பெரியார்: சீரிளமையுடன் திகழும் தோழமை
-குண சந்திரசேகர்
தந்தை பெரியாரின் பேராளுமையைப் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டு விளக்க முடியும். பல்வேறு புரட்சிகரமான சொற்கள், அடைமொழிகள், முழக்கங்கள், உருக்கமான, மகிழ்ச்சி அளிக்கக்கூடிய சொற்கள் என பல்வேறு உணர்ச்சிகரமான மொழி ஆளுகைளால் பெரியாரின் முக்கியத்துவம் நமக்குக் கடத்தப்படுவதை உணர்ந்திருப்போம். ஆனால் அண்மையில் பெரியாரின் பெரும் தொண்டர், அஞ்சா நெஞ்சர் என அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் உரையில் குறிப்பிட்டிருந்த "பெரியார் நமது வாழ்க்கையை ரொம்ப இலகுவாக்கினார்" என்கிற ஒற்றை வரி பெரியாரின் ஒட்டுமொத்த வாழ்நாள் பணியை என் மூளைக்குள் பொறி தட்டுவது போல் உணர்த்தியது.
எதைக் கண்டு நாமெல்லாம் அஞ்சினோமோ - கடவுள், மறுபிறவி, பாவம், புண்ணியம் உள்ளிட்ட மூட நம்பிக்கைகள்; எதற்கு நாமெல்லாம் அடிபணிந்து இருந்தோமோ - பார்ப்பனிய ஜாதியக் கட்டுப்பாடு, பிறப்பின் அடிப்படையிலான தொழில், கற்பு உள்ளிட்ட ஆணாதிக்க விழுமியங்கள்; எதை நம்மவர்கள் சிலர் பெருமை என்று கூட நினைத்து வந்தார்களோ - சற் சூத்திர மனப்பான்மை (பார்ப்பானுக்கு அடுத்த நிலையில் இருப்பதையே பெருமை என நினைப்பது), தனக்குக் கீழ் உள்ள சாதிகள் மீது ஆதிக்கம் செலுத்துவது, பெண்களை அடிமைப்படுத்தி வைப்பது - அவற்றையெல்லாம் அறிவு கொண்டு விளக்கி நமது வாழ்க்கையை ரொம்ப இலகுவாக்கினார் என்பதே அஞ்சா நெஞ்சரின் ஒற்றை வரியில் பொதிந்திருக்கும் பொருள்.
பெரியாரியல் நமது தனிப்பட்ட வாழ்வு, சமூக வாழ்வு பற்றிய புரிதலை மேம்படுத்தி, நம்மைக் கட்டுப்படுத்தும் இறுக்கங்களைத் தளர்த்தி, நமது வாழ்வை எளிமைப்படுத்தும் ஒரு வாழ்வியல் முறை
இந்தக் கண்ணோட்டம் மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். பெரியார் என்றால் கடவுள் மறுப்பாளர், சாமி சிலைகளை உடைப்பவர் என்ற பொது உளவியலில் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தைத் தளர்த்தும் வகையில் பொதுச் சமூகத்திடம் பெரியாரை / பெரியாரியலை முன்வைத்து, இது நமது தனிப்பட்ட வாழ்வு, சமூக வாழ்வு பற்றிய புரிதலை மேம்படுத்தி, நம்மைக் கட்டுப்படுத்தும் இறுக்கங்களைத் தளர்த்தி, நமது வாழ்வை எளிமைப்படுத்தும் ஒரு வாழ்வியல் முறைதான் அது என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்.
பெரியாரின் தியாகத்தை, உழைப்பை, புரட்சியை அறிந்தவர்கள் அவரை இப்படி மனநல ஆலோசகர் போல முன்வைப்பது, அவரது கருத்துகளை நீர்த்துப்போகச் செய்யும் வழி, அவரை குறைத்து மதிப்பிடுவது போல் ஆகும் என்று கருதக்கூடும். ஆனால் அது உண்மை அல்ல.
