டிசம்பர் 2020
ஊரும் உணர்வும்
ஒரு சராசரி மனிதன், தன் மனைவி, தன் பிள்ளை என்று சின்ன வட்டத்திற்குள்ளே வாழ்ந்து கொண்டிருப்பான். ஒரு சில பேர் தானும் தன் உறவினர்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து வாழ்வார்கள். சிலர் மட்டுமே எவ்வித சுயநலமும் இல்லாமல், இந்த நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்கவேண்டும், எல்லோருக்கும் சமநீதி சமத்துவம் கிடைக்க வேண்டும் என்று போராடுவார்கள். அப்படி இம்மண்ணில் போராடியவர்களில் புத்தர், பூலே, பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் வரிசையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கும் ஒருவர்.
சாதி வேற்றுமைகளால் பிளவுண்டு கிடக்கும் இந்நாட்டிற்கு முதலில் சமூக மாற்றமே தேவை. சமூக மாற்றம் இல்லாமல் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் எதுவும் சமத்துவமும் சகோதரத்துவமும் உள்ள சமூகத்தை உருவாக்காது என்பதில் சுதந்திரத்திற்கு முன்பே பெரியார் உறுதியாய் இருந்ததால்தான் 'வெள்ளைக்காரிடம் இருந்து மட்டும் பெற்ற’ இந்திய சுதந்திரத்தை, கருப்பு தினம் என்றும் அறிவித்தார்.
பொருளாதார சமத்துவம் இல்லாத அரசியல் சமத்துவம் நமது ஜனநாயகக் கட்டமைப்பில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்றும், அவற்றை சரி செய்ய தவறினால் அது முழுமையான ஜனநாயக வீழ்ச்சிக்கு வழிவகுத்துவிடும் என்றார் அம்பேத்கர்.
ஆம் அம்பேத்கர்-பெரியார் கருதியது போல் போலித்தனமான சமத்துவத்தின் மீது கட்டப்பட்ட இந்திய ஆட்சிமுறை, சுதந்திரம் பெற்று 42 வருடங்களுக்கு பிறகும் ஏற்றத்தாழ்வை விரிவுபடுத்தி இருந்தது. இப்படி ஏற்றத்தாழ்வுகளால் இந்நாடு சீரழிந்து இருப்பதற்கு முக்கிய காரணம் இந்நாட்டை ஆதிக்கம் மற்றும் அதிகாரம் செலுத்தும் ஐந்து முக்கிய துறையினரான கேபினட் அமைச்சர்கள், கேபினட் அரசுத் துறை செயலாளர்கள், ஊடகம் , முக்கிய கட்சிகள், மற்றும் கார்ப்பரேட் தொழில் நிறுவனத்தின் இயக்குனராக இருப்பவர்கள் தான் என்கிறார் வி பி சிங்.
இந்த ஐந்து பிரிவினர்களே இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கிறார்கள். இந்த ஐந்து பிரிவுகளிலும் இருப்பவர்கள் முழுக்க முழுக்க உயர் சாதிக்காரர்கள். இவர்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் மேற்சொன்ன ஐந்து துறைகளும் இந்தியா சுதந்திரம் பெற்றதில்ல் இருந்தே இருந்துவருகிறது. இப்படி ஒரு சாரார் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இதுவரை அதிகார தளத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் ஆன ஒரு ஆட்சிதான் 1989இல் விபி சிங் தலைமையில் இந்தியாவில் அமைந்தது.
ஆட்சி நீடித்த காலம் வெறும் 11 மாதங்களே. ஜனதா தளம், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டுகளை முக்கூட்டணியாக கொண்டு, திமுக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளைக் கூட்டாளிகளாக இணைத்து பதினொரு மாத ஆட்சிதான் 11 நூற்றாண்டாக ஆதிக்கம் செய்துவந்த சனாதனத்திற்க்கு சமாதி கட்டும் பணியை தொடங்கி வைத்தது.
