சமீபத்தில் இணையத்தில் கருத்து தெரிவித்த சாரு நிவேதிதா, வாழை திரைப்படத்தை ஒரு ஆபாசப்படம் என்று தெரிவித்தார். அவரை எழுத்தாளர் என்று எழுதக்கூட மனம் ஒப்பவில்லை.
டுகோபர் (Doukhobors) மக்கள் ரஷ்யாவில் வாழ முடியாத சூழல் ஏற்பட்ட போது, அந்த மக்கள் ரஷ்யாவில் இருந்து கனடா செல்ல தனிமனிதனாய்ப் போராடிய, "புத்துயிர்ப்பு" என்ற நாவல் மூலம் கிடைத்த அனைத்து பணத்தையும் அந்த மக்களின் பயணச் செலவிற்காகப் பயன்படுத்திய லியோ டால்ஸ்டாயை எழுத்தாளர் என்று சொல்லலாம். சமூகத்தில் தொடர்ந்து விளிம்புநிலை மக்களைத் தனது எழுத்தில் பதிவுசெய்யும் எஸ். ராமகிருஷ்ணனை எழுத்தாளர் என்று சொல்லலாம்.
சாரு நிவேதிதா போன்றவர்கள் சொகுசு அறையில் அமர்ந்துகொண்டு பேனாவை வைத்துக் கிறுக்குபவர்கள் அவ்வளவே (வாழை திரைப்படத்தை ஒரு ஆபாசப்படம் என்று கருத்து சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு என்றால், அந்தக் கருத்திற்குக் கருத்து சொல்லும் உரிமை எனக்கும் உண்டு தானே சாரே!!).
வன்மத்தை மட்டுமே கக்கும் அவரது உளறல்களின் சில துளிகள்.
ஒரு பள்ளியில் உள்ள பத்து வயது மாணவனையும் அவனது ஆசிரியையும் குறிப்பிட, பலர் முன்னிலையில் தாய்லாந்தில் எந்த வஸ்திரமும் இன்றி உடலுறவு கொள்ளும் லைவ் ஷோவ்வோடு ஒப்பீடு. ஆஹா என்ன ஓர் ஒப்பீடு!! அந்த மாணவன் அந்த ஆசிரியையின் அழகை பற்றிக்கூறும் போதுகூட, “நேற்றுவரை எனது அம்மாவைப் போல அழகாக இருந்தீர்கள். இப்ப எங்க அக்காவைப் போல அழகாக இருக்கின்றீர்கள்” என்று தனது தாயோடும், அக்காவோடும் தான் ஒப்பீடு செய்வான். இதெற்கெல்லாம் அர்த்தம் தெரியுமா, சாரு? வார்த்தைகளில் வன்மம் என்றால், மூளை முழுவதும் வன்மம் தானே! நீங்கள் வன்மம் நிறைந்த மனிதரா அல்லது வன்மம் மட்டுமே நிறைந்த மனிதரா?
திரைப்படத்தில் இலைமறை காயாகக் காட்டியள்ளதாக ஓர் ஒப்பாரி வேறு. சாரு, இருப்பதை இருப்பதாகக் காட்டலாம்: இல்லாததை இல்லை என்று காட்டலாம். இல்லாததை இருப்பதாகக் காட்டச் சொல்லும் உன் வன்மத்திற்குக் காரணம் என்ன? ஆசிரியையுடன் காதலே இல்லாத போது, காதலைக் காட்டவில்லை. காமத்தைக் காட்டவில்லை என்று சொல்லும் நீ தான் ஆபாசமானவன்.
இடையில், நான் ஜெயகாந்தன் போன்றவன் என்று சம்பந்தமில்லாத வரிகளும் உண்டு. அது எழுத்து பிழையாகக்கூட இருக்கலாம். நீ ஒப்பிடவேண்டியது ஜெயகாந்தனோடு அல்ல; ஜெயமோகனோடு.
சாருவை விமர்சித்தால், அது மானுட சமூகத்தின் ஒட்டு மொத்தப் பாசிசதாக்குதலாம்.