முதலாளித்துவச் சுரண்டல் உலகில் நிச்சயமற்ற வாழ்வாதாரம், அயர்ச்சி அளிக்கும் பணிச்சூழல், சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் கவனச் சிதறல்கள், ஒருபுறம் ஏகபோகம், மறுபுறம் பொருளாதார நெருக்கடி என முரண்கள் சூழ, இன்றைக்கு எம்மைப் போன்ற லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் மன அழுத்தத்தில் உழல்கிறோம். அதிலிருந்து மீள, யோகா கற்றுத்தரும் சாமியார்கள், கார்ப்பரேட் தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் போன்றோரை நாடிச் சென்று தங்களின் பணம், நேரம் அத்தனையும் செலவழிக்கிறோம். உலகம் முழுக்கவே வளரும் நாடுகளில் வாழும் இளைஞர்களை இத்தகைய சிக்கல்கள் பாதிக்கிற போதிலும், இந்தியாவில் சாதிய அமைப்பு இந்த மன அழுத்தத்தை மேலும் பன்மடங்கு அதிகரிக்கிறது.
இந்தச் சூழலில் வாழ்பவர்களுக்கு, பெரியாரைப் புரட்சியாளர் பீடத்திலிருந்து நகர்த்தி ஒரு தோழராக அறிமுகப்படுத்துவது அவசியம் என்றே கருதுகிறேன். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலும் பெரியார் ஒரு தோழராகவே எனக்கு மிக மிக நெருக்கமாகிறார். பெரியாரியல் நமது கண்ணோட்டத்தை தகவமைத்து பல்வேறு அழுத்தங்களிலிருந்து விடுவிக்கிறது. அவற்றில் சில…
காதல்
பதின்பருவ உடலியல் ரசாயன வினைகளால் முளைவிடும் இயல்பான உணர்வின் மீது சங்க இலக்கியம் முதல் இன்றைய சினிமா வரை கட்டமைத்துள்ள பிம்பங்கள், கற்பிதங்கள், சிக்கல்கள் எண்ணற்றவை. அப்படி காதல் பற்றி உருவாக்கப்பட்ட போலியான கற்பிதங்களில் முக்கியமானது 'காதல் எதிர்பார்ப்பற்றது' எனும் கற்பிதம். இது காதலைப் புனிதப்படுத்தும் கற்பிதம். இது
சமூகத்தில் எப்படி பிரதிபலிக்கிறது என்றால் திரைப்படங்களில் காட்டுவார்களே ஒருவன் வேலை இல்லாமல் சும்மா சுற்றிக்கொண்டு இருந்தாலும், கோளாறாக அவனை ஒருத்தி காதலித்துவிட்டால், எந்த பலனுமில்லாமலும் அந்தக் காதலில் அவள் இருந்தாக வேண்டும். வேறொரு நல்ல வாழ்க்கையை அந்த ஒருத்தி தேர்ந்தெடுக்க நினைத்தால் அவளுக்கு வேசி பட்டம் கட்டும் அளவு அந்த கற்பிதம் நீளும். பல பெண்கள் அந்தப் பழிக்குப் பயந்தே பிடிக்காத காதலைத் தொடர்வார்கள்.
ஒரு காலகட்டம் வரை என்னுடைய கண்ணோட்டமும் அதுவாகவே இருந்தது. உண்மைக் காதல் ஒரே ஒரு முறைதான் வரும் என்ற தமிழ்ச் சினிமாவின் வசனங்களைக் கேட்டு வளர்ந்த என்னிடம் 'இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போல' என்றார் பெரியார்! தூக்கிவாரிப் போட்டது எனக்கு! பெரியார் அத்தோடு நிற்கவில்லை.
"எப்படிப்பட்டக் காதலும் ஒரு சுய லட்சியத்தை, திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகிறதே தவிர வேறல்ல” என்றார்.
அதாவது, “அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, போக போகியத்திற்கு பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டுதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும்" என்றார். எனது பார்வையை அப்படியே புரட்டிப் போட்டார்!
இப்போது, காதல் என்றால் அதற்கு அர்த்தமே இல்லை, காதல் தேவையற்றது என்று பெரியார் சொல்கிறாரா என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால் அதற்கும் அவரே சமாதானம் சொல்கிறார்:
"இதிலிருந்து நாம் யாரிடமும் அன்பும் ஆசையும் நட்பும் பொருளாகக் கொண்ட காதல் கூடாது என்றோ அப்படிப்பட்டது இல்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமே ஒழிய மனதிற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல் அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம்" (“குடியரசு”- 18.01.1931).
