அரசியல் சட்டம்: இன்றைய ஆட்சி சட்டப்படி இந்துக்கள் ஆட்சி அல்ல: பெரியார்

பெரியார், விடுதலை 06.09.1971

இன்றைய இந்நாட்டு அரசியல் ஆட்சியானது சட்டப்படி இந்துக்கள் ஆட்சி அல்ல என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். அது மாத்திரமல்ல. ஆட்சியில் எந்த மதக்காரருக்கும் மத சம்பந்தமான, கடவுள் சம்பந்தமான உரிமை இல்லை என்பதையும் மக்கள் உணர வேண்டும். 

அது மாத்திரமல்ல, எந்தவிதமான கடவுள், மதம், கோவில், உற்சவம் முதலியவற்றுக்கும் அரசாங்க நிதியில் இருந்து ஒரு காசு கூட செலவு செய்யக்கூடாது என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

அரசியல் சட்டத்தில் உள்ளது

அரசியலில் (அரசியல் சட்டத்தில்) மனிதனுக்கு இருக்கும் உரிமை என்னவென்றால் சமூகம், பொருளாதாரம், ராஜ்யம் இவற்றின் நீதி, தனிப்பட்ட மனிதனுக்கு கொள்கை, மதம் வழிபாடு உரிமை அந்தஸ்து, வாய்ப்பு இவற்றில் சமத்துவம் இவ்வளவும் நமது அரசியல் அமைப்பில் (சட்டத்தில்) குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றில் மனுதர்மம் தொக்கி இருக்கிறது என்றாலும் கடவுள் நம்பிக்கை, மதநம்பிக்கை புராண இதிகாச நம்பிக்கை எல்லா மக்களுக்கும் பொதுவானது என்று எங்கும் குறிப்பிடவில்லை.

கடவுள் மதம் அவரவர் வீட்டிற்குள்தான்

கடவுள் மதம் கடவுள் தன்மையுள்ள மனிதர்கள் தெய்வங்கள் முதலியவை ஒரு மனிதனுடைய உள்ளத்திற்கும் அவனவன் வீட்டிற்குள்ளும்தான் இருக்கத் தக்கதே ஒழிய பொதுமக்களுக்குள் புகுத்தத் தக்கது என்பதாக அரசியல் சட்டத்தில் எங்குமே காணப்படவில்லை.

மதச்சார்பற்ற என்பதன் பொருள்

“அரசாங்கம் மத சார்பற்ற அரசாங்கம்” என்றால், எல்லா மத சார்பும் உடையது என்று பொருள் ஆகுமா? மதசார்பு அற்றது என்றால் எந்த மதப்பற்றும் இல்லதது என்றுதான் பொருளாகுமே ஒழிய எல்லா மதப்பற்றுமுடையது என்பது பொருளாகுமா? அங்கிலத்தில் ‘செக்குலர்’ ஸ்டேட் (Secular) என்ற சொல்லுக்கு மதசார்பற்ற என்ற பொருள் தான் அகராதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. உலகில் மற்ற இடங்களில் “செக்குலர்” என்ற சொல்லை கடவுள், மதம், தெய்வீகம், ஆத்மார்த்தம் முதலிய நம்பிக்கையையே (அடிப்படையாய் கொண்டதன்மை) அற்ற என்ற பொருள்தான் சொல்லப்படுகிறது.

காந்தியார் கூறியது

இதைப் பற்றி காந்தியாரும் ஒரு சமயத்தில் தெளிவாகப் பெசி இருக்கிறார்.
அதாவது,
“நமது அரசாங்கம் “செக்குலர் ஸ்டேட்” மத சார்பற்ற அரசாங்கம் ஆனதால், மத சம்பந்தமாக எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளலாகாது. கோயில் மத சம்பந்தமான ஒரு காசு அளவும் அரசாங்க பொது நிதியில் இருந்து செலவழிக்கலாகாது” என்று சொல்லி இருக்கிறார்.
இப்படி சொன்ன ஒரு மாதத்திற்குள்ளாகத்தான் பார்ப்பனத் தலைவர்கள் சதியினால் பார்ப்பனரால் கொல்லப்பட்டார்.

பார்ப்பனக் கூப்பாடு யோக்கியமற்றதே

இந்த நிலையில் அரசாங்கம் “மதத்தை, கடவுளை பாதுகாக்க வேண்டும்”, “கடவுள் மத பிரசாரம் செய்யவேண்டும்” என்று நமது பார்ப்பனர்கள் போராடுவதும் மாயக்கண்ணீர் விடுவதும் பூச்சாண்டி விடுவதும் எப்படி புத்திசாலித்தனமாகும்? என்று கேட்கிறேன்.
இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நமது பார்ப்பனர்கள் கட்டுப்பாடாக மாய்மாலம் செய்தும் மிரட்டியும் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளவே பார்க்கிறார்கள்.

காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனமே

காங்கிரசு என்றால் அதில் தமிழன் தலைவனாக இருந்தாலும் ஆதிக்கக்காரனாக இருந்தாலும் அது பார்ப்பன ஆதிக்க பார்ப்பனீய பாதுகாப்பு ஸ்தாபனமாக இருந்ததால் காங்கிரசு ஆட்சி இந்து மத வருணாச்சிரம ஆட்சியாகவே அது தோன்றிய நாள் முதல் ஒழிக்கப்படும் நாள் வரை ஆட்சி புரிந்து வந்தது; வருகிறது.

Post a Comment

Previous Post Next Post