சாருவின் கருத்தை மட்டுமே எதிர்க்கிறேன். உன் கருத்து -மானுட சமூகம் அல்ல. கருத்தை, கருத்தால் எதிர்கொள்வது - பாசிச தாக்குதலும் அல்ல. ஆனால் நீ செய்வது என்ன? நீ மாரி செல்வராஜின் படைப்பை விமர்சிப்பதைப்போல, அவரை, அவரது எண்ணத்தை, அவரது ஆளுமையை விமர்சிக்கின்றாய். நீ செய்வது தான் பாசிச தாக்குதல்.
கீழ் வெண்மணி படுகொலை பற்றி, மாரி செல்வராஜ் ஏன் திரைப்படம் எடுக்கவில்லை என்று அடுத்த கூப்பாடு. மாரி எதை படமாக எடுக்கவேண்டும் என்று அவர் முடிவு செய்வார். நீ ஏன் கீழ் வெண்மணி படுகொலைப்பற்றி கவிதை எழுதவில்லை? மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் குறித்து நாவல் எழுதவில்லை? கோவில் கருவறையில் சீரழிக்கப்பட்ட குழந்தை குறித்து ஏன் நாடகம் எழுதவில்லை? மாரி எடுத்ததே நான்கு திரைப்படங்கள்தான். இனி எடுக்கமாட்டார் என முடிவு செய்ய நீ யார்?
இவை அனைத்தையும் விட மிக மிக முக்கியமானது, அழுகையை மாரி காசாகமாற்றுகின்றார் என்று. ஏழு கோடியில் எடுத்த இந்தத் திரைப்படம் எழுபது கோடி எடுத்திருக்கிறது என்று புலம்பல் சாருவிற்கு அதிகம். அதன் உச்சம் என்னவென்று தெரியுமா? அம்பானியால் கூட இப்படிப் பத்து நாட்களில் சம்பாதிக்கமுடியாது என்று அடுத்த கண்டுபிடிப்பு. மாரி செல்வராஜுடன் அம்பானி! என்ன ஒப்பீடு!! என்ன ஒரு மூளை? எப்படி சாரு உங்களுக்கு மட்டுமே இப்படி ஒரு மூளை? அப்படி என்றால் சாரு பண விஷயத்தில் எப்படி என்று பார்த்து விடுவோமா? அவரது இணையதள பக்கத்தில் முதல் வரி என்ன தெரியுமா - "மாதாந்திர சந்தா அல்லது குறைந்தபட்ச நன்கொடை ரூபாய் 300 என்று நிர்ணயித்து இருக்கின்றோம்”. மாதம் 300 பேராவது இந்தத் தொகையை அனுப்பினால், ரூபாய் 90000 கிடைக்குமல்லவா, அது அவருக்கு வெறும் மதிப்பிற்குரிய தொகையாம். ரூபாய் 90000 பெரும் தொகை அல்லவாம்; வெறும் மதிற்பிற்குரிய தொகையாம். அந்தப் பணத்திற்குரிய ஞானத்தை நமக்குத் தருகின்றாராம். கல்வி அறிவு வேறு; ஞானம் வேறு என்று பெரியார் சும்மாவா சொன்னார். உன் கிறுக்கல்கள் மூலம் நீ சம்பாதிக்கும் போது, மாரியின் வருமானம் உன் கண்ணை உறுத்துவது ஏன்?
வாழை திரைப்படத்திற்கு முன்பு தமிழில் மட்டும் 143 திரைப்படங்கள் இந்த ஆண்டில் வந்து இருக்கின்றது. அதில் ஒரு படம் கூட ஆபாசமாகத் தெரியாத சாருவிற்கு, மாரியின் படம் ஆபாசமாகத் தெரிகிறது என்றால், அதற்கு மாரியின் மீது கொண்ட சாதிய வன்மம் மட்டுமே காரணமாகத் தெரிகின்றது. என்ன சரி தானே, சாரே!! ஆனால் இது சாருவிற்குத் தெரியாது. ஏன் என்றால், அந்த சாதிய சாக்கடைக்குள் உள்ள உங்களால் எப்படி அதை உணர முடியும்? சற்று வெளியே வாருங்கள். உங்கள் மீது உள்ள அழுக்கை சுத்தம் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், மற்ற படம் வந்தபொழுது எப்படி வாயை மூடிக்கொண்டு இருந்தீர்களோ, அப்படியே இருக்கலாமே!! இத்தனை விளக்கம் எதற்கு உனக்கு, சாரு? பெரியாரின் வரிகளை கேள் - சாதி மனிதனை சாக்கடையாக்கும்.
إرسال تعليق