காதலுக்கு அவர் கொடுத்த இந்த வரையறையைப் போல, வேறு யாரும் அவ்வளவு தெளிவாக இதுவரை சொன்னதாக எனக்குத் தெரியவில்லை.
திருமணம்
காதலைப் புனிதப்படுத்தும் வேலையை இலக்கியங்களும் திரைப்படங்களும் மேலதிகமாகச் செய்கிறது என்றால் திருமணத்தின் மீதான புனிதத்தை அனைத்து மதங்களும், சாத்திரங்களும் அவற்றின் கடவுள்களும் கட்டமைக்கின்றன. உலகெங்கும் திருமணம் எனும் ஏற்பாடு பெண்களை ஆண்களுக்கு அடிமையாக்குகிறது என்றால் இந்தியத் திருமணத்துக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அது சாதியையும் பாதுகாக்க வேண்டும். அதனாலேயே இங்கு திருமணத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம்.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு சூழலில் கோயில்கள் சாத்தப்பட்டும், வாயிலில் நடுச் சாலையில் நின்று கொண்டாவது முகூர்த்த நேரம் தவறாமல் தாலி கட்டுகிற இந்தச் சமூகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னால், “கல்யாணம் கிரிமினல் குற்றம் ஆக்கப்பட வேண்டும்” என்று பேசினார் பெரியார். திருமணம் என்ற அமைப்பே பெண்ணை அடிமையாக்குகிறது என்ற கோபத்தின் வெளிப்பாடு அது.
அதனினும் பெருஞ் சோகம் ஒன்று உண்டு! இங்கே நடக்கும் திருமணங்களில் மணமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை! ஜாதியும் ஜாதகமும் தானே திருமணத்தைத் தீர்மானிக்கிறது! மண உறவுக்குத் தெய்வீகத் தன்மை கற்பித்து அதனால் எவ்வளவு தொல்லை தருவதாக இருந்தாலும் அந்த உறவு தொடர வேண்டும் என்கிறது.
இங்கு சாதி கவுரவத்தைக் காப்பாற்ற மணமக்களின் விருப்பங்களைக் கொன்றுவிடும் அதேசமயம், பெற்றோர்கள் சமூக அங்கீகாரத்திற்காக ஆடம்பரமாகத் திருமணம் நடத்தி கடன்காரர்கள் ஆகிறார்கள். திருமணத்திற்காக ‘பர்சனல் லோன்’ எடுத்து, கடனை அடைக்க முடியாத நண்பர்கள் எனது வட்டத்திலேயே பலர் இருக்கிறார்கள்! ஒருநாள் பகட்டுக்காக அடுத்த அய்ந்து ஆறு ஆண்டு நிம்மதியை இழக்கிறார்கள்.
ஆனால் பெரியார் முன்வைத்த திருமணமுறை இதற்கு முற்றிலும் நேர் எதிரானது.
"சுயமரியாதைத் திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தம் என்றும், அந்த ஒப்பந்தம் பெண்ணையும் ஆணையும் மாத்திரம் பொறுத்ததே ஒழிய, வேறு எவ்வித கட்டுப்பாட்டிற்கும் சம்மந்தப் பட்டதில்லை" என்றார் அவர்!
அதே போல சுயமரியாதைத் திருமணத்தைப் பொருத்தவரை, ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஆசை ஏற்பட்ட பின்னரே திருமணம் செய்ய வேண்டும்; வாழ்க்கைக்கும் மனதிற்கும் ஏற்ற தம்பதிகளானால் கூடி வாழலாம்; இல்லையென்றால் மனதிற்கு ஏற்றவர்களை மணந்து மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கலாம். அவ்வளவுதான்!
பிள்ளை பெற்றுக் கொள்வதைக் கூட "எவ்வளவுக்கு எவ்வளவு மடமை உண்டோ அவ்வளவுக்கவ்வளவு பிள்ளைகள் பிறந்து விடும்" என்கிறார்.
திருமண முறையிலும் சடங்குகள் அற்ற தேவையற்ற பகட்டு ஆடம்பரமும் இல்லாத எளிமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தாத திருமண முறையையே பின்பற்றச் சொல்கிறார்.
