல்

 பாசிச சூழ்ச்சிகளை அடையாளம் காட்டும் முதல் குரல்

ஆசிரியர் வீரமணி

-வழக்கறிஞர் மணியம்மை

தமிழரின் கல்வி, பொருளாதார வளர்ச்சி, சுயமரியாதை ஆகியவற்றுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த இடையூறுகளை நமது இனப் பகைவர்கள் ஏற்படுத்தினாலும், தீமைகளைத் தேன் தடவிய வார்த்தைகளால் மறைத்து நம்மை ஏய்க்க முயன்றாலும், அவற்றைத் தோல் உரித்து, தக்க ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி, தமிழருக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் ஒரு குரல் ஒலிக்கும்!! அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய வெகுமக்கள் இயக்கத்தின் தலைவர் அல்ல; ஆனால் அரை நூற்றாண்டுக் காலம் திராவிடத்தின் பெயரால் சமூக நீதியின் பெயரால் ஆட்சி அமைத்த மாபெரும் இயக்கங்களுக்கு  அடி வேராய் விளங்கும் ஓர் இயக்கத் தலைவரின் குரல்!

 

அந்தக் குரல் மாபெரும் பொதுக்கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களைத் தன் கவர்ச்சிகரமானப் பேச்சாற்றலால் கட்டிப்போடும் குரல் அல்ல, ஆனால் அத்தனை நாவன்மைக் கொண்டவரும் அமர்ந்து குறிப்பெடுக்கும் வளமான கருத்துகளை அள்ளி வழங்கும் கருவூலக் குரல்.

 

ஆயிரம் ஆண்டுகளாய் மானம் மறந்து கிடந்த இனத்தை உசுப்பி சுயமரியாதை உணர்வை ஊட்டிய பகுத்தறிவுப் பகலவன் மண்ணில் விதைக்கப்பட்டத் திடலில் இருந்து தந்தை பெரியார் தம் குரலாய், அவர்தம் வழியில் வழுவாது தமிழர்களின் தன்மானம் காக்க அரை நூற்றாண்டாக ஒலிக்கும் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தமிழர் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள்!

 


கல்வி உரிமை மறுக்கப்பட்ட நம் மக்களுக்கு, கல்வி தான் வெளிச்சத்தை ஏற்படுத்தும் என்று மக்களுக்காகப் போராடினார்! அதில் தன் காலத்திலே வெற்றியும் பெற்றார் தந்தை பெரியார்! அதனால்தான் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்!

 

அய்யா பெரியாரிடத்தில் இருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கட்டுப்பாடு மிகுந்த ராணுவக் கோட்டை, அதில் பலர் வந்தார்கள், சென்றார்கள்! நிலைத்து நின்று வென்றவர் ஆசிரியர் ஒருவரே! அய்யா பெரியார் மறைந்த சில ஆண்டுகளிலேயே அன்னை மணியம்மை நம்மை விட்டுப் பிரிந்தபோது சுயநினைவை இழந்து நின்றது கருஞ்சட்டை- சமூகநீதிப்படை!


திராவிடர் கழகம் திமுவுடன் இணைந்து விடுமா? கலைந்து விடுமா? என்று பத்திரிகைகள் கேள்வி எழுப்பியபோதுதுணிச்சலோடு இணையாது கலையாது இயங்கும் என்றார் ஆசிரியர்! இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டம் கண்டு அஞ்சும் ஓர் இயக்கமாக, திராவிடர் கழகத்தை வைத்திருக்கிறார்!

தந்தை பெரியாரிடம் 10 வயதில் தொடங்கிய தன்னுடையப் பயணம் இன்றைக்கு 88 வயதிலும் எந்தவித அலுப்பும் இல்லாமல் தொடர்கிறது! 88 வயதில் 78 ஆண்டுகள் பொதுவாழ்க்கை!


ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமை பெற இந்த வயதிலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்துக்கொண்டு இருக்கிறார்!

