வக்ஃபு : ஊடகங்களின் அவதூறுகள்

-இக்லாஸ் உசேன்


5.3.2025 - அன்று வெளிவந்த  தமிழ் இந்து நாளிதழின்   தலையங்கப் பகுதியில்

"வக்ஃபு திருத்த மசோதா:

நகர்வுகள் ஆக்கபூர்வமாக இருக்கட்டும்!" என்று கருத்து தெரிவித்துள்ளது‌.


அந்த தலையங்கத்தில்,


"இந்தியாவில் 32 வக்ஃபு வாரியங்கள் இயங்கி வருகின்றன.


வக்ஃபு வாரியங்கள் தற்போது நாடு முழுவதும் 9.4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 8.7 லட்சம் அசையா சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. 


இவற்றின் மொத்த மதிப்பு ஏறத்தாழ ரூ.1.2 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன்  இந்திய ராணுவம், 'இந்திய ரயில்வேயிற்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உரிமையாளர் வக்ஃபு வாரியம்தான்." என்கிறது.


இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 9 லட்சம் ஏக்கர் நிலம் வக்ஃபு என்ற முஸ்லிம்கள் கையில் உள்ளது, அது இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு துறைகளான ராணுவம் மற்றும் ரயில்வே துறைக்கு அடுத்த நிலையில் வக்ஃபு வாரியத்தின் சொத்துகள் உள்ளதாக பிஜேபி அரசு சொன்னதை அப்படியே வாந்தி எடுத்துள்ளது 'தமிழ் இந்து'. 


ஒரு அமைப்பிடம் ஒன்பது லட்சம் ஏக்கர் நிலமா? அதுவும் முஸ்லிம்களிடம் அவ்வளவு நிலமா?

என்ற கருத்துருவாக்கத்தை பிஜேபி திணிக்க  நினைத்து அதைச் சரியாக சாதித்தும்  விட்டது.


ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதும் போது குறைந்த பட்ச நேர்மை அல்லது குறைந்த பட்ச பொது அறிவை பயன்படுத்தி  எழுத வேண்டாமா?


இந்தியா முழுக்க முஸ்லிம் அமைப்பிடம் ஒன்பது லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது  "சரி" இந்து கோவில் அமைப்பில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்ற கேள்வி எழவேண்டும் அல்லவா?


ஆமைக்கும் முயலுக்கும் ஓட்டப் பந்தயம் வைப்பதுபோல் ராணுவத்துடன் ஏன் வக்ஃபு சொத்தை ஒப்பிடனும்?  மசூதி  சொத்துடன் 

கோவில் சொத்துகளை ஒப்பிட்டால் என்ன?


மொத்த இந்திய மக்கள் தொகையில் அய்ந்து சதவீத மக்கள் மட்டுமே வசிக்கும் மாநிலமான தமிழ்நாட்டில் 

இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஆதீனங்களிடம் மட்டுமே 

அய்ந்து லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது.

அத்துடன் இந்து கோவில் பெயரில், 

பூசைகள் பெயரில், ஆயிரக்கணக்கான அறக்கட்டளைகள் உள்ளன. அதில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. அத்துடன் சங்கர மடம் மற்றும்  ஜக்கி போன்ற சாமியார்களிடம் உள்ள

 சொத்துகள் என  கணக்கு வழக்கே இல்லாத அளவுக்கு சொத்துகள் சிதறி உள்ளது.


ஒட்டுமொத்த இந்தியா முழுக்க உள்ள முஸ்லிம் வாரியத்தில் ஒன்பது லட்சம் ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்கள் என்றால்  இந்து மதத்தின் பெயரில் தமிழகத்தில் மட்டுமே 6 - லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது, இதுவே இந்தியா முழுக்க என்றால் அது 50 லட்சம் ஏக்கரா?  ஒரு கோடி ஏக்கரா?  என்று கணக்கே கிடையாது?


அதுவும் 32 - வக்ஃபு வாரியம்  உள்ளது எனச் சொல்லிவிட்டு அதை அனைத்தயும் ஒரே மதம் முஸ்லிம், ஒரு வாரியம் வக்ஃபு  என்று  ஒரே குடையின் கீழ்க் கொண்டு வந்து ஒன்பது லட்சம் ஏக்கர் என்று சொல்கிறார்கள். 