எனவே நாம் பல்வேறு ‘சென்டிமெண்ட்’களை வளர்த்துக்கொண்டு ரொம்பவும் எதிர்பார்த்துச் செய்கிற திருமணம் என்பது இரண்டு நபர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்புடன் நடத்துவதற்காக செய்து கொள்ளும் ஒரு ஏற்பாடு. அவ்வளவே. அதில் மூன்றாவது நபருக்கு வேலை இல்லை.
எனவே துணையைத் தேர்ந்தெடுப்பது தொடங்கி, திருமணத்திற்கான செலவு, குழந்தை பெற்றுக் கொள்ளுதல் வரை பிறர் என்ன கருதுவார்களோ என்ற எண்ணம் அர்த்தமற்றது. திருமண உறவை இடியாப்ப சிக்கலாக மாற்றத் தேவையில்லை என்பதைப் புரியவைக்கிறார் தோழர் பெரியார்.
மூட நம்பிக்கைகள்
நீங்கள் தேர்வு எழுதவோ, நேர்காணலுக்குப் போகும் போதோ அல்லது ஏதாவது ஒரு முக்கிய பணியாகச் செல்லும் போதோ போடுகிற சட்டை நிறத்தில் சென்டிமென்ட், கேலண்டரில் ராசிபலன் பார்க்கிற பழக்கம் உள்ளதா? செல்லும் வழியில் எந்த கோவிலைப் பார்த்தாலும் ‘சலாம்’ வைப்பீர்களா? இதில் ஏதாவது ஒன்று சரி இல்லை என்றாலும் உடனே எதிர்மறை எண்ணங்களால் அலைக்கழிக்கப் பட்டிருக்கிறீர்களா?
நான் இதனால் அவஸ்தைப் பட்டிருக்கிறேன். கடவுள் நம்பிக்கை என்ற ஒரு பெரிய மூடநம்பிக்கை ஆயிரக்கணக்கான ராசி, சகுனம், ‘சென்டிமென்ட்’ என சின்னச் சின்ன மூடநம்பிக்கைகளை நம் மூளைக்குள் விதைத்து விடும். நமக்கு நடக்கும் எதுவும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதென்ற எண்ணம் நம்மை அறியாமல் நம்முள் திணிக்கப்பட்டு விடுவதால், எதற்கும் நம்மை சரியாகத் தயார்படுத்திக் கொள்ளாமலே மற்ற புறக்காரணிகள் மீது அதிக கவனம் செலுத்துவோம். எந்தத் தோல்விக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டோம். அதனால் நம்மை நாம் திருத்திக் கொள்ளத் தவறுவோம். அதே போல நாம் சரியாக செய்யக்கூடியக் காரியத்தைக் கூட இந்தத் தேவையற்ற எதிர்மறை எண்ணங்களால் தவற விடுவோம். இதற்குத் தீர்வு காண, கோயில், குளம், பூஜை, அர்ச்சனை என நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்வோம்.
ஆனால் பெரியார், கடவுளையே தூக்கிப் போட்டு உடைத்து, சாஸ்திரம் ஜோசியம் அத்தனையையும் தோலுரித்து, அம்பலப்படுத்தி, நம் மூளைக்குள் திணிக்கப்பட்டு இருக்கும் தேவையற்றச் சுமைகளைத் தூக்கி எறிகிறார். நாம் வாழும் இந்த நொடி, இந்த தருணம் மீது கவனம் செலுத்துவதற்கானச் சூழலை உருவாக்கிக் கொடுக்கிறார்.