 

தமிழ்நாட்டிற்கு வரும் பேராபத்தை முன் கூட்டியே அறிந்து எச்சரிக்கை மணி அடிக்கின்றார்! முதலில் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தன் அறிக்கை மூலமாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, ஆபத்தைப் புரிய வைத்து, ஒத்தக் கருத்தை ஏற்படுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றுவது, பிறகு தங்கள் 'தொண்டர் தோழர்களுக்கு' சிறப்புக்கூட்டங்கள் நடத்தி புரியவைப்பது, அதன் பிறகு போராட்டம் பிரச்சாரம் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது! இதனால் தான் சங்பரிவார்கள்ஆண்டி இண்டியன்ஸ்’ என்று திராவிடர் கழகத்தினர் மீது தங்கள் வெறுப்பை வெளிப்படுத்துக்கின்றனர்!


தமிழ்நாட்டு மக்களைத் தங்கள் உரிமைக்களுக்காகப் போராடும் போராளிகளாக விழிப்போடு வைத்திருப்பவர் தான் நமது ஆசிரியர்!

எதிரிகளின் சர்க்கரைச் சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் விஷத்தை எடுத்துக்காட்டி,  அவற்றுக்கு எதிரான கருத்துருவாக்கம் தமிழகத்தில் நிலைபெற அடித்தளம் அமைத்துத் தருபவர் ஆசிரியர் அவர்கள்.


அதன் சாட்சியமாக சமீப காலத்தில் நடந்த நிகழ்வுகள்! குறிப்பாகநீட்’ நுழைவுத் தேர்வு, தேசிய புதிய கல்வி கொள்கை, வேளாண் சட்டங்கள், அகில இந்திய மருத்துவப் படிப்பில் 69% இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், தொடர் பரப்புரைகள் மூலமாக முற்போக்குக் கருத்தாக்கம் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும்  தெளிவான விளக்கத்தை வழங்கி, எதிரிகளின் சர்க்கரைச் சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் விஷத்தை எடுத்துக்காட்டி,  அவற்றுக்கு எதிரான கருத்துருவாக்கம் தமிழகத்தில் நிலைபெற அடித்தளம் அமைத்துத் தருபவர் ஆசிரியர் அவர்கள்.


அறிவாசான் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்த நாள் பெருவிழா, கருஞ்சட்டைப் படையினருக்கு இந்த ஆண்டு திருவிழாவாக அமைந்தது! காரணம் அய்யாவின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியுள்ளார்  மானமிகு முதல்வர் தளபதி!

 

இந்த முள்ளை நீக்க அய்யா- அம்மா ( அன்னை மணியம்மையார்) தொடுத்த போரைஎந்த விதத்திலும் அதன் வலிமை குறையாமல்  உயிர் உள்ள போராட்டமாகவே தொடர்ந்து வந்தார் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அய்யா அவர்கள்!


 சனாதனத்தை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களைக் குறி வைத்து அவதூறு, விஷமப் பிரச்சாரம் செய்வது, ஊடக பலத்தை வைத்து அச்சுறுத்துவது என்பன சங்கிகளின் செயல்பாடுகளில் மிக முக்கியமானவை. இந்துப் பெண்களை அவதூறாகப் பேசி விட்டார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் திருமாவளவன் என்று பெரிய பொய்ப் பரப்புரையைச் செய்தார்கள். இதன் மூலமாக தி.மு.க. கூட்டணிக்கு நெருக்கடியைக் கொடுக்க நினைத்தார்கள்.