அம்பேத்கரை கொண்டாடிய ஆட்சி :
வி பி சிங் என்றாலே அவர் சமூகநீதிக் காவலர், 10 ஆண்டாக முடங்கிக் கிடந்த மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒடுக்கீடு கொண்டுவந்தார் என்பதே அவரின் பொதுவான அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது.
அவர் இட ஒதுக்கீடு நாயகன் மட்டுமல்ல 11 நூற்றாண்டாக கோலோச்சும் சாதியத்தால் சமநீதி, சமத்துவம் மறுக்கப்பட்ட இன மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அரசியல் பங்களிப்பை உருவாக்கினார், வட இந்தியாவில் உரிமை மறுக்கப்பட்டவர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரின் அரசியல் ஆதிக்கம் மேலோங்க, இன்றைக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் தலைவர்களாக கருதப்படுபவர்கள் அனைவரும் அன்று 1989இல் உருவானவர்கள் தான். தென்னிந்தியாவில் வி பி சிங் ஆட்சிக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே பெரியார் என்கிற சமூகநீதி தலைவரின் செயல்பாட்டால் பிற்படுத்தப்பட்டோருக்கான அரசியல் அதிகாரம் இங்கு கட்டமைக்கப்பட்டது.
இந்தியாவின் தலைசிறந்த தன்னிகரற்ற மாமேதை அம்பேத்கரை சனாதன ஆட்சியாளர்கள் புறக்கணித்து அவருடைய கருத்துக்களை மறைத்து அவருக்கான எவ்வித அங்கீகாரத்தையும் தராமல் உதாசீனப்படுத்தியதை தகர்த்தெறியும் விதமாக வி.பி. சிங் ஆட்சியில் மிக முக்கிய செயல்பாடாக அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது கொடுத்ததோடு, நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் திருவுருவச் சிலை அமைத்து, அம்பேத்கரின் பிறந்த நூற்றாண்டான 1990-ம் ஆண்டை சமூக நீதி ஆண்டாக அறிவித்ததோடு அம்பேத்கரின் எழுத்துக்களை பேச்சுகளை நாடு முழுக்க கொண்டு சேர்க்க பல்வேறு வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டன. இன்றைக்கு அம்பேத்கரின் எழுத்துக்கள் நாடு முழுக்க பரவியிருக்க அந்த 11மாத வி.பி. சிங் அரசின் காலம் ஒரு முக்கிய காரணம்.
அம்பேத்கருக்கு வி பி சிங் அரசு கொடுத்த நியாமான முக்கியத்துவம் சனாதனவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. வி பி சிங் அரசின் கூட்டணியில் இருந்ததால் பாரதிய ( பாசிச) ஜனதாவைச் சேர்ந்தவர்கள் தம் எதிர்ப்பை வெளிக்காட்ட முடியாமல் தவித்து வந்தார்கள்.
ஏனென்றால் பிஜேபியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் விசுவ இந்து பரிசத் இணைந்து 1984ல் பஜ்ரங் தள் என்கிற ஒரு அமைப்பை உருவாக்கின. அந்த அமைப்பின் நோக்கம் என்னவென்றால் பாபர்மசூதியைத் தகர்ப்பது , அதற்காக கலவரம் செய்ய, உரிமை மறுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்து , தன் கனவுத் திட்டமான இந்து ராஜ்யத்தை கட்டமைக்க முயற்சிப்பது.
வி பி சிங் அரசு ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஜனநாயக அரசியலையும், அம்பேத்கரின் சித்தாந்தத்தையும் கற்பித்து வந்தால், இது இந்துத்துவா சித்தாந்தங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று அஞ்சிக் கொண்டிருந்தார்கள். "இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து இருப்பது இந்த பஜ்ரங்தள் என்கிற கலவர அமைப்பில் மட்டுமே"
சமூக நீதி ஆட்சியை கவிழ்க்க புறப்பட்ட ரத யாத்திரை
அம்பேத்கருக்கு கொடுத்த முக்கியத்துவத்தையே ஜீரணிக்க முடியாமல் தவித்து வந்த இந்துத்துவவாதிகளுக்கு மேலும் ஒரு இடியாய் வந்திறங்கியது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு. வி பி சிங் அரசை தேவதை என்று கருதி ஒரு பிசாசை பிடித்து அமர வைத்து விட்டோமே என இந்துத்துவவாதிகள் அஞ்சினார்கள். அதை வெளிப்படையாக சொல்வதற்கும் அவர்களுக்கு அச்சமாக இருந்தது.
