ஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்


அக்டோபர் 2020.       - ஒற்றன்

‘மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்’ என்ற தோழர் ஸ்டாலினுடைய கட்டுரை, 1913-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தேசம் பற்றிய அடிப்படையான வரையறையை இக்கட்டுரையில் முன்வைக்கிறார் ஸ்டாலின்.

வரலாற்று ரீதியில் உருவான மொழி, பிரதேசம், பொருளாதார வாழ்வு ஆகியவற்றை உடைய ஒரு நிலையான சமூகம்; இது ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் மனோபாவம் உடையது. இப்பண்புகள் அனைத்தும் கொண்டிருக்கும்போதுதான் அது தேசமாகும் (A nation is a historically constituted, stable community of people, formed on the basis of a common language, territory, economic life and psychological make-up manifested in a common culture).

ஒரு தேசத்துக்கு அதனுடைய போக்கை நிர்ணயித்துக் கொள்ள முழுச்சுதந்திரமும் உண்டு என்று கூறும் ஸ்டாலின், அதே நேரம், அது மற்ற தேசங்களின் உரிமைகளைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்கிறார்.

ஒரு தேசம் சுயாட்சி முறையில் தன்னுடைய நிலையை அமைத்துக் கொள்ளலாம். அல்லது பிரிந்து செல்லும் உரிமை அதற்கு உண்டு. ஆனால், தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கு உகந்ததாக இருப்பது எது? சுயாட்சியா, கூட்டாட்சியா அல்லது பிரிவினையா? (Autonomy, Federation or Separation?)

இந்த இடத்தில்தான் தேசிய சுயநிர்ணய உரிமையை ஸ்டாலின் முன்வைக்கிறார்.

ஒரு தேசம் அதனுடைய விதியை அதுவே தீர்மானிப்பது அல்லது நிர்ணயிப்பது தேசிய சுயநிர்ணய உரிமை. மற்ற யாருக்கும் அந்த தேசத்தின்  நிறுவனங்களிலோ, பழக்க, வழக்கங்களிலோ, மொழியிலோ பிற உரிமைகளிலோ தலையிட உரிமை கிடையாது.

தேசங்கள் இறையாண்மை பெற்றவையாகவும், அனைத்து தேசங்களுக்கும் சமமான உரிமையும் இருக்கும். ஒவ்வொரு தேசத்தின் சுயநிர்ணயத்தைத் தொழிலாளி வர்க்கம் ஆதரிப்பதை ஸ்டாலின் வலியுறுத்துகிறார். 

தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஐந்து நிபந்தனைகள் உள்ளன என்று ஸ்டாலின் முடிவுக்கு வருகிறார்.

  1. அனைத்து தேசங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது.

  2. பல தேசிய அரசியல் தமது சொந்தப் பிரதேசத்தைக் கொண்டுள்ள தேசியக் குழுக்களுக்குப் பிரதேச சுயாட்சி வழங்குவது.

  3. முற்று முழுதான ஜனநாயக சூழ்நிலைகளை நிறுவுவது.

  4. தேசிய சமத்துவத்தைக் கடைபிடிப்பது; அதாவது, எந்த ஒரு தேசத்துக்கும் சிறப்புரிமைகள் ஏதும் கூடாது, தேசிய சிறுபான்மையினரின் உரிமைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்காமலிருப்பது.

  5. ஐக்கியப்பட்ட (பல தேசிய) தொழிலாளி வர்க்க நிறுவனங்கள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் தேசிய ஒருமைப்பாடு.

தேசியம், தேசிய இனங்களின் பிரச்சினை ஆகியவை குறித்துத் தோழர் ஸ்டாலினின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கூறுகளை, இந்தியாவில் இருக்கும் தேசிய இனங்களின் பிரச்சினையோடு பொருத்திப் பார்க்கலாம்.

