ஒன்றியம்

 இந்தியாவின் அதிகார மய்யம் நடுவண் அரசு, மத்திய அரசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த மூன்று வாரமாக இந்திய அரசு “ஒன்றிய அரசு” எனும் சொற்களால் அரசு கோப்பு முதல் சமூக வலைதளம் வரை அழைக்கப்படுகிறது.

இந்திய அரசு, மத்திய அரசு அல்ல , 'ஒன்றிய அரசு' என்ற கருத்தை கடந்த ஒன்றரை ஆண்டாக தமிழ்ச் சமூகத்தில் பதிய வைத்தவர் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் அவர்கள் தான்.

இந்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைப்பது வலதுசாரிகளுக்கு ஏனோ எரிச்சலை ஏற்படுத்துகிறது. உதாரணத்திறகு பி.ஜே.பி.யைச் சார்ந்த K.T.ராகவன் தன் ட்வீட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் திமுக பதவி ஏற்றதில் இருந்து 'மத்திய அரசை' ஒன்றிய அரசு என்று அழைத்துவருகிறது. இதில் ஏதும் உள்நோக்கம் இருக்காது என நினைக்கிறேன்” என்று உள்நோக்கத்தோடு பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஒரு நபர், “சமீபத்தில் நீங்கள் கேட்ட அழகிய வார்த்தை எது?” என்று கேள்வியை முன்வைத்துவிட்டு “நான் கேட்ட அழகிய வார்த்தை ஒன்றிய அரசு” என்று பதிவிட்டுள்ளார்.

ஒன்றிய அரசு என்கிற வார்த்தை பிஜேபி போன்ற வலதுசாரிகளுக்கு அச்சத்தையும் தமிழக அரசியலைப் பேசுபவர்களுக்கு மகிழ்வையும் ஏற்படுத்தியுள்ளது போல பொதுவாகத் தோன்றினாலும், ஒன்றிய அரசு என்றால் என்ன என்பதைப் பற்றி மார்க்சிய ஆய்வாளர் எஸ்.வி.ஆர் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளைப் பார்ப்போம்.

எஸ்.வி.ஆர் எழுதிய ‘ஆகஸ்ட்15’ புத்தகத்தில் 21 ஆம் அத்தியாயத்தில்; இந்தியா ஒரு கூட்டமைப்பு அல்லது கூட்டாட்சி (federation) என அழைப்பதை அம்பேத்கர் விரும்பவில்லை. இந்தியாவை ஒன்றியம்( union) என்றே அழைக்க வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். இங்கு 'கூட்டமைப்பு'( federation) 'ஒன்றியம்' (union) ஆகியவற்றில் உள்ள வேறுபாட்டை விவரிக்கும் எஸ்.வி.ஆர்., பெடரேசன் (federation) என்ற ஆங்கிலச்சொல், இலத்தீன் வார்த்தையான 'போடஸ்'(Foedus) என்பதிலிருந்து பிறந்தது. அந்த வார்த்தைக்கு 'உடன்படிக்கை' என்று பொருள். யூனியன்(Union) என்ற ஆங்கிலச் சொல் யுனி (Uni) என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவாகியுள்ளது. யுனி என்றால் ஒன்று எனப் பொருள். அஃதாவது, 'ஒன்றிப் போதல்' - ' ஒன்றோடொன்று கலத்தல்' என்ற ஒருமைத் தன்மையை அச்சொல் காட்டுகிறது.

'பெடரேசன்'அல்லது 'கூட்டாட்சி' என்ற சொல் வெறும் இணைத்தலை மட்டுமே குறித்தால் 'யூனியன்' அல்லது 'ஒன்றியம்' என்ற சொல் 'ஒன்றறக் கலந்து விடுதல்' என்ற பொருளைக் குறிக்கிறது. இந்தியா பல மாநிலங்களை இணைத்துக்கொண்ட ஒரு நாடு மட்டுமல்ல; அதிலுள்ள பல மாநிலங்களும் ஒன்றிணைந்து போய், பிரிக்கமுடியாத தன்மையைக் கொண்ட ஒரு நாடு என்பதனைக் காட்டவே இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் விதியில், " இந்தியா மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றியம் பற்றிய அரசியலமைப்பு அவையில் அம்பேத்கர் விவரித்தபோது:

தென் ஆப்பிரிக்க நாடு ஒரு ஒற்றையாட்சி நாடாகவே இருந்தாலும் அது 'ஒன்றியம்' என்றே குறிக்கப் படுகிறது. ஆனால் கூட்டாட்சி நாடாக உள்ள கனடாவும் ஒன்றியம் என்று அழைக்கப்படுகிறது. அதைப்போல, இந்திய அரசமைப்பும் 'கூட்டாட்சி முறையை சார்ந்ததாக' இருந்தாலும், அதை ஒன்றியம் என அழைத்தால் அது வழக்காறுக்கு எதிரானதல்ல. ஆனால், ஒன்றியம் என்ற சொல் ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் முக்கியமானது.

கனடிய அரசுச் சட்டத்தில் ஒன்றியம் என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், நமது அரசமைப்பை வரைந்தவர்கள் 'ஒன்றியம்' என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்கள் என்று என்னால் சொல்ல முடியும். இந்தியா ஒரு கூட்டாட்சி தான் என்பதை அவர்கள் தெளிவுபடுத்த விரும்பினாலும் அந்தக் கூட்டாட்சி, பல நாடுகள் இணைந்ததால் ஏற்பட்ட நாடல்ல. ஓர் ஒப்பந்தத்தின் மூலமாக பல நாடுகள் இணையப் பெற்று இந்தியக் கூட்டாட்சி உருவாகாததால், இந்தியாவிலிருந்து பிரிந்து போகக் கூடிய உரிமை எந்த மாநிலத்திற்கும் இல்லை.

அது அழிக்கமுடியாத ஒரு கூட்டாட்சி என்பதால், அது ஒன்றியம் எனப்படுகிறது. நிர்வாக வசதியை உத்தேசித்து நாடும், அதன் மக்களும், பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு இருந்தாலும், இந்திய நாடு ஒன்றறக் கலந்துவிட்ட முழுமையான ஒரு நாடு; அதன் மக்கள் மூலத்திலிருந்து பிறந்த தனித்த ஓர் ஆட்சி பீடத்தின் கீழ் வாழ்ந்து வருகிற ஒரே மக்கள். (constructional assembly debates Vol:7 page43)

ஒன்றியம் என்பது முழுக்க ஒற்றையாட்சியை மட்டுமே குறிக்கும் என்று அம்பேத்கர் பாராளுமன்ற அரசமைப்பு விவாதத்தில் சொன்னாலும் இந்தியாவை ஓர் ஒன்றியமாக அவர் கருதவில்லை,

அம்பேத்கர் - ராஜாஜி சந்திப்பு பற்றி “கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் அண்ணன் கொளத்தூர் மணி ஆற்றிய உரையில். "இந்தியா முழுவதும் ஒரே ஒன்றியமாக இருக்க முடியாது. தென்னிந்திய மாநிலங்களின் ஒன்றியம் என்று ஒன்று அமைக்கப்பட வேண்டும். வட இந்திய மாநிலங்களின் ஒன்றியம் என்று ஒன்று அமைக்கப்பட வேண்டும். தென்னிந்திய மாநிலங்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பாகவும் (Federation of Southern States), வட இந்திய மாநிலங்கள் சேர்ந்து கூட்டமைப்பாகவும் (Federation of Northern States) அமைத்து, இரண்டையும் சேர்த்து சம வாக்குரிமை அளித்து இந்திய பெருங் கூட்டமைப்பை (Confederation of India) உருவாக்க வேண்டும்” என்று சொன்னதாகச் சொல்கிறார்.