அயோத்தியில் பூமி பூஜை செய்ய உதவிய, ராஜீவ் காந்தியின் காங்கிரஸே ஆண்டாலும் பரவாயில்லை, இனி விபி சிங் ஆளக்கூடாது என்று பாபர் மசூதியை தகர்த்து அங்கு ராமர் கோயில் கட்ட ரதயாத்திரை தொடங்கப் போவதாக அறிவித்தார் அத்வானி. 17.10.1990ல் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி மறுக்கப்பட்டாலோ, ரதயாத்திரையைத் தடுத்தாலோ வி பி சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அயோத்தியில் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்ட துளியளவும் வி பி சிங் அரசு துணை நிற்காது என்பது பிஜேபிக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் அன்றையக்கு உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையத் என்கிற ஒரு இஸ்லாமியர். அதோடு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்கிற பெயரில் பஞ்சாப் பொற்கோயிலில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலுக்கு இந்திய அரசின் சார்பில் மன்னிப்பு கேட்பதாக அமிர்தசரஸ்க்கே சென்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார் வி பி சிங்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு தீர்மானம் அறிவித்த அன்றிரவே, பாரதிய ஜனதா கட்சி தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றால் ஏற்படக்கூடிய விளைவுகளை அரசு சந்திக்கத் தயாராக இருப்பதாக விபி சிங் அறிவித்தார். கஜினி முகம்மது படையெடுப்பால் தகர்க்கப்பட்டதாக சொல்லப்படும் சோமநாதர் கோயிலிலிருந்து பஜ்ரங்தள் தொண்டர்கள் ரத்தத் திலகத்தை நெற்றியில் சூட, அத்வானி ரத யாத்திரை தொடங்கினார். ரத யாத்திரை ரத்த யாத்திரையாகவே தொடர்ந்தது. அதைக் கண்டு பல மாநில அரசுகள் அஞ்சின. சில மாநில முதல்வர்கள், அத்வானியிடம் தயவு செய்து எங்கள் மாநிலத்திற்கு வராதீர்கள் என்று பேச்சுவார்த்தை நடத்தினர். விபி சிங் ஆட்சி கவிழும் வரை தன் யாத்திரையை நிறுத்த மாட்டேன் என்று முடிவெடுத்த அத்வானியின் ஆசையை நிறைவேற்றி வைத்தார் லாலு பிரசாத் யாதவ்.
ஆம் கலவர யாத்திரையை பீகாரில் அனுமதிக்க முடியாது என்று அன்றைக்கு பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் அறிவித்திருந்தார் அதையும் மீறி வந்தால் எல்லையிலேயே கைது செய்வோம் என்றும் சொன்னார். பீகார் எல்லையிலே அத்வானியைக் கைது செய்ய வி பி சிங்கும் லாலுவுக்கு ஆதரவு தெரிவித்தார். அத்வானியும் கைது செய்யப்பட்டார். அத்தோடு வி.பி. சிங் ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
என்றும் வாழ்வார்
விபி சிங் ஆட்சி வீழ்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு. அதை பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்டோர்கள் உணரவில்லை. அவர்கள் பெருமித உணர்வுகளால் தலைகனத்தோடு ஆண்ட பரம்பரை அல்லது சனாதனம் கற்பித்த தற்பெருமை வரலாற்றை சுமந்து கொண்டு திரிந்தார்கள்.
பிற்படுத்தப்பட்டவர்கள் தான் இப்படி என்றால், அடிப்படைவாதிகள், மதச்சார்பற்றவர்கள், மார்க்சியவாதிகள், காந்தியவாதிகளாக இருந்த பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதிக்காரர்கள் அனைவரும் வி.பி சிங் அரசுக்கு எதிராக ஒன்று திரண்டு வெறுப்பு பிரச்சாரத்தை திட்டம்போட்டு வட இந்தியா முழுக்க பரப்பினர். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கல்லூரி மாணவன் ராஜுவ் கோஸ்வாமி என்கிற பார்ப்பனன் உயிர் விட்டான். விளைவாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட மாணவரே போராடும் அவலம் நடந்தேறியது.
விபி சிங் ஆட்சியை பற்றி துக்ளக் சோ ராமசாமி, “விபி சிங்கின் ஆட்சிக் காலம் நெறிபிறழ்வான காலம். அந்த மனிதரை நான் எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறேன், பாஜகவுக்கு அவருக்கும் கடுமையான கருத்து வேறுபாடு தொடங்கியபோது பாஜகவிடம் இருந்து பிற்பட்ட வகுப்பினரை பாஜக கட்சியிலிருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் கட்சியினரை அடக்கி வைக்க முடியும் என்று விபி.சிங் கருதினார் அதன் காரணமாகவே மண்டல் கமிஷன் மூலம் அவர் இந்தியாவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டார் என்று நினைக்கிறேன். அவர் இடஒதுக்கீட்டை ஆதரித்தவராக இருந்ததில்லை.”
துக்ளக் சோ சொல்கிறார் இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் ஆதரிப்பவர் இல்லை என்று. ஆனால் 1989 பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். வி பி சிங் விடயத்தில் பார்ப்பனியம் கோயபல்ஸ் பார்முலாவை நடைமுறைப்படுத்தியது, ஒரு பொய்யை ஒரு முறை சொன்னால் அது பொய், அதே பொய்யை ஆயிரம் பேர் ஆயிரம் முறை சொன்னால் அது உண்மையாகி விடும் என்கிற பித்தலாட்டக் கருத்தை சோ வகையறாக்கள் தங்கள் ஊடக பலத்தின் மூலம் கட்டவிழ்த்து விட்டார்கள்.
மேலும் இட ஒதுக்கீடு பிரச்சனையை திசைதிருப்ப மிகப்பெரிய துருப்புச் சீட்டாக அமைந்தது பாபர் மசூதி இடிப்பு. அம்பேத்கருக்கு ஏற்பட்டுள்ள முக்கியத்துவத்தை ஜீரணிக்க முடியாத இந்துத்துவவாதிகள் அந்த வெறுப்பை பாபர் மசூதியின் மீது காட்டினார்கள். அம்பேத்கர் மறைந்த நாளான டிசம்பர் 6 அன்று மசூதியைத் தகர்த்து முஸ்லிம்கள் மீதான வெறியையும் அம்பேத்கர் மீதான வெறுப்பையும் தீர்த்துக்கொண்டனர்.
சமூக நீதி அரசியல் வீழ்ந்து, மதவாத அரசியல் தலை தூக்கிய பிறகு அரசியலில் இருந்து விலகி கார்ப்ரேட் நிலஅபகரிப்பை எதிர்த்து போராடினார் வி.பி. சிங். அத்தோடு ரத்தப் புற்றுநோய், கிட்னி பிரச்சினையால் தொடர்ந்து சிகிச்சைபெற்று 2008ல் காலமானார். வி.பி.சிங் மறைந்து, அவரைத் தீயிட்டு அடக்கம் செய்தபோதுகூட, ராஜுவ் கோஸ்வாமி தன்னைத்தானே கொளுத்திகொண்டு எரிந்த தீயின் மிச்சமே இன்று எரிகிறது என ‘இந்தியா டுடே’ இதழ் எழுதியது என்றால் வி.பி. சிங் மீதான அவாளின் வெறுப்பு எப்படிப்பட்டது என்பதை நாம் உணர முடியும்.
அப்பழுக்கற்ற கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாத அரசியல்வாதி,
சமூகநீதில் காவலர் என்று பல அடையாளங்கள் கொண்ட திரு. வி பி சிங் அவர்கள் இந்நாட்டில் சமூகநீதி உள்ளவரை வாழ்வார்.
Post a Comment