அப்படி என்றால், இந்து மதக் கோவில் சொத்து மதிப்பை எப்படி கணக்கு செய்ய வேண்டும்?


அடுத்து, ஒட்டுமொத்த வக்ஃபு வாரியத்தின் சொத்து மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்.


இந்தியா முழுக்க உள்ள ஒரு அமைப்பு மிகப்பெரிய சொத்து என்று பார்க்கப்படுகிறது.  ஆனால் எதார்த்தம் என்னவென்றால் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி - இன் மதிப்பு நாற்பது லட்சம் கோடியைத் தாண்டும். அதாவது, வக்ஃபு வாரியத்தின் மொத்த மதிப்பை விட 35 மடங்கு பெரியது. அதுவும் கடந்த சில வாரங்களில் பங்குச் சந்தையின்மூலம் எல்.ஐ.சி க்கு ஒன்றரை லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

அதாவது வக்ஃபு வாரியத்தின் மொத்த சொத்தைவிட இந்த இழப்பு அதிகம்.

அதேபோல் எல்.ஐ.சியை விட எஸ்.பி.ஐ வங்கியின் சொத்து மதிப்பு அதிகம். 


ஆனால் ராணுவம் மற்றும் ரயில்வே துறைக்கு அடுத்து வக்ஃபு வாரியம் மிகப்பெரியது என்று கட்டமைக்கிறார்கள் ஆனால் மோடி ஆட்சிக்கு வந்து கடந்த 11 ஆண்டுகளில் நஷ்டத்தை மட்டுமே சந்திக்கும் நிறுவனமான பிஎஸ்என்எல் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி அது வக்ஃபு வாரியத்தைவிட மிகப் பெரிய நிறுவனம்.


பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்துகள் அனைத்துமே இந்தியா முழுக்க உள்ள நகரங்கள் மற்றும்  பெருநகரங்களில் முக்கியமான இடத்தில் இருக்கும். அதன்  சொத்துகள்  வக்ஃபை  விட பல மடங்கு மதிப்பு அதிகம்.


வக்ஃபு சொத்தை விட பல மடங்கு அதிகம் உள்ள எத்தனையோ நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் உள்ளது, ஆனால், திட்டமிட்டு 

முஸ்லிம்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்று கட்டமைத்து உள்ளார்கள். 


வக்ஃபு சொத்தில் பிரச்சினை உள்ளது அதைத்  தீர்க்க திருத்தம் தேவைதானே என்று கேட்டால் ஆம் தேவைதான் ஆனால் திருத்துவது யார்? என்ற கேள்வியும் வருகிறது.


வக்ஃபு சொத்தை ஆக்கிரமிப்பதின் மூலமாகத்தான் இந்துத்துவாவின் அரசியலே இயங்குகிறது, பிஜேபி இன்றைக்கு ஆட்சியில் இருப்பதற்கு காரணமே வக்ஃபு நிலத்தை வைத்து தான் அவர்கள் எதிர்ப்பு அரசியலை செய்கிறார்கள். 


எடுத்துக்காட்டாக கர்நாடகாவில் பாபு டன்கிரி மலையில் உள்ள தர்காவை இந்துக் கோவில் என கட்டமைத்து எதிர்த்துதான் இன்று கர்நாடகா முழுக்க பரவி உள்ளார்கள். 


தமிழ்நாட்டிலும் திருப்பரங்குன்றம் விடயத்திலும் இதே நிலைதான்.

முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவாவிற்கு ஆதரவாக இயங்கும் போது எல்லா மட்டத்திலும் இயங்குகிறார்கள். எடுத்துக்காட்டாக திருப்பரங்குன்றம் தர்கா பிரச்சினை முதல் முதலில் தொடங்கி வைத்தவர்  தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின்  இணை ஆணையர், அவர்தான் அங்கு ஆடு,கோழி பலி கொடுக்கக் கூடாது என்று தடை உத்தரவுவைப் போட்டார். 


