பொதுவாக மேல்தட்டு மக்கள் முதல்தர உயர்தர சிகிச்சையை பெரிய தனியார் மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்வார்கள். கீழ்த்தட்டு மக்களே இலவச சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நாடுவர். அந்த விதியை மாற்றி எல்லா வகுப்பினரையும் ஒரே இடத்திற்க்கு வரவைத்தது கொரரோனா. மூச்சுக்கு மூச்சு சாதி பெருமை பேசும் சாதி வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகளை மூச்சுத் திணற வைத்தது கொரோனா வைரஸ். எந்த சாதியையும் விட்டுவைக்கவில்லை!
எல்லா வகுப்பினரும் மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கில் அனுமதிக்கப்பட்டனர். நோய்த் தொற்று அபாயம் காரணமாக நோயாளிகளைக் கவனிக்க உறவினர்களுக்கு அனுமதி இல்லை. நோயாளிகள் ஒருவருக்கொருவர் உதவியாய் இருக்க வேண்டிய கட்டாயம். “நீங்க என்ன ஆளுங்க” என்று அங்கு கேட்க முடியாது. எல்லாருக்கும் ஒரே வகையான மருத்துவம். பி,பி.ஈ( PPE) அணிந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் சாதி என்னவென்று யாருக்கும் தெரியாது. தீண்டாமை வைரஸ், கொரோனா வைரஸால் வெளியேற்றப்பட்டது. இயற்கை உபாதைகளின் முன் மனிதம் மட்டுமே உதவும் என்பதையும் உணர்த்தியது.
கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன், வென்ட்டிலெட்டர் ஆகியன எல்லோருக்கும் பொதுவாகத்தான் இருக்கின்றன. மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர் என அனைவரும் சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை மறந்து செயல்படுகின்றனர். உயர்சாதி உயர் வகுப்பு என்று எவருக்கும் சிறப்பு சிகிச்சை வழங்கபடுவதில்லை.
சிகிச்சை பலனின்றி பலர் இறந்துபோயினர். அமரர் அறையில் வைக்கப்பட்ட சடலங்கள் சாதியின் அடிப்படையில் ஒதுக்கிவைக்கப்படவில்லை. அனைத்து சாதியினருக்கும் ஒரே அறைதான். உயர்சாதி, தாழ்ந்த சாதி, மேல்வகுப்பு, கீழ்வகுப்பு என பாகுபாடுகளும் உடைந்து போயின.
மாதங்கள் சென்றன. எல்லாம் மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பின. எல்லோருக்கும் கிடைக்க பெறாத சிறப்பு சிகிச்சைகளும், சிறப்பு சலுகைகளும் சிலருக்கு மட்டும் கிடைக்க ஆரம்பித்தன. நிரம்பியிருக்கும் அவசர சிகிச்சை பிரிவுகளில் சிலருக்கு தேவைப்படும்பொழுது புதிதாக படுக்கைகள் போடப்படுகின்றன. புதிதாக வென்ட்டிலேட்டர்கள் கொண்டு வரப்படுகின்றன. இவ்வளவு நாள்கள் இவை எங்கே இருந்தன என்று கேள்வி கேட்கத் தூண்டும். அத்தகைய வசதிகள் சாதாரண மக்களுக்கு கிடைக்கப் பெறுவதில்லை. அவர்கள் கொரோனாவுடன் சேர்த்து இதுபோன்ற அரசு நிர்வாகங்களுடனும் போராட வேண்டியுள்ளது.
நோய்த் தொற்றின் தாக்கம் மிகக் குறைவாக இருப்பவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்துதல் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள தனியறை, தனி கழிப்பிடம் இருந்தால் போதும். ஓர் அறையை மட்டுமே வீடாகக் கொண்டு வாழும் ஏழைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. நோய் உறுதி செய்யப்பட்ட பிறகு தன் அன்றாட வேலையை விட்டுவிட்டு இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம். இவ்வாறு, வேலைக்குச் செல்லும் ஆண் மருத்துவமனைக்கு வந்து விட்டால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் படும் இன்னல்களை சொல்லி அறிய வேண்டியதில்லை. வங்கியில் பணத்தை வைத்துக்கொண்டும், வீட்டிலேயே அமர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டும், அதனால் கொரோனா காலத்திலும் முழு வருமானம் பெற்றுக் கொண்டும் வாழும் மக்களுக்கு தினக்கூலியை நம்பி பிழைப்பு நடத்தும் ஏழைகளுக்கு கொரோனா இழைத்துக்கொண்டிருக்கும் அநீதியை நடுத்தரச் சமூகம் அறியாது.
வலிப்பு, இருதய, சிறுநீரக, ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோய்களைக் கொண்டவர்கள் மாதாமாதம் அரசு மருத்துவமனைகளில் மாத்திரை வாங்குவது வழக்கம். கொரோனாவால் இதுவும் தடைபட்டு போக, பணம் உள்ளவர்களோ தனியார் மருந்துக்கடைகளில் மாத்திரை பெற முடிகிறது. இவ்வாறு மாத்திரைகளை பெற இயலாதோர் நோய் முற்றி மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகின்றனர். ஆம், இந்த கொரோனாவும் எற்றத்தாழ்வு பார்க்கத்தான் செய்கிறது.
அரசு மருத்துவமனைகளை எடுத்துக்கொண்டால் அங்கு பணிபுரியும் முதல் தலைமுறையாகவும் ஏழைக் குடும்பங்களில் இருந்தும் மருத்துவர்களாக வந்தவர்கள் எந்த வேறுபாடும் இன்றி அனைத்து வகுப்பினரையும் சமமாகப் பார்க்கின்றனர், சிகிச்சை அளிக்கின்றனர். சமூகத்தில் அரசு மருத்துவமனையின் பங்கு என்னவென்றும், அரசு மருத்துவர்களின் பொறுப்பையும், மக்கள் இந்த அமைப்பை எந்த அளவு நம்பியிருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்திருக்கிறார்கள். பரம்பரை மருத்துவர்கள் மற்றும் வசதி படைத்த குடும்பத்திலிருந்து வந்த மருத்துவர்கள் சிலரின் அணுகுமுறையைக் கூர்ந்து கவனித்தால், அவர்கள் உயர் வகுப்பினர்க்குக் கொடுக்கும் அதிக முக்கியத்துவத்தையும் அதிக கவனிப்பையும் உணர முடியும்.
கொரோனா வைரஸ் நம் அனைவருடய வாழ்வையும் புரட்டிப்போட்டுவிட்டது. அதிலும் அதிகம் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பது அன்றாடம் கூலிக்கு செல்லும் ஏழைகளே. ஆயினும் இந்த கொரோனா வைரஸ் சமூகத்திலுள்ள சாதி, மதம், வகுப்பு ஆகிய நோய்களையும் ஒரு கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
-அரசு மருத்துவர்
Post a Comment