நாட்டையே பாசிச இருள் சூழ்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் (2021) மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருக்கும் வெற்றி என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் கொஞ்சம் ஆசுவாசமும் , பொதுவாக நாட்டு மக்களுக்கு இந்த பாசிஸ்டுகளை வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சி, இது பெரியார் மண் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
இவ்வாட்சிக்கு உறுதுணையாக இருப்பதும், வழக்கம்போல பார்ப்பனிய ஊடகங்கள் கட்டமைக்கும் திமுக / திராவிட எதிர்ப்பு கருத்தாக்கங்களை உடைப்பதும், தேவை ஏற்பட்டால் இடித்துரைப்பதும் ஒவ்வொரு முற்போக்காளரின் கடமையாகும்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு கோடி தொண்டர்களைக் கொண்ட பேரியக்கம்! தமிழகம் முழுவதும் நிர்வாக வலைப்பின்னல்கள் கொண்ட உறுதியான கட்டமைப்பு! ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வேட்கை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் உண்டு. எனவே கட்சிக்குள்ள குறை நிறைகளை சீர்தூக்கிப் பார்த்து , விமர்சனங்களுக்கு செவிகொடுத்து அதனை செப்பணிட்டு வலுப்படுத்த வேண்டிய கட்டாயமும் அதற்கு உண்டு. அவை மேற்கொள்ளப்படும்.
அதே சமயம் அரசியல் மாற்றம் மட்டுமே சமுதாய மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும் என்று பெரியாரிய அம்பேத்கரிய உணர்வுள்ள இளைஞர்கள் இதனுடன் திருப்தி அடைந்துவிடக்கூடாது. சாதி ஒழிப்பு குறித்த தீர்க்கமான செயல்திட்டம், சமூகத்தளத்தில் தொடர் செயல்பாடுகளின் மூலம் மக்களிடம் மனமாற்றம் கொண்டுவர வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பார்ப்பனிய பாஜக ஆட்சி நமக்கு உணர்த்தியிருக்கிறது.
2000 ஆண்டுகாலமாக இம்மண்ணில் பார்ப்பனியம் விதைத்து வேரூன்றியிருக்கிற சாதி அமைப்பை உடைத்தெறியாமல் இங்கு சமத்துவம் சாத்தியமில்லை. சாதி அமைப்பைத் தகர்க்க வலிமை சட்டமன்றங்களுக்கோ, சட்டங்களுக்கோ இல்லை. நாம் போராட வேண்டிய பல்வேறு தளங்களில் அரசியல் தளமும் ஒன்று. அரசியல் தளம் மட்டுமே தீர்வு இல்லை என்பதை உணர்ந்து தான் பெரியார் தீர்க்கமாக இறுதிவரை தேர்தல் அரசியலில் பங்கேற்பதைத் தவிர்த்தார். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார், கோரிக்கைகள் நிறைவேறும் போது பாராட்டினார், தொய்வு ஏற்படும்போது கண்டித்தார். ஆனால் ஒரு போதும் இந்த அன்றாட அதிகார அரசியல் செயல்பாடுகளில் கரைந்து போகவில்லை.
அரசியல் பொருளாதார அதிகாரம் பெறவேண்டும்; அதற்கான போராட்டங்களும் செயல்பாடுகள் ஒருபுறம் இருக்க, பார்ப்பனியம் பெற்றிருக்கிற சமூக அதிகாரத்தை தகர்த்தெறிய வேண்டிய இன்றியமையாமை முழுவதும் உணர்ந்த ஒரே தலைவர் அவர். அதனாலேயே மதம் ஒழியாத வரை, கடவுள் ஒழியாத வரை சாதி ஒழியாது என்ற கருத்தில் உறுதியுடன் இருந்து அதற்காக இறுதி மூச்சு வரை சட்டத்தை மீறி பெரும் கிளர்ச்சி நடத்த வேண்டும், அதற்கு அதிகாரத்தில் நாட்டமில்லாத பெரும்படை வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.