அத்துடன் அம்பேத்கர் மரணிக்கும் முன் 1955ஆம் ஆண்டு டிசம்பரில் எழுதியதில் (மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட போகிற காலகட்டத்தில் எழுதியது) தென்னிந்தியர்கள் மக்கள் தொகையில் குறைவாக இருக்கிறார்கள். வட இந்தியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் இரண்டு பேருக்கும் சம வாக்குரிமை அளித்து இந்திய ஒன்றியத்தை அமைக்க வேண்டும் என்றார். ஆனால் இந்திய ஒன்றியம் அவ்வாறு அமைக்கப்படவில்லை. பாராளுமன்ற அவையில் 534 இடங்களில் 120 இடங்கள்தான் தென்னிந்திய மாநிலங்களுக்கு இருக்கிறது. மீதம் இருக்கிற எல்லா இடங்களும் வட இந்திய மாநிலங்களுக்குத்தான் இருக்கிறது. நாடாளுமன்றம் அப்படியிருக்கக் கூடாது என்றார் அம்பேத்கர்.

அம்பேத்கர் வட இந்தியர்களுக்கும் தென் இந்தியர்களுக்கும் சம உரிமை இல்லை என்று சொன்னதை சமீபத்தில் நடந்த ஜி‌.எஸ்.டி கவுன்சிலில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும் குறிப்பிட்டார்.

தென்னிந்திய மாநிலங்கள் மூலமாக ஒன்றிய அரசிற்கு வரிப்பணமாக ஒரு ரூபாய் சென்றால் அவர்கள் நமக்கு திருப்பி 40 காசு, 50 காசு தான் தருகிறார்கள். அதுவே வட இந்திய மாநிலங்கள் ஒன்றிய அரசிற்கு ஒரு ரூபாய் தந்தால் அவர்களுக்கு 85,காசு 90 காசு தருகிறார்கள். இது சமஉரிமை இல்லை சமமற்ற அநீதி என்று தமிழக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அம்பேத்கர் தான் இறக்கும் முன் சொன்னது தான் 65ஆண்டுகளுக்கு பின்னும் தென்னிந்திய மாநிலங்களின் நிலைமையாகத் தமிழக நிதியமைச்சர் தெரிவித்தார். அத்துடன் தந்தை பெரியாரும் வட இந்திய மார்வாடிகள் மீது அச்சத்தினால் தான் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார். அறிஞர் அண்ணாவும் தனிநாடு கேட்டு பிறகு திராவிடக் கூட்டாட்சி முறையை வலியுறுத்தினார். அதுதான் 1970 காலகட்டத்தில் மாநில சுயாட்சியாக வடிவம் பெற்றது.

திராவிட நாடு, தனி நாடு கோரிக்கை; பிறகு கூட்டாட்சி தத்துவம்; மாநில சுயாட்சி போன்றவைகளைக் கடந்து ஒன்றியம் என்றால் என்ன என்று பார்க்கும்போது யூனியன்' அல்லது 'ஒன்றியம்' என்ற சொல் 'ஒன்றறக் கலந்து விடுதல்' என்ற பொருளைக் குறிப்பதாக எஸ்.வி.ஆர் சொல்கிறார். அண்ணல் அம்பேத்கரோ, ‘ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியக் கூட்டாட்சி உருவாகாததாலும், இந்தியாவிலிருந்து பிரிந்து போகக் கூடிய உரிமை எந்த மாநிலத்திற்கும் இல்லாததாலும், இந்திய ஆட்சி முறை ஒன்றியம் எனப்படுகிறது என்று சொன்னதோடு, சம உரிமை மிக்க ஒன்றியம் உருவாக்கப்படவேண்டும் என்றார்.

ஒன்றியத்துக்கான வரலாறு இப்படி இருக்க, வரலாறு என்றால் என்னவென்றே தெரியாத வலதுசாரி அறிவாளிகள் ஒன்றியம் என்பதில் அச்சம் கொள்ளவோ, 'சிலர்' பெருமிதம் கொள்ளவோ ஒன்றிய விடயத்தில் ஒன்றுமே இல்லை என்பதே மேற்சொன்ன இரு ஆளுமைகளின் விளக்கத்தால் நாம் அறிய முடிகிறது.


- இக்லாஸ் உசேன்

Post a Comment

Previous Post Next Post