இந்தியா ஒரு நாடா / தேசமா என்பதைக் குறித்து, 1930-லேயே தந்தை பெரியார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“இந்தியா ஒரு நாடு என்று ஆனால்தானே, இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமை உண்டு. இப்போது இந்தியா ஒரு நாடாயிருக்கிறதா?

இந்தியா – சாதிகள் காட்சி சாலையாக, மதக் கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சி சாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கிறது” (குடிஅரசு, 01.06.1930).

இந்தியாவை ஒரே தேசமாகக் கட்டமைக்கப் பல்வேறு மாயத் தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதைப் பெரியார் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டிகொண்டே இருந்தார். அதில் முக்கியமாக மதம், மொழி ஆகியவை பயன்படுத்தப்படுவதை முற்றுமாக மறுதலிக்கிறார்.

“இந்து மதத்தால்தான் இந்தியா நேஷன் ஆயிற்று என்றால், அதாவது நேஷனுக்கு மதமே பிரதானம் என்றால், இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும், பவுத்தருக்கும், பார்சிகளுக்கும் இந்தியா நேஷனாகுமா?”

“பொதுமொழி இந்திதான் இருக்க வேண்டும் என்றால் – அதுதான் அதிக மக்களால் பேசப்படுகிறது என்றால், ஒரு பொதுமொழியைத் தெரிந்தெடுக்க மெஜாரிட்டி பலமே போதுமானதாகுமா? அந்த மொழி பழையது என்றோ வெகுபேர் பேசுகிறார்கள் என்றோ காரணம் சொல்லித் தேர்ந்தெடுப்பது அறிவுடைமையாகாது. அந்த மொழியால் தேச மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன என்று பார்க்க வேண்டும்” (பகுத்தறிவு மலர் 3,  இதழ் 6).

இந்தியா, பல தேசிய இனங்களின் கூட்டமைப்பாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் விடுதலைக்கு முன்னோ, அதற்குப் பின்னோ, இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்துள்ளன. விடுதலைக்குப் பின்னர், நியாயமான மாநிலக் கோரிக்கைகள் “அனைத்திந்திய ஒருமைப்பாடு” என்ற பனிப்படலத்தால் மூடி மறைக்கப்பட்டதாக கு.ச. ஆனந்தன் கூறுகிறார் (இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்)

தோழர் ஸ்டாலின் குறிப்பிடும் சுயநிர்ணய உரிமை என்பது  தேசிய இனங்களின் பிறப்புரிமையாகும். ஒரு குடியரசு நாட்டின் தேசிய இன மக்களிடம் என்றென்றும் நிலைத்து நிற்கும் ‘அரசியல் இறையாண்மையே’ சுய நிர்ணய உரிமையின் உயிர்ப்பகுதி. ஆனால் இந்தியாவில் அரசியலைப்பு சார்ந்த அதிகாரங்கள் ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டுள்ளன. இந்திய மாநிலங்களுக்கோ, இந்தியாவில் வாழும் தேசிய இனங்களுக்கொ அரசியல் இறையாண்மை இல்லை. இந்தியாவில் வழங்கும் மொழிகளுக்கிடையே மொழிச் சமத்துவம் இல்லை. ஒரு மொழியை மட்டும் முன்னேற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை அரசியலமைப்புச் சட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது. இந்தச் சமனற்ற போக்கு தொடர்வதற்கு, மாநிலங்களுக்குச் சுயநிர்ணய உரிமை இல்லாததே காரணமாகும். தேசிய இனங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தோழர் ஸ்டாலின் முன்வைத்த நிபந்தனைகளை இந்தியாவின் பிரச்சினைகளோடு பொருத்திப் பார்ப்பது வருங்காலத்தில் ‘சுயநிர்ணய உரிமை கொண்ட தேசிய இனங்களின் கூட்டாட்சியாக இந்தியா’ மாறுவதற்கான சிந்தனைகளை விதைக்கும்.



   

 



Post a Comment

Previous Post Next Post