நுகர்வு
கோயில் வழிபாடு, யாகம், தோஷ பரிகாரம், திருவிழா, திருமண விழா, சடங்குகள், நகை அணிதல், உடை என அத்தனை மீதும் பெரியார் வைத்த சரமாரி விமர்சனங்களுக்கான காரணம், அவற்றின் பகுத்தறிவற்ற, அடிமைப்படுத்தும் தன்மை; அதனால் ஆகும் பண விரயம். பொருளாதாரச் சுரண்டல் என்பது மற்றொரு முக்கியக் காரணம். இன்றைய ‘கிரெடிட் கார்டு’ உலகில் நமது சமூக அந்தஸ்தைக் காண்பிக்கவும், வருவாயை மீறிய ஆடம்பரச் செலவுகளை மேற்கொண்டு கடனில் சிக்க வைக்கும்
“conspicuous consumerism” (பகட்டுக்கான நுகர்வு)க்கு எதிரான கருத்தாக்கம் தான் பெரியார் வாழ்நாள் முழுவதும் முன்வைத்த சிக்கனம். கருப்புச்சட்டை அணியும் தன் இயக்கத் தோழர்கள் அரை கைச் சட்டை அணிய வேண்டும்; முழு கைச் சட்டை அணிவதையே ஆடம்பரம் என்றார் பெரியார்! ஏனெனில் தேவையற்ற பொருட்களின் நுகர்வு மனித உழைப்பைக் கேவலப்படுத்தும் காரியம் என்பது அவர் வாதம். பெரியாரின் சிக்கனத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கினால் ஒவ்வொரு பொருள் வாங்கும் போதும் அது அவசியம் தானா? இந்தப் பொருள் உருவாக்கப்படுவது சமூகத்திற்குப் பயனளிக்கக்கூடிய ஒன்றா? அதை தயாரித்த உடல் உழைப்பை மதிக்கும் வகையில் அதன் பயன்பாடு இருக்கப்போகிறதா? என்பதையெல்லாம் சிந்திக்கவும், ஆசைக்காக வாங்கலாம் என்ற எண்ணம் ஏற்படும் போது பெரியார் நறுக்கென நம் தலையில் கொட்டுவதை உணரவும் முடியும்.
மேலும் பல
எது பெண்ணுரிமை என்பதைத் தெரிந்துகொள்ளச் சிரமப்படும் ஆண்களுக்கு, பெண் விடுதலை என்று இங்கே முன்வைக்கப்படும் கருத்துகளை உங்கள் மனைவியை மனதில் கொண்டு புரிந்து கொள்ளாதீர்கள், உங்கள் அன்புத் தங்கையை செல்ல மகள்களை மனதில் வைத்துச் சிந்தித்துப் பாருங்கள் என்று எளிமையாக புரிதலில் ஏற்படும் இடைவெளியை நிரப்பச் செய்கிறார்.
பண்பாடு, மதம் - அத்தனையும் ஒழுக்க நெறிகள் தான்! இவை எல்லாவற்றையும் அழித்து ஒழித்து விட்டால் ஒழுக்கம் என எதை முன்வைப்பது என்ற கேள்விக்கு ஒழுக்கம் என்பது பிறர் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நாம் பிறரை நடத்துவது என மிக எளிமையாக அறத்தை முன்வைத்தார்.
எந்த இடத்திலும் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் திணிக்கவில்லை. மதுவிலக்கு தூய்மைவாதப் பிரச்சாரமாக இன்றும் இருக்கும் நிலையில் 1937 இலேயே பெரியார், “பொதுவாக மது அருந்துவதே குற்றம் என்றும் சொல்லிவிட முடியாது. கெடுதி உண்டாகும் படி ஆனதும் பொருளாதாரத்திலும், அறிவிலும் கேடு விளைவிக்கும் படியானதுமான மதுபானமே விலக்கப்பட வேண்டியதாகும்' என்றார். அவர் போலியான ஒழுக்கங்களைக் கற்பிக்கவில்லை.
மாற்றங்களை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையைப் பெரியார் விதைக்கிறார்.
“நாகரிகம் என்பது நிலைமைக்கும், தேசத்திற்கும், காலப்போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. காலப்போக்கில் அது எந்த வித தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை” (-“புரட்சி” ,
31.12.1933) புதிய எண்ணங்களுக்கும், எழுச்சிகளுக்கும் மனதைப் பக்குவப் படுத்துகிறார்!
அதே சமயம் மாற்றங்கள் செய்ய
விரும்புவோர் அவை இன்றைக்கு மக்களுக்கு கசப்பாக இருந்தாலும் பிற்கால மக்களால் மதிக்கப்படும் என்ற நம்பிக்கையில் செய்ய வேண்டுமே ஒழிய 'நாம் இன்றே பாராட்டப்பட வேண்டும் ' என்பதற்காக ஒரு மாற்றத்தைச் செய்யக்கூடாது என்று எச்சரிக்கவும் செய்கிறார்.