அதன் காரணத்தினாலேயே திமுக தேர்தல் அரசியலில் பங்கெடுக்கத் தொடங்கிய காலகட்டத்தில் பெரியார் மிகக் கடுமையான விமர்சனங்களை, வசவுகளை முன்வைத்தார். நீங்கள் ஒருபோதும் அதிகாரத்திற்கு வர முடியாது என்றார். ஆனால் அண்ணா அதனை பொய்யாக்கினார். சாமானியர்களைக் கொண்டு கட்சி நடத்தி பார்ப்பனியத்தின் அரசியல் சூழ்ச்சியை உடைத்துக் கொண்டு ஆட்சியை பிடித்தார்.
அண்ணாவைத் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த கலைஞர் பெரியாரின் கொள்கைகளைச் சட்டமாக்கியதும் , திராவிடக் கொள்கைகளின் அடித்தளத்தில் தமிழ் நாட்டின் வளர்ச்சியைக் கட்டமைத்ததும் எவரும் மறுக்க முடியாத வரலாறு.
ஆனால் தந்தை பெரியார், அதிகாரத்தை நோக்கி நகரும் எந்த ஒரு அரசியல் கட்சியும் சந்திக்கக்கூடிய மிக அடிப்படையான நடைமுறை சிக்கல்களைப் புரிந்தவர். பார்ப்பனியத்தை எதிர்த்து அரசியல் களத்தில் நிற்கும் கட்சிக்கு அவர்கள் அளவிற்கான பொருளாதாரம் மற்றும் ஊடக பலத்தை பெறுவதற்கு பல்வேறு தரப்பிலும் அனுசரணையாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை பெரியார் தொடர்ந்து சுட்டிக்காட்டியது இன்றும் உண்மை என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
இக்காரணங்களினாலேயே அரசியல் அதிகாரம் என்பது சாதி அமைப்பை ஒழிப்பதற்கு அடித்தளமான பார்ப்பனிய மதம், சாத்திரம், கடவுள் போன்றவற்றை ஒழித்துக் கட்டுகிற அடிப்படைச் சமூகச் செயல்பாட்டை மேற்கொள்ள முடியாது.
பெரியார் கூறுகிறார் 'எதிரியை அடக்கணும்; அவனை ஒழிக்கணும் என்றால் நாம் அவனை வெறுக்கணும்; கூண்டோடு நம்மை ஒழித்தாலும் சரி என்று துணிந்து இறங்கினால் தானே அவன் பயப்படுவான்? பிறகு தானே கொஞ்சம் கொஞ்சமாக வளைவான்?' அவனை வளையச் செய்ய வேண்டும் என்றால் நாம் அவனை முழுவதும் புரிந்து கொண்டு, சமரசமின்றி அம்பலப்படுத்த வேண்டும். அவன் நம் எதிரில் இருந்து செய்யும் மோசடிகளை மட்டும் கவனித்தால் போதாது, நம் முதுகில் பின்னால் நம் வழியில் இருந்தும் கெடுப்பான். ஏனெனில் பெரியார் சொல்வதுபோல பார்ப்பனரும் அவர்தம் அடிமைகளும் தங்களுக்கு காரியம் சாதித்துக் கொள்ள எவரிடமும் நட்புகொள்ள தயங்க மாட்டார்கள்.
