பெண்கள் போற்றும் பெரியார்

 பெண்கள் போற்றும் பெரியார்

  வி.பா.தமிழ் பொன்னி

 

 



2020இல் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பணிபுரியும் முனைவர் அலிஸ் எவன்ஸ் என்ற ஆய்வாளர் ஒரு சுவையான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். தென் இந்தியா வட இந்தியாவை விட பண்பாடு, மொழி, சமூக-பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் முற்றிலும் வேறுபட்டிருப்பதாகவும், பாலினம் சார்ந்த முன்னேற்றம் இந்தியாவில் பகுதிக்கு பகுதி பெரிதும் மாறுபட்டு இருப்பதையும் அதில் விளக்கியிருந்தார். முக்கியமாக, தென் இந்தியாவில் பெண்களுக்கு  வேலைவாய்ப்புகள், சுய அதிகாரம், கல்வி மற்றும் சுதந்திரமாக இயங்குதல் ஆகியன  வட இந்தியப் பெண்களுக்கு இருப்பதைவிட அதிகமாக இருக்கிறது என்று பல தரவுகளின் அடிப்படையில் நிரூபித்தார்

 

இந்த வேறுபாடுகளுக்கு முக்கிய காரணம் அந்தப் பெண்களின் குடும்ப வசதி அல்ல. மாறாக சமுதாயத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பாலினம் சார்ந்த விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவையே என்ற முக்கியத் தகவலைக் கூறினார். அதாவது ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் கிடைக்கும் உரிமைகளையும், சலுகைகளையும் பொறுத்தே இந்த வேறுபாடு உருவாகிறது என்கிறது அந்த ஆய்வின் முடிவுகள். இது எளிதாகக் கடந்து செல்லக்கூடிய செய்தி  அல்ல.

 

பெண்களை தெய்வத்திற்குச் சமமாக பார்க்கும் ஆண்கள் நிறைந்த இந்தியா போன்ற ஒரு துணைக் கண்டத்தில் பெண்கள் பாதுகாப்பும் முன்னேற்றமும் இன்னும் ஒரு முழுமையடையாத கனவாகவே இருக்கின்றன. காலப்போக்கில்  பெண்கள் நலனுக்காக நிறைய சமுதாய மாற்றங்களும் வாய்ப்புகளும் அவர்களைத் தேடி வந்தாலும் கூட, பெண்கள்  பல துறைகளில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் கூட, முன்பு மறுக்கப்பட்ட உரிமைகள் இப்போது அவர்களுக்கு வழங்கப்பட்டாலும் கூட அவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கே பல போராட்டங்கள்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

 

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பெண்கள் முன்னேற்றத்தில் நம் மாநிலம் எந்த அளவு நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது என்பதை  Oxfam India என்ற  நிறுவனம் வெளியிட்டுள்ள பின்வரும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இந்த மாற்றமும் முன்னேற்றமும் பல ஆண்டுகால சமூக நீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி ஆகும். இந்தப் போராட்டங்களைச் சட்டபூர்வமாகவும், நேரடியாகவும்  இன்றளவும்  தொடர்ந்து  நடத்திக்கொண்டிருக்கும்  சுய மரியாதை இயக்கங்களின் பங்களிப்பை எளிதில் மறந்து விட முடியாது.

 

1920களில் தமிழ்நாட்டில் வெடித்த சிந்தனைப் புரட்சியின் விளைவாய் திராவிட இயக்கம், மகளிர் மேம்பாட்டுக்கு ஒரு விதை போட்டது. பெண்களுக்கு வாக்குரிமை வழங்குதல், தேவதாசி முறை ஒழிப்பு மற்றும் செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் ஆகிய மூன்றும் பெண்ணடிமைத்தனம் எனும் சனாதனத்தின் ஆணிவேரை ஆட்டிப்பார்த்தன. அடித்து நொறுக்கின.


உலகெங்கும் உள்ள பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும் அறிந்து கொண்டு, நமது சமுதாயத்தில் அண்டிக் கிடந்த அடிமை விலங்கை உடைத்தெறியநன்மை விளைவிக்கும் பல சிந்தனைகளை நம் மக்களிடையே பரப்பினார் ஒரு மாமனிதர். பழமைவாதத்தை எதிர்த்து அவரது பேனாவும் பேச்சுகளும் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பின. சுயமரியாதை என்னும் புரட்சித் தீயை ஒவ்வொரு தமிழருள்ளும் பற்ற வைத்தன

 

ஒவ்வொரு பெண்ணும் தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதி பெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும் என்றார். பெண்களுக்கு படிப்பு, சொத்துரிமை ஆகியவை இருந்துவிட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்றமடைந்து விடும் என்று கணித்தார்.