ஒரு காலத்தில் தேசம், தேசியம், தேசப்பற்று என்பன நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவற்றை எல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம், உலக சகோதரத்துவம், மக்கள் அபிமானம்(citizen of the world humanism) என்று கருதுவதில் பெரிதும் முன்வந்து விட்டோம்
நம் பிள்ளைகள் மீது திணிக்கப்படும் தேவையில்லாத சுமை கடவுள் பக்தி மட்டுமல்ல, தேசபக்தி, மொழி பக்தி, சாதிப் பற்று போன்றவையும் ஆகும். அவை அத்தனையும் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார். குறிப்பாக, தேசியம் என்ற பெயரால் தேசபக்தி என்ற பெயரால் சக மனிதரின் மீது வெறுப்பு கட்டமைக்கப்படும் இந்த வேளையில், "ஒரு காலத்தில் தேசம், தேசியம், தேசப்பற்று என்பன நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவற்றை எல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம், உலக சகோதரத்துவம், மக்கள் அபிமானம்(citizen
of the world humanism) என்று கருதுவதில் பெரிதும் முன்வந்து விட்டோம்" (“புரட்சி”-
31.12.1933) பெரியாரின் இந்தப் பார்வை நம்மை நாகரிகமானவர் படுத்துகிறது.
கடவுள், தேசியம் ஆகியவற்றை விமர்சித்து விட்டு அந்த இடத்தில் மொழிப் பற்றை வைப்பதை பெரியார் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. மொழி பற்றிய அவருடைய கருத்து அறிவியல் ரீதியானது. "மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல, அது இயற்கையானதுமல்ல, அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை. மொழி, மனிதனுக்குக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு, விஷயங்களைப் புரிந்துகொள்ள வாய்ப்பு அளிக்கும் அளவுக்குத் தேவையானதே ஒழிய கற்றுக் கொள்வதற்கு அவசியமானது அல்ல" (ஈ.வெ.ரா. சிந்தனைகள் 986)
அதற்கு மேல் மொழிக்கு புனிதம் கொடுப்பதற்கும், கற்பனைக் கதைகள் கட்டி பெருமை பாராட்டுவதற்கும் ஒன்றுமில்லை.
முடிவாக..
இப்படி ஒவ்வொரு தளத்திலும் எடுத்துக் கூற நினைத்தால் கருத்துகள் நீண்டு கொண்டே போகும். பெரியாரியம் மாந்தக் குழுவுக்கு உதவிகரமான ஒரு வாழ்வியல் பயிற்சி. சுருங்கச் சொன்னால் மேல் சாதி, கீழ் சாதி, ஆண், பெண், பணக்காரன், ஏழை, நம் மதத்தினர், வேற்று மதத்தினர் என நம்மில் இருந்து மற்றவரை வேறுபடுத்தி ஒருவரை அண்ணாந்து பார்க்கவும் மற்றவரைத் தாழ்த்திப் பார்க்கவும், சிலரை கிட்டவும் சிலரை தொலைவில் நிறுத்திப் பார்க்கவும் பழக்கப்படுத்தப்பட்ட நமது பார்வைக் கோளாறை பகுத்தறியும் சிகிச்சை மூலம் சரி செய்து நமது நோக்கை தெளிவாக்குகிறார். நம் முதுகில் தேவையற்று தூக்கித் திரியும் பாரங்களைத் தோழமை உரிமையுடன் பகடி செய்து தூக்கி எறிகிறார்.
வாழ்வில் நாம் குழம்பி நிற்கும் ஒவ்வொரு தருணத்திலும் நமது பார்வையைத் தெளிவாக்கி, மனித சமூகம் முன்னேறும் கால ஓட்டத்திற்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ளவும், அதே வேளையில் எந்தச் சூழலிலும் மனிதத் தன்மையை இழந்துவிடாமல் வாழ வழிகாட்டும் தோழமை தான் பெரியார்!
"புதிய எண்ணங்களும், புதிய எழுச்சிகளும், புதிய காரியங்களும் நிகழ்கின்றன. நீங்களும் காலப்போக்கில் உயரிய பலனை வீணாக்காது, பகுத்தறிவைப் மேற்போட்டுக்கொண்டு, ஜன சமுதாய நன்மையைத் தேடி பாடுபட முன்வாருங்கள், உங்களுடைய முயற்சிகளுக்கு எல்லாம் வெற்றியே உண்டு "
-
(நட்புடன்) பெரியார்
ஈ. வெ. ராமசாமி
வெங்காயம் செப்டம்பர்2021
Post a Comment