எப்படி நீங்கள்  தடை உத்தரவு போடலாம் எனக் கேட்கவேண்டிய வட்டாட்சியர் நீதிமன்றத்தில் போய் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று தப்பிவிட்டார்,  ஆணையர் உத்தரவு போட்ட உடனே காவல்துறை எந்தக் கேள்வியும் கேட்காமல் 

தன் கடமையை சரியாகச் செய்கிறது!


இந்த மூன்று துறை  அதிகாரிகளும் செய்த தவறை கண்டிக்க வேண்டிய நீதிமன்றமோ “போராட்டம் நடத்துவது  ஜனநாயக நாட்டின் உரிமை” என்று  ஒரு தலைப்பட்சமாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதியும்  கொடுத்து. 


 வக்ஃபு நிலத்தை வைத்து  இந்துத்துவா அரசியல் செய்கிறார்களே? அதற்கு அரசு அதிகாரிகள் துணை நிற்கிறார்களே?   மாநில அரசு அதிகாரிகள் ஏன் இப்படி செய்கிறார்கள் எனக் கேள்வி கேட்க வேண்டிய மாநில வக்ஃபு வாரியத் தலைவர் ‘நவாஸ்கனி’  பிரியாணி பஞ்சாயத்தில் ஏலக்காய் போல் 

ஒதுங்கி நிற்கிறார்.



கிட்டத்தட்ட திருப்பரங்குன்றத்தில்  நடக்கும் பிரச்சினை போலத்தான் இந்தியா முழுக்க உள்ள வக்ஃபு நிலங்களிலும் பிரச்சினைகள் உள்ளது. அதைத்  தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப் போவதாக வரப்போகும் வக்ஃபு திருத்த மசோதா சொல்கிறது. 

அதாவது,  சீமான் - விஜயலட்சுமி பிரச்சனையில் முடிவெடிக்கும் அதிகாரத்தை சீமானிடம் ஒப்படைப்பது எப்படியோ அது போன்றுதான் இன்றைக்கு வக்ஃபு திருத்தச் சட்டம் வர உள்ளது‌.”



ஒன்றிய அரசுக்கு சம்பந்தமே இல்லாத தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கூட  இந்துத்துவா அரசியலுக்கு இணங்கி செயலாற்றுகிறார்கள். அப்படி இருக்கும் போது ஒன்றிய அரசின் நேரடிப் பணியில் வேலை பார்க்கும் ஆட்சியர்களிடம் எப்படி முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும்?



கடந்த 11 ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு  ஒரு ஆக்கபூர்வமான  செயல்கூட நடந்ததில்லை அத்துடன் முஸ்லிம்கள் நிலை என்பது ஒரு அறிவிக்கப்படாத

'எமர்ஜென்சி' காலகட்டத்தில் வாழ்வது போல் வாழ்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.


 வக்ஃபு திருத்த மசோதாவைப் பற்றி ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வருகின்றது. அந்தச் செய்திகளைப் படிக்கும்போது  கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதை 

நினைவுக்கு வருகிறது.



ஆறறிவு உயிர்களின்

கானகத்தில்.

நாட்டாமை செய்ய 

நரிகள் வந்துச்சாம்.

மான்கள் ஓடக் கூடாது

சேவல்கள் பறக்கக்கூடாது

நம்பிக்கை வைக்கனும்.

நாட்டாமை ஆட்சியில் 

அன்பும் அகிம்சையுமே

நரிகளின் சட்டமாம்.  

கிட்டத்தட்ட இந்தக் கவிதையில் வரும் மான்கள், சேவல்கள் போலத்தான் முஸ்லிம்களை ஊடகவாதிகள்  நம்பச் சொல்கிறார்கள்‌. அல்லது, நம்பிக்கை வைக்கச் சொல்கிறார்கள்.


தமிழ் இந்து போன்ற அறமற்ற நாளிதழ்கள் வக்ஃபு பிரச்சினையில் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும் என்று கருத்து சொல்வது கிட்டத்தட்ட ‘முதலை கண்ணீர்’ போல தானே...


1 تعليقات

  1. உண்மை தான். இசுலாமிய மக்கள் மீதான இந்தத் தாக்குதைலை பொதுச் சமூகம் அனுமதிக்கக் கூடாது

    ردحذف

إرسال تعليق

أحدث أقدم