 

1929இல் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, குழந்தைத் திருமண ஒழிப்பு, கைம்பெண்கள் மறுமணம், சாதி மறுப்புத் திருமணம், வேலை வாய்ப்பு, திருமண வயதை அதிகரிப்பது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் அந்தச் சிந்தனையாளரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டன.

 

வெற்றுத் தீர்மானங்களாக நின்றுவிடாமல் அவர் வளர்த்த இயக்கத்தில் பயின்று, அவரின் கொள்கைகளை எத்தனை ஆண்டுகள் ஆயினும் பல போராட்டங்களைத் தாண்டி வெற்றிகரமாகச்  செயல்படுத்துவதற்கென பல திராவிடப் பெருந் தலைவர்களை உருவாக்கினார். தலைவர் என்றால் ஆண்கள் மட்டும் என்ற எண்ணத்தை விடுங்கள்.  மூவலூர் ராமாமிர்த அம்மையார், தர்மாம்பாள், நாகம்மையார், கண்ணம்மா, மணியம்மையார் போன்ற மாபெரும் பெண் சமூகப் போராளிகள் உருவாக பெரியார் களம் அமைத்துக் கொடுத்தார். இதன் மூலம் பகுத்தறிவு, சுயமரியாதைச் சிந்தனைகளை, தலைமுறைகள் தாண்டி நிலைநிறுத்தினார். சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் போற்றப்படும் ஒரு தலைவராக இன்றும் விளங்குகிறார்.

 

அவர்தான் இன்று பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடரொளி, திராவிட இயக்கத்தின் தந்தை என இந்த மண்ணின் மாந்தர்களால் அன்போடு அழைக்கப்படும் தந்தை பெரியார்.

 

கற்புஎன்ற சொல்லால் பெண்களை இன்றும் அடிமைப்படுத்தத் துடிக்கின்றனர், சமுதாயத்தின் ஒரு பகுதியினர். நூல் அணிந்த சிலர், மநுசாஸ்திரம் எனும் நூல் படித்த விளைவால் சாத்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்களின் அடிப்படையில், சாதிப் பிரிவினைகளை உண்டாக்கினர்.

 

பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சித்தரித்தும், அவரின் சாதனைகளுக்கு அடையாளச் சின்னங்களாக விளங்கும் அவரது சிலைகளை சிதைத்தும், அவர் மீது வன்மம் நிறைந்த தனிமனிதத் தாக்குதல்களையும் பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர், நஞ்சினும் கொடிய அந்த ஆரியக் கயவர்கள். இந்த வித்தைகளையெல்லாம் பார்த்து ரசிக்க, சிரிக்க இன்று பெரியார் நம்மிடையே இல்லையென்றாலும், அவர் விதைத்துவிட்டுச் சென்ற சிந்தனைகள் நம் ஒவ்வொருவரின் மனத்திலும் இன்று விருட்சமாக வளர்ந்து, விஷமிகளின் வீண் பிரச்சாரங்களுக்கு வீழ்ந்துவிடாமல், “மானத்தோடும் அறிவோடும்நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறன.  

 

ஒரு பெண் துணிச்சலுடன் பேசினால், காதலித்தால், தனக்குப் பிடித்த உடைகள் அணிந்தால், பல எதிர்ப்புகளைத் தாண்டி சுயமரியாதைத் திருமணமோ, சாதி மறுப்புத் திருமணமோ, மறுமணமோ செய்து கொண்டால், விருப்பமில்லாத திருமணத்தில் இருந்து விலகிச் சென்றால், அவளை உடனே சனாதனிகள்பாருங்கள் பெரியார் பெயர்த்தியை!” என்று கூறி சிலாகிக்கின்றனர். ஆனால் பெண்களோ தங்கள் விடுதலைக்காகப் போராடிய ஒரு சீர்திருத்தவாதியின் பெயர்த்தியாக இருப்பதே பெருமைதானே என்று அந்த அங்கீகாரத்தைப் பெருமையுடன் ஏற்றுக்கொள்கின்றனர்.

 

இந்நாட்டில் பெண்கள் சுதந்திரக் காற்றை முழுவதுமாக சுவாசிக்க இன்றளவும் நிறைய போராடவேண்டி இருந்தாலும் கூட, அந்த போராட்டத்திற்கு நம்மையெல்லாம் தயார்ப் படுத்தி விட்டு சென்றிருக்கிறார் அந்தத் தடி பிடித்த வெண்தாடி வேந்தர். அதனால்தான் அவர் அன்றும் இன்றும் என்றென்றும் பெண்கள் போற்றும்பெரியார்”!

 

வெங்காயம் செப்டம்பர் 2021


Post a Comment

أحدث أقدم