பெரியாரும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும்



இவ்வுலகில் உயிரினங்கள் தோன்றிய காலம் தொட்டே பரிணாம வளர்ச்சியில், அவை ஒன்றொடு மற்றொன்று தொடர்பு கொள்ள ஒலியைப் பயன்படுத்தியே வருகின்றன. பரிணாம வளர்ச்சியின் உச்சியில் உள்ள மனிதன் மட்டும் இதற்கு விலக்காக முடியுமா?

மனித இனம் தோன்றிய பொழுதின் ஆரம்பத்தில் வெறும் சப்தங்களை வைத்து மட்டுமே தகவல்களைப் பரிமாறிக் கொண்ட மனிதன் காலப்போக்கில் சப்தங்களை வார்த்தைகளாக மாற்ற முயன்றான். பின்பு வார்த்தைகளைக் கோர்த்து வரிகளாக்கித் தகவல்களைப் பரிமாறிக் கொண்டான். இதன் அடுத்த வளர்ச்சியாக, தான் பேசும் வார்த்தைகளின் சப்தங்களை எழுத்துகளாக்கி எழுதி அழகு பார்த்தான். இதன் விளைவாக ஒருவரின் வாழ்நாளோடு மறைந்து போன அவரது அறிவு சார்ந்த கருத்துகள் எழுத்துகளின் வழியே அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு இன்று நம் கைகளில் கிடைக்கப் பெறுகிறது.

உலகம் முழுக்கப் பரந்து விரிந்து வாழும் மனிதர்கள் அவரவர் நிலத்தின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப, அவர்களின் நா சுழற்சிக்கு ஏற்ப, தங்களுக்கான மொழியை உருவாக்கினர். ஒவ்வொரு மொழியும் தனித்துவமான ஓசைகளையும், எழுத்து வடிவங்களையும் கொண்டிருந்தது. எல்லா மொழிகளும் காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றம் அடைந்து கொண்டே வந்து இன்று ஒவ்வொன்றும் பேசும் நிலையை அடைந்துள்ளன.

அப்படி இந்திய நிலப்பரப்பில் தோன்றிய தமிழ் மொழியும் ஆரம்பத்தில் உருவான எழுத்துகளில் இருந்து மாற்றம் பெற்று காலநிலைக்கு ஏற்பத் தன்னை உருமாற்றிக் கொண்டே வந்து கொண்டிருந்தது. இந்திய வரலாற்றின் இடைக்காலத்தில் ஏற்பட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு இந்த நிலத்தில் மாபெரும் இயற்கைக்குப் புறம்பான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. அப்படியான திட்டமிட்ட ஒரு பெரும் மாற்றம் எல்லாவற்றின் மீதும் புனிதத்தன்மை என்னும் முலாம் பூசி மூடி வைக்கும் பழக்கம்.

தமிழ் மொழியின் மீதும் பூசப்பட்ட புனிதத்தன்மையானது, மொழி மாறுதலுக்கு உட்படாது என்றது. எந்தவொரு மொழியும் காலத்தின் தேவைக்கேற்ப, பேசப்படும் பொருளின் தன்மைக்கேற்ப எழுத்துகளையும், வார்த்தைகளையும், ஓசைகளையும் சேர்த்தும், நீக்கியும் மாறுதல் அடைந்து கொண்டே இருக்கும். அப்படி மாறுதலுக்கு உட்படாத மொழி காலப்போக்கில் பின்தங்கி அதன் சிறப்புத் தன்மையை இழந்து, பெருமக்களால் பேசப்படாமல் அழிந்து போவதற்கான அபாயம் இருக்கிறது.

மொழி என்பது ஒரு மனிதன் மற்றொரு மனிதனோடு தன் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள ஒலியால் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட ஒரு பயன்பாட்டுக் கருவி. மனிதன் தனக்கான மொழியைத் தேவை கருதி உபயோகிப்பதைப் போல, பிற உயிரினங்களும் தனக்கான தகவல்களைப் பரிமாறிக் கொள்ள ஒலியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன. ஆக, மொழியைப் புனிதப்படுத்தி அதைப் பரிணாமத்திற்கு உட்படுத்தாமல் இருப்பது மொழியின் வளர்ச்சிக்கு இழைக்கப்படும் அநீதியே ஆகும்.