உடனடியாகத் தன் ஆதரவை டாக்டர். திருமாவிற்குத் தந்து துணை நின்றார் ஆசிரியர்! பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக அமெரிக்காவில் அதன் இயக்குனர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் சமூகநீதிக்கான டாக்டர் கி.வீரமணி விருதை அறிவித்தார்.  அது, தந்தை பெரியார் நினைவுநாளில் டிசம்பர் 24 அன்று வழங்கப்பட்டது.  சமூக நீதிக் காவலர் வி.பி.சிங், முத்தமிழறிஞர் கலைஞருக்குப் பிறகு திருமா அவர்களுக்கு வழங்கி பெருமைப் படுத்தினார். “விடுதலைச் சிறுத்தைகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முட்டாள்கள் திட்டம் தீட்டிய இந்த நெருக்கடியான நிலையில், நமக்கு இப்படி ஒரு விருதையும், ரூ.1 லட்சம் நிதியையும் வழங்கிய அய்யா, தமிழர்த் தலைவரை நான் பெரியாராகவும்- அம்பேத்கராவும் பார்க்கிறேன்” என்று அன்று எழுச்சித் தமிழர் உணர்ச்சி ததும்பப் பேசினார்!


மாவீரர்கள், புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகள் கூட பேச, எழுத அச்சப்படுவது பெண்களுக்குத் தாலியின் பெயரால் சுமத்தப்படும் அடிமைத் தனம் பற்றி. ஏனெனில் இங்கு ஜாதி ஆதிக்கம், மத ஆதிக்கம், சனாதனக் கலாச்சார ஆதிக்கம் என அனைத்தும் பெண்ணின் உடல் மீதே நிலை நாட்டப்படுகின்றன. ஆதிக்கத்தின் முக்கியக் குறியீடு தாலி.அதை, “நாய்க்குக் கட்டும் பட்டை தான் பெண்களுக்குக் கட்டும் தாலி, ஆணுக்கு இல்லாத தாலி, பெண்ணுக்கு ஏன்?” என்று துணிச்சலோடு கேட்டு மிக எளிமையாக  அறுத்தெறியச் சொன்ன  ஒரே தலைவர் தந்தை பெரியார்! 


திராவிடர் கழக மேடைகளில் திருமணம் ஆன பெண்கள், தங்களுக்குத் தாலி ஒரு வேலி என்பதைப் புரிந்த உடன் மேடையிலேயே அதை நீக்கி உள்ளனர்! இது சாதாரண, சாமான்ய பெண்கள் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அத்தகைய அசாத்தியமான பணியை தந்தை பெரியாருக்கு அடுத்து தமிழகத்தில் நடத்திக் காட்டிய பெருமை ஆசிரியர் வீரமணி அவர்களையே சாரும். அது எவ்வளவு கடினமான பணி, சமூகத்தில் எத்தகைய அதிர்வலைகளை ஏற்படுத்தும், ஆசிரியர் வீரமணி அதை எப்படித் துணிச்சலுடன் கையாளுகிறார் என்பதை எடுத்துச் சொல்ல எனது அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறேன். 


2015 இல் ஒரு தனியார் (புதிய தலைமுறை) தொலைக்காட்சியில்,பெண்களுக்கு தாலி பெருமையா? சிறுமையா?’ என்ற விவாதம் நடைபெற்றது. என்னைப் பேச அழைத்தார்கள். பொதுவாகக் குழு விவாதத்தில் நான் கலந்துகொள்ள மாட்டேன். ஆனால் தோழர்களின் வற்புறுத்தலால் என் தலைமையில் 10 மகளிர் தோழர்கள் சென்றிருந்தோம். அந்த விவாதத்தையே, ‘சுயமரியாதைத் திருமணமா? வைதீகத் திருமணமா?’ என்று மாற்றினோம். 


அன்று வந்திருந்த ஒரு பெண்,இந்தத் தாலி ஒன்றும் எனக்குப் பாதுகாப்பு கிடையாது. நான் நினைத்தால் கழட்டிவிடுவேன்” என்றதும், சும்மா விடுவோமா? அவர்களை உற்சாகப்படுத்தி, அந்த விவாதக்களத்திலேயே அனைவர் முன்னிலையில் கழற்றி வீசினார்கள். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. இதில் என்ன வியப்பு என்றால் அந்தப் பெண் எந்த இயக்கத்தையும் சாராதவர். இது தான் சங்கிகளுக்குக் கோவம்! அந்தக் காட்சியைக் காட்டி மக்களின் ஆத்திரத்தைத் தூண்டினார்கள்!



அவர் ஆற்றிய அரும்பணிகளினால் தான் இன்று தேர்தல் அரசியல் அல்லாத சமூக அரசியல் தளத்தில், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சுயமரியாதை ஆகிய தத்துவங்களை முன்னிறுத்தி செயல்படும் அத்தனை இயக்கங்களுக்கும் கலங்கரை விளக்காகசாதி ஒழிப்பை லட்சியமாகக் கொண்ட மாபெரும் அமைப்பாக, திராவிடர் கழகம் விளங்குகிறது.

ஆர்வத்தோடு நிகழ்ச்சியைக் காண இருந்த எங்களுக்கு ஏமாற்றம். நிகழ்ச்சிக்குத் தடை! அந்தத் தொலைக்காட்சி அலுவலகம் முன் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டது. அங்கு மோடி ஜீ ஆட்சிஇங்கு லேடி ஜீ ஆட்சி! அந்தத் தைரியம்! பிறகு அந்தத் தாக்குதலை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை ஏற்ற ஆசிரியர் "தாலியைப் பற்றி தானே பேசக்கூடாது என்றீர்கள்? எங்கள் மகளிர் அணிதாலி அகற்றம்’ செய்வார்கள். மாட்டுக்கறி விருந்து நடக்கும். புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் நடத்துவோம்” என்ற அறிவிப்பைக் கொடுத்தார்.


அந்த நிகழ்ச்சி குறித்துத் தொடர்பு கொள்ளவிடுதலை’ ஏட்டில் என்னுடைய அழைப்பு எண் கொடுத்துவிட்டார்கள்பிறகு என்ன? பாரத மாதாவின் புதல்வர்கள் தங்கள் நாற்றம் எடுத்த சொற்களால் மிக மோசமாக என்னை, என் குடும்பத்தைப் பேசினார்கள். இந்தத் தகவல் ஆசிரியர் அய்யாவிடம் தெரிவிக்கப்பட்டு சில ஆடியோக்களைக் கேட்டு, பொது வாழ்க்கையில் நாம் இத்தகைய அச்சுறுத்தல்களை சந்திக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி எனக்குத் தைரியத்தைக் கொடுத்தார்!


தாலி அகற்றும் நிகழ்வுக்கு 2 நாட்களுக்கு முன்னால் நிகழ்ச்சியை நடத்தக் காவல் துறைத் தடை. பிறகு உயர் நீதிமன்றத்தில் வழக்கு. நீதிபதியின் பெயரோ அரிபரந்தாமன். பெயரைக் கேட்டதும் எனக்கு இடி விழுந்ததைப் போல இருந்தது. பிறகு நமக்கு சாதகமான தீர்ப்பு வந்தது!


 இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியைக் கொண்டாட நினைத்தோம். ஆனால் ஆசிரியர்,வேண்டாம்! அவர்கள் நிச்சயம் மேல்முறையீடு செல்வார்கள்” என்று சொல்லிவிட்டு, சில முக்கிய பொறுப்பாளர்களிடம் நடக்க வேண்டியதை சொல்லிவிட்டுச் சென்றார்!


காலை 6 மணிக்கே திடலுக்கு வந்தார். ‘தாலி அகற்றம்’ நிகழ்ச்சித் தொடங்கி காலை 7.45 மணிக்குள்ளாக 10 க்கும் மேற்ப்பட்டோர் தாலி அகற்றம் செய்து விட்டனர். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் என் பெற்றோர்களும் தாலி அகற்றம் செய்துகொண்டார்கள். நான் தான் திராவிடர் கழகத்தில் முதல் தலைமுறை!


பெரியார் திடல் முழுவதும் கருஞ்சட்டைப் படை, தோழமை இயக்கங்கள், சிவப்பு, நீலச்சட்டை தோழர்கள், ஊடகத்துறைத் தோழர்கள் என்று மிகவும் பரப்பரப்பாக இருந்தது. காவல்துறை உள்ளே நுழைந்தது. 'நிகழ்ச்சியை நிறுத்துங்கள்! நீதிமன்றம் தடை கொடுத்துவிட்டது' என்றனர். ஆசிரியர் இரவு சொன்னது எவ்வளவு சரி என்பதை உணர்ந்தேன்.நீதிமன்ற ஆணை எங்கே?’ என்றதும் காவல் துறை கொஞ்சம் தலையைச் சொறிந்தார்கள். பிறகு ஆணை கிடைத்தவுடன் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மாட்டுக் கறி பார்சலாக கொடுக்கப்பட்டது! அன்றைக்கு நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் இந்த நிகழ்வு பரபரப்பாகப் பேசப்பட்டது! மாலை, தலைப்புச் செய்தியே இது தான்!


மூத்த தோழர்கள் சொன்னார்கள்,இது இரண்டாம் ராவணலீலா. அதற்குக் காரணம் நீ” என்று! மணியம்மை என்ற பெயர் மீண்டும் ஒருமுறை வரலாற்றில் பதிந்தத., அய்யா ஆசிரியரின் மனதில் ஆழமாகப் பதிந்தேன். எப்போது திடலில் பார்த்தாலும் அன்போடு பேசும் வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது!


எதிர்ப்புகளைக் கடந்து எதிர்நீச்சல் போட்டே வளர்ந்த இயக்கம், எதிரிகளைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று அய்யாவின் வாழ்நாள் மாணவர் ஆசிரியர் தலைமையில் வெற்றி பெற்றது அன்று. இது நான் நேரடியாக அனுபவம் பெற்ற போராட்டம். இதுபோல் எண்ணற்ற போராட்டங்கள், இதை விடக் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டு ஆசிரியர் அய்யா இந்த இயக்கத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்

 திராவிட இயக்க வரலாற்றில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் வரிசையில் ஆசிரியர் வீரமணி அவர்களின் பணியை எவரும் மறுத்துவிட முடியாது. தந்தை பெரியாரிடம் இருந்து பெற்றுக் கொண்ட கொள்கை உறுதியுடன் அவர் ஆற்றிய அரும்பணிகளினால் தான் இன்று தேர்தல் அரசியல் அல்லாத சமூக அரசியல் தளத்தில், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சுயமரியாதை ஆகிய தத்துவங்களை முன்னிறுத்தி செயல்படும் அத்தனை இயக்கங்களுக்கும் கலங்கரை விளக்காக, சாதி ஒழிப்பை லட்சியமாகக் கொண்ட மாபெரும் அமைப்பாக, திராவிடர் கழகம் விளங்குகிறது.

 ஏனெனில் இந்தியச் சாதியச் சூழலில், அதுவும்இந்துத்துவா’ அரசியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் நாடெங்கிலும் மாபெரும் எழுச்சியைப் பெற்றிருக்கும் நிலையில் சாதி ஒழிப்பை இலட்சியமாகக் கொண்ட ஒரு இயக்கத்தை, ஆட்சி அதிகாரம் இல்லாமல், சமரசங்கள் இல்லாமல் நிலை நிறுத்தி, வீரியம் கெடாமல், கொள்கை உரத்தோடு வைத்திருப்பது என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பணி.

ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், பாலினப் பேதங்களால் நிலை நிறுத்தப்படும் அத்தனை ஆதிக்கங்களையும் எதிர்க்கும் போராட்டக்காரர்களோடு, நம்மையும் கைகோர்க்க அழைக்கும், சலிப்பும் ஓய்வும் துளியும் இல்லாத அகவை 90அய் நெருங்கும் தலைவர் அய்யா வீரமணி அவர்களோடு கரம் கோர்த்து பெரியார் பணி முடிப்போம்.

 


 

 வெங்காயம்- செப்டம்பர் 2021

Post a Comment

Previous Post Next Post