நாம் பாரதிய ஜனதாவை மட்டும் பார்த்துவிட்டு, அதுதான் அவர்கள் கட்சி அவர்களை ஒழித்து விட்டால் பார்ப்பனியத்தை வென்று விட்டோம் என்பது அல்ல. பார்ப்பனர்களுக்கு கட்சி என்பதே கிடையாது, யாருடன் இருந்தாலும் அவர்கள் அவர்களது முக்கிய சங்கதியில் ஒற்றுமையாக இருப்பார்கள். அவற்றையும் கருத்தில் கொண்டு இன்றைய சூழலை நாம் மேலும் ஆழமாக நோக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் திராவிடம் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை அணிதிரட்டி பார்ப்பனியத்திற்கு எதிராக நிறுத்தி வென்றது. ஆனால் இன்று வட மாநிலங்களில் இதே சமூக மக்களை பயன்படுத்திக் கொண்டு பார்ப்பனியம் பாஜகவை வெற்றி அடைய செய்தது. தமிழகத்திலும் அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. பிற்படுத்தப்பட்டச் சமூகத்தை சேர்ந்த கவுண்டர், நாடார், தேவர் போன்ற சமூகங்களை தன்வயப்படுத்தும் அதே சமயம் அவர்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டு பல்வேறு வன்கொடுமைகளை அனுபவித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தையும் அரவணைத்து தனது வலைப்பின்னலில் கொண்டுவர முயல்கிறது. அச் சமூகத்தை சேர்ந்த பல செல்வாக்கு மிக்க தலைவர்கள் வலையில் சிக்கியுள்ளனர். பெரும் அபாயம் என்னவென்றால் இச்சமூக மக்களின் உளவியலில் வெறுப்பை விதைக்கும் செயல் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகிறது.
திராவிட இயக்கத்தால் முன்னேற்றமும் பாதுகாப்பும் பெற்றவர்களே நமக்கு எதிராக திரும்பக் கூடிய சூழ்நிலை உருவாகி இருப்பதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? அவர்கள் பார்ப்பனியத்தின் கையில் சிக்குவதற்கு அவர்களின் அறியாமை மட்டும்தான் காரணமா? அல்லது நமது சமூக அளவிலான செயல்பாட்டில் உள்ள சில போதாமைகளும் காரணமா?
இவற்றையெல்லாம் தீர சிந்தித்துப் பார்க்க, அவற்றுக்கு விடை தேடி தொடர் செயல்பாடுகளில் ஈடுபட, அரசியல் வேட்கை அற்ற சனாதன அமைப்பைத் தகர்க்கும் சமூக செயல்பாடு அவசியமாகிறது. இதனை தேர்தல் அரசியலில் ஈடுபடாத பெரியாரிய அம்பேத்கரிய இயக்கம் மட்டுமன்றி, சமூகநீதியை முன்வைக்கும் தேர்தல் அரசியல் கட்சிகளும் கணக்கில் கொள்ள வேண்டும், இல்லையேல் இது பெரும் ஆபத்தில் போய் முடியும்.
அரசியல் கட்சிகளும் துணிந்து அடிப்படையான சமூக மாற்றங்களுக்கான செயல்பாட்டில் இறங்க வேண்டுமானால் சமூக பிரச்சனைகளைப் பேசினால் ஓட்டு விழாது என்ற பார்ப்பனியக் கட்டமைப்பு உருவாக்கிய அச்சம் தகர்க்கப்பட்ட வேண்டும் என்பதே முதல் படி.
அத்தகைய துணிவை பெறுவதற்கான அழுத்தத்தை பெரியாரிய அம்பேத்கரிய திராவிட இயக்க மற்றும் ஏனையோரின் தன்னலமற்ற தொடர் களச் செயல்பாடுகளும் அறிவுச் செயல்பாடுகளும் மட்டுமே உருவாக்கும்.
சுருங்கக் கூறின் சாதி ஒழிந்த சமத்துவ சமூகம் விளைய அரசியல் அதிகாரம் உரமாகுமே தவிர, அதுவே நீர் ஆகிவிடாது.
எனவே, அரசியல் வெற்றியோடு நிறைவடைந்து விடாமல் பெரியார் வழியில் சாதி அமைப்பின் அடிமடியில் கை வைக்கும் அடிப்படைப் பணிகளில் துணிந்து களம் காண்போம்!!!!
إرسال تعليق