ஆரம்பம் முதல் ஆங்காங்கே சிறு சிறு மாறுபாடுகளைக் கண்ட தமிழ்மொழி பெரும் சீர்திருத்தத்தைக் கண்டது இருபதாம் நூற்றாண்டில்தான். அதற்கு மிக முக்கிய பங்காற்றியவர் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியார் நாளிதழ்களை நடத்தி வந்தமையால் அவரே சொந்தமாக அச்சகமும் நடத்தி வந்தார். இன்று நாம் கணிப்பொறியில் தட்டச்சு செய்து பிரதி எடுப்பதைப் போல அன்று வசதி இல்லை. ஒவ்வொரு எழுத்தாகக் கோர்த்து அச்சில் வைத்து அதைப் பதிய வைக்க வேண்டும். பின்பு அந்த எழுத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து அந்தந்த இடத்தில் அடுக்கிப் பத்திரப்படுத்த வேண்டும். இதனுடைய பணிச்சுமை என்பது ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஆகவே அதிக எழுத்துகள் இருப்பதால்தான் அச்சில் பிரதியிட அதிக நேரம் பிடிக்கிறது என்பதைப் பெரியார் உணர்ந்து கொண்டார்.

அதைத் தவிர தமிழில் ஒரே மாதிரியான உச்சரிப்புள்ள வெவ்வேறு சொற்களை எழுதும்போது அவற்றின் எழுத்து வடிவில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பெரும் வேறுபாடுகள் இருந்தன.

மேலும் ஆங்கிலம் உட்படப் பல மொழிகளில் குறைவான எழுத்துக்களைக் கொண்டே அதிக அளவிலான வார்த்தைகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழில் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர் மெய்யெழுத்துக்கள் என மொத்தம் 247 எழுத்துகள் இருக்கின்றன. இதனால் தமிழ் மொழியைக் கற்பதற்கும் குழந்தைகளுக்குச் சிரமமாக இருக்கிறது. எனவே தமிழில் உள்ள எழுத்துகளைக் குறைப்பதன் மூலமும் தமிழை எளிமையாக்கி மக்கள் தமிழ் கற்பதில் உள்ள சிக்கலைக் குறைக்க முடியும் என்று முடிவுக்கு வந்தார்.

பெரியார் தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டும் என்று மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வந்தார். இது அப்போது இருந்த தமிழ்ப் பண்டிதர்களிடையே கோபத்தை உருவாக்கியது. "தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்ய பெரியார் என்ன தமிழ் அறிஞரா?" என்பன போன்ற கேள்விகளெல்லாம் பெரியாரை நோக்கிக் கேட்கப்பட்டன. இது போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் பகுத்தறிவின் வழியே, தான் சிந்தித்த பதிலைத் தெளிவாகப் புரியும்படி பெரியாரும் மக்களிடம் வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்.

“தமிழ்பாஷை எழுத்துக்கள் வெகு காலமாகவே எவ்வித மாறுதல்களும் இல்லாமல் இருந்து வருகின்றன. உலகில் உள்ள பாஷைகள் பெரிதும் சப்தம், குறி, வடிவம், எழுத்துகள் குறைப்பு, அவசியமான எழுத்துகள் சேர்ப்பு ஆகிய காரியங்களால் மாறுதல் அடைந்து கொண்டே வருகின்றன. கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப பாஷைகளும், சப்தங்களும், உச்சரிப்புகளும், வடிவங்களும் மாறுவது இயல்பேயாகும்” (பகுத்தறிவு, 30.12.1934).

தொடர்ந்து பல்வேறு தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சிகளைப் படித்தும் அதை நடுநிலைத் தன்மையோடு சிந்தித்தும் வந்த பெரியார் தமிழில் தான் மேற்கொள்ளவிருக்கும் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவித்தார்.

“இப்போது ணா, றா, னா ஆகிய எழுத்துகளும் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளும் மற்ற கா, நா, ரா முதலாகிய எழுத்துகளைப் போலும் டை, நை ழை முதலிய எழுத்துக்களைப் போலும் ஆகாரத்துக்கு 'ா' குறியையும் அய்காரத்துக்கு 'ை' குறியையும் பெறாமல் தனி வடிவத்தைக் கொண்டு இருப்பதை மாற்றி ணா, றா, னா, ணை, லை, ளை, னை போல உபயோகித்துப் பிரசுரிக்கலாம் என்று கருதியிருக்கின்றோம். இதன் பயனாய் அச்சுக் கோர்ப்பதற்கு எழுத்து கேசுகளில் (அறைகளில்) 7 கேசுகள் (அறைகள்) குறைகின்றது என்பதோடு பிள்ளைகளுக்கும் இந்த ஏழு எழுத்துக்கள் தனி வடிவம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் சவுகரியம் ஏற்படுகின்றது (பகுத்தறிவு, 30.12.1934).

இதன் பிறகு தமிழகத்தில் வெளியான பகுத்தறிவு, புரட்சி, குடிஅரசு, விடுதலை ஆகிய முற்போக்குப் பத்திரிகைகள் பெரியார் முன்மொழிந்த இந்த எழுத்துச் சீர்திருத்தத்தைப் பின்பற்றியே தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்தன.

1977-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் பெரியார் முன்மொழிந்த எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

1978-இல் பெரியார் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பெரியார் நூற்றாண்டு விழாக் குழுவினர் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டதின் பேரில் அப்போதைய தமிழக அரசின் முதல்வர் எம்ஜிஆர், பெரியார் முன்மொழிந்த எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும் பெரியார் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பரிந்துரைத்தார்.

[ சீர்திருத்திய தமிழ் எழுத்து வடிவங்கள் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், உள்ளாட்சித்துறை வரம்பிற்குட்பட்ட நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களிலும், தமிழக அரசின் வாரியங்கள், கழகங்கள், நிறுவனங்களிலும் பின்பற்ற வேண்டும்.

தமிழ் மொழியில் வெளிவரும் நாளிதழ்களும், பருவ ஏடுகளும், தமிழ்ப் புத்தகம் வெளியிடுவோரும், அச்சிடுவோரும் சீர்திருத்திய தமிழ் எழுத்து வடிவங்களைக் கையாள வேண்டுமென அரசு பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசு வெளியீடுகளிலும், அரசிதழ்களிலும் மற்றும் தமிழில் அச்சிடப்படும் எல்லா இடங்களிலும் சீர்திருத்திய எழுத்து வடிவங்கள் கையாளப்படும். (தமிழ்நாடு அரசாணை நிலை எண்.1875, நாள்: 19-10-1978) ]

இதன்படி பெரியார் முன்மொழிந்த பதினைந்து எழுத்துச் சீர்திருத்தங்களில் பதின்மூன்று எழுத்துச் சீர்திருத்தங்கள் ஏற்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ் மொழி வளர்ச்சியில் எழுத்துச் சீர்திருத்தத்திற்கான பெரியாரின் இந்தத் தொடர் முயற்சியினால் விளைந்த நன்மை இன்று அனைவரும் எளிதாய்த் தமிழைப் பயில முடிகிறது, தட்டச்சு செய்ய முடிகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இருபத்தியோரோம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே உலகம் முழுவதும் கணிப்பொறிகளும், கைப்பேசிகளும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. அனைவரின் கைகளுக்குள்ளும் அடங்கிப் போன கைபேசிகளின் வழியே இன்று உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் நபரும் யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக தான் பகிர வேண்டிய செய்தியை தட்டச்சு செய்து உடனடியாக பகிர முடிகிறது.

தொழில்நுட்பத்தின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியோடு சேர்த்து தமிழ் மொழியும் வளர வேண்டும். பெரியார் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தத்தைப் போல இன்றும், இனி வருங்காலங்களிலும் மொழி அறிஞர்கள் கூடி கூட்டுவன கூட்டி, கழிப்பன கழித்து தமிழ் மொழியை மேலும் எளிமைப்படுத்தி இவ்வுலகிற்கு நல்கிடவும் வேண்டும். பிறமொழிகளைப் போல் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நிதி ஒதுக்கி இந்தியாவின் தொன்மையான, செழுமைமிக்க செம்மொழியான தமிழைக் காக்க உறுதுணையாய் இருக்க வேண்டும்.

 

-அரசு மருத்துவர்

சுரேஷ் குமார்



Post a Comment